Published : 04 Dec 2014 12:17 PM
Last Updated : 04 Dec 2014 12:17 PM

வீடில்லா புத்தகங்கள் 11 - சந்தோஷத்தின் திறவுகோல்!

சந்தோஷத்தின் திறவுகோல்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அடை யாரில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் புத்தகம் தேடிக் கொண்டிருந்தேன். சாலையோரப் புத்தகக் கடை அது. ஒருவர் பிளாட் பாரத்தையொட்டி பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றைப் போட்டு உட்கார்ந்தபடியே புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார்.

தாடியோடு உள்ள மெலிந்த தோற்றம். நூலகத்தில் அமர்ந்து படிப்பது போலவே சாலையோரப் புத்தகக் கடையில் சேரில் சாய்ந்து கொண்டுப் படிக்கிறாரே… என வியப் பாக இருந்தது. அவரை பல நாட்கள் அதே புத்தகக் கடையின் முன்பாகப் பார்த்திருக்கிறேன்.

யாராவது ஏதாவது ஆங்கிலப் புத்தகம் விலைக்கு வேண்டும் எனக் கேட்டால், கடைக்காரர் சேரில் உட்கார்ந்திருப்பவரிடம் புத்தகத்தைக் கொடுத்து, அதன் விலையை மதிப்பிடச் சொல்வார்.

தாடிக்காரர் புத்தகத்தை ஒரு புரட்டுப் புரட்டிவிட்டு… 200, 300 என விலை சொல்வார். ஒருவேளை இப்படிப் பேரம் பேசுவதற்கு உதவி செய்யத்தான் அந்த நபர் பழைய புத்தகக் கடையிலே உட்கார்ந்திருக்கிறாரோ என்று கூடத் தோன்றும்.

அன்று நான் எடுத்த எமர்சன் எழுதிய புத்தகத்தைப் பார்த்தபடியே, ‘நீ காலேஜ்ல வேலை பாக்குறியா?’ என்று என்னைப் பார்த்து கேட்டார். ‘இல்லை’ என்றேன், அப்புறமாக, ‘ஆராய்ச்சி பண்றியா?’ எனக் கேட்டார். ‘அதுவுமில்லை’ என்றேன். பிறகு சிரித்தபடியே, ‘எழுத்தாளரா..?’ என்றார். ‘ஆமாம்’ என்றதும் ‘ஏ.எஸ்.பயட் படி… நல்லாயிருக்கும்’ எனக் கிழே கிடந்த, ‘பேபல் டவர்’ என்ற புத்தகத்தைக் காட்டினார்.

அவர் வழியாகவே நான் ஏ.எஸ்.பயட்டை வாசிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு, நாலைந்து முறை அவர் சிபாரிசு செய்த புத்தகங்களை வாங்கி வாசித்திருக்கிறேன்.

ஒருமுறை அவரிடம், ‘நீங்கள் ஏன் இப்படிப் பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர், ‘‘10 வருஷம் பிரைவேட் கம்பெனியில் வேலை செய்தேன். திடீர்னு ஒருநாள் வேலை போயிட்டு. அப்புறமா லைப்ரரி போறது, படிக்கிறதுன்னு மட்டும் சுத்திட்டு இருந்தேன். ஒருநாள் ரோடை கிராஸ் பண்றப்போ தற்செயலா இந்தக் கடையைப் பார்த்தேன். கொட்டிக் கிடக்கிற புத்தகத்துக்குள்ளே ‘ஆல்பர்டோ மொராவியா’ நாவல் ஒண்ணு கண்ணில்பட்டது. படிக் கணும்னு ஆசையா இருந்தது. ஆனா, கையில் காசு இல்லை. நைசா திருடி சட்டைக்குள்ளே போட்டுக்கிட்டு கிளம் பும்போது, கடைக்காரர் கூப்பிட்டு… ‘என்ன சார் அந்தப் புக் வேணுமா’னு கேட்டார்.

இப்படிக் கையும் களவுமாப் பிடிபட்டுட்டோமேன்னு திகைச்சுப் போய் நின்னுட்டு இருந்தேன். புத்தகக் கடைக்காரர் சிரிச்சபடியே, ‘படிச்சுட்டு நாளைக்குக் கொண்டு வந்து கொடுத்துடுங்க’ன்னு சொன்னார்.

