Published : 14 Dec 2014 10:35 AM
Last Updated : 14 Dec 2014 10:35 AM

சங்க இலக்கியம் - கடல்விளை அமுதம்

தம் நிலத்தில் விளைந்த பொருள்வழிக் கிடைக்கும் பணத்தில் முதலில் உப்பை வாங்குகின்ற வழக்கம் விவசாயிகளிடம் உண்டு. தமது நெடுநாள் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தின் முதல் செலவு உப்புக்கானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை அவ்வழக்கம் வெளிப்படுத்துகின்றது.

உப்பு தமிழர் வாழ்க்கையில் இன்றியமையா ஒரு உணவுப் பொருளாக இருந்துள்ளது. பொழுது சாய்ந்த பின்னர் உப்பைக் கடனாகக் கேட்கின்ற, கொடுக்கின்ற வழக்கமில்லை என்பதை இன்றைக்கும் கிராமத்தில் காணமுடியும். பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணையாகக் கொடுக்கும் பொருளிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை. மனித வாழ்க்கையின் மையப் பொருளாகக் கருதியதன் காரணத்தால்தான் உப்பைச் சங்கப் புலவர்கள் ‘அமிழ்தம்’ என்று அழைத்து மகிழ்ந்துள்ளனர். நல்லந்துவனார் ‘கடல்விளை அமுதம்’ என்றும், சேந்தன் பூதனார் ‘வெண்கல் அமிழ்தம்’ என்றும் உப்பைப் புகழ்ந்து பாடியுள்ளனர். உப்பை அமிழ்தமாகத் தமிழர்கள் கருதியுள்ளனர்.

திருமணம் செய்துகொள்ளாமல் களவு ஒழுக்கத்தில் பல காலம் ஆடவனொருவன் ஈடுபட்டிருக்கிறான். காதலி வீட்டு வேலி ஓரமாக அந்த ஆடவன் வந்தபொழுது, காதலி படும் துன்பம் அனைத்தும் கேட்டு விரைந்து மணம் முடிக்கத்தக்க வகையில் அவனிடம் பேசலாம் என்று காதலியின் தோழி கூறுவதுபோல அமைந்த பாடல் இது. நல்லந்துவனார் நற்றிணையில் பாடிய பாடல் இது. ‘உப்பு’ ‘கடல்விளை அமுதம்’ என்று அழைத்து மகிழ்ந்துள்ளார் சங்கப் புலவர். அப்பாடலடிகள்:

யாம்செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை

வருந்தல் வாழி தோழி யாம் சென்று

உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்

கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு

உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்

(நற். 88: 1-5)

என வருகின்றன.

‘தோழி! நாம் முன்னர்ச் செய்த வினை காரணமாக நீ துன்பப்படுகிறாய். இதனால் வருந்த வேண்டாம். நாம் படும் துன்பத்தைக் காதலனிடம் சென்று உரைப்போம். என் உடன் வருக. கடலிலே விளைந்த அமுதம் (உப்பு) மழை பெய்வதால் கரைந்து போவதுபோல உள்ளம் உருகி வருந்துகிறாய்’ என்று அந்தத் தோழி சொல்லிச் செல்கிறாள். நெய்தல் நிலத்தில் உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி விளைவித்துக் குவித்து வைத்திருக்கும் உப்புக் குவியலில் மழை பெய்தால் எப்படி கரைந்து உருகுமோ, அப்படி உருகியதாம் தலைவி உள்ளம். உப்பு விளையும் நெய்தல் நிலப் பகுதியில் நல்லந்துவனார் வாழ்ந்திருக்க வேண்டும். உப்புக் குவியல் மழையில் உருகும் காட்சியை காதலி உள்ளம் உருகுதலுக்கு உவமித்திருக்கிறார். உப்பை அமுதம் என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறார்.

களவொழுக்கத்துக்கு இடையூறு உண்டானதைக் கண்ட காதலியொருத்தி சுற்றத்தார் அறியாமல் இரவுப் பொழுதில் தாம் விரும்பும் காதலனுடன் சென்று விடுகிறாள். அவர்கள் சென்ற பாலை நில வழியை நினைத்து வளர்ப்புத் தாய் வருந்திப் புலம்புவதாய் அமைந்த சேந்தன் பூதனார் பாடலொன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பு உரைக்கப்பட்டுள்ளது.

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்

உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்

குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்

படை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்

நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு (அகம். 207: 1-6)

‘கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பதற்காக, வீரம் மிக்க ஆடவர் நல்ல நிமித்தம் பார்ப்பர். அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். மலைச் சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பிறழ்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட கொடுமை யான பாலை நில வழியில் எம் மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன்’ என்று வளர்ப்புத் தாய் புலம்புவதாக நீண்டு செல்லும்.

நெய்தல் நிலப் பகுதியில் விளைந்த உப்பைப் பிற நிலப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாணிபத் தொழில் நடைபெற்றுள்ளதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதிகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த காரணத்தால் பரவலாக உப்பளங்கள் இருந்துள்ளன. உப்பு தமிழர் வாழ்க்கையில் நீண்ட பாரம்பரியம் மிக்கதும், ஆழமானதுமான பண்பாட்டுக் குறியீடு.

- முனைவர் இரா. வெங்கடேசன், தமிழ் ஆய்வாளர், தொடர்புக்கு: iravenkatesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x