Published : 20 Dec 2014 02:43 PM
Last Updated : 20 Dec 2014 02:43 PM

மதுவிலக்கு: இன்னொரு கோணம்

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன.

இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதி யாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு, தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக் குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண் பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் கேள்விக்குள்ளாக்குகிறார்.

பூர்வ காலத்தில் மதுவைத் தொடாமல் இருந்த பௌத்தர்கள் தான் அ-சுரர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும், அந்த பூர்வ பௌத்தர்களே இன்றுள்ள தலித் மக்கள் என்றும் அயோத்திதாசரின் வாதத்தை இந்தக் கட்டுரைகளில் துணை கொள்கிறார் ரவிக்குமார். அந்த அ-சுரர்கள்தான் காலப் போக்கில் மனிதத்தன்மை அற்றவர்களாக, கொடூரமானவர்களாக வைதீகத்தால் மாற்றப் பட்டனர் என்கிறார் அவர்.

கள் விற்கும் கடைகள் சேரிகளுக்குப் பக்கத்தில் இருப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார். தலித் மக்களின் விடுதலை அரசியலுக்கு மதுப்பழக்கம் எவ்வளவு பாதகமாகும், குடிப்பழக்கம் ஒரு தலித்தை உரிமை எதையும் கோர விடாது என்பதையும் சொல்கிறார்.

போதை சாதனங்கள் காலம் காலமாக ஒரு சமூகத்தில் ஏன் ஒரு அங்கமாக இருக்கின்றன? நவீனச்சூழலில் மதுபானங்கள் ஏன் அதிகம் மக்களால் நாடப்படுகின்றன என்ற கேள்வியையும் ஆசிரியர் பரிசீலித்திருக்கலாம். எல்லோரும் படிக்க வேண்டிய அவசியமான சிறுநூல் இது.

- வினு பவித்ரா



அ-சுரர்களின் அரசியல்
தலித்துகளும் மதுவிலக்கும்
ரவிக்குமார், மணற்கேணி,
முதல் தளம், 10/288, டாக்டர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை-05, விலை: ரூ. 30
தொடர்புக்கு: 9443033305

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x