அந்தப் புத்தகத்தை அறைக்குக் கொண்டுட்டுப் போய் இரவோடு இரவாப் படிச்சுட்டு, மறுநாள் திரும்பிக் கொடுத்துட்டேன். அப்படித் தொடங்குன பழக்கம் ஃபிரெண்ட்ஷிப்பா மாறிடுச்சு. எனக்காக ஒரு பிளாஸ்டிக் சேர் வாங்கிப் போட்டு இங்கேயே உட்கார்ந்து படிக்கச் சொல்லிட்டார். அவருக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தபடி நாள் முழுவதும் படிச்சிட்டே இருப்பேன். சாப்பாடு, டீ செலவு எல்லாம் அவருதான்’’ என்றார்,

என்ன ஒரு விநோதமான உறவு என்று தோன்றியது. புத்தகம் திருடியவரை தண்டிப்பதற்கு, நாற்காலி போட்டு உட்கார்ந்து படிக்கச் சொல்வதுதான் சிறந்த வழி என நினைத்த அந்தப் புத்தகக் கடைக்காரரும், படிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட அந்த மனிதரும் வியப்பளித்தார்கள்.

அவர்தான் ஒருநாள் என்னிடம் ‘சீன, ஜப்பானிய யாளியின் ஓவியக் கலைத் தத்துவம்’ என்ற புத்தகத்தைக் காட்டி, ‘இது ஒரு முக்கியமான புத்தகம். படி…’ என்றார். அதைப் புரட்டி பார்த்தபோது அழகான ஒவியங்கள் இணைக்கபட்டிருந்தன. லாரன்ஸ் பின்யன் எழுதிய ‘சீன ஓவியங்கள்’ குறித்த புத்தகம் அது. தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் சாந்தி நிகேதனில் ஓவியம் கற்ற பேராசிரியர் அ.பெருமாள். இவர் பிரபல ஒவியர் நந்தலால் போஸின் மாணவர். ஆகவே, உடனடியாகப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டேன்.

அன்று முதல் இன்று வரை இந்தப் புத்தகத்தை 20 தடவைகளுக்கும் மேலாக வாசித்திருப்பேன். சீன ஓவிய மரபை தெளிவாகவும் துல்லியமாகவும் வரலாற்றுப்பூர்வமாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். பெருமாளின் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பாக உள்ளது. கதிர் பதிப்பகம் 1996-ல் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

1935-ல் லண்டன் அருங்காட்சியகத் தில் சீனக் கலைப் பொருட்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், மூவாயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த பல்வேறு கலைப் பொருட்கள் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்வையிட்ட கலாரசிகர்கள் உலகின் தலைசிறந்த கலை மரபும் படைப்புகளும் கிரேக்கத்திலோ, நவீன ஐரோப்பாவிலோ உருவாகவில்லை. மாறாக சீனாவில்தான் அது தோன்றி வளர்ந்துள்ளது எனப் புகழ்ந்து கொண்டாடினார்கள். இந்த மாற்றத்துக்கு முக்கியத் தூண்டு

கோலாக இருந்தவை லாரன்ஸ் பின்யன் எழுதிய ‘சீனக் கலைகள்’ பற்றிய புத்தகங்களே.

இந்தியக் கலைகளின் மையம் மனித உடல்கள். அதை மையமாகக் கொண்டே பல்வேறு சிற்பங்களும் ஓவியங்களும் மாறுபட்ட பாணிகளில் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்க பட்டுள்ளன. ஆனால் சீன, ஜப்பானிய கலைகளின் மையம் இயற்கையும் அதன் இயல்பு நிலையும் ஆகும்.

ஆகவே அந்நாட்டுக் கலைஞர்கள் செடிகொடிகள், மலர்கள், பறவை கள், மிருகங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை வரைவதையே முக்கியக் கருப்பொருளாகக் கருதினார்கள். அவர்களது கோடுகளின் நெகிழ்வுத் தன்மையும் உக்கிரமும் இயற்கையின் வெளிப்பாடு போலவே இருந்தன. ஆகவே, மேற்கத்திய ஓவிய மரபில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை சீன, ஜப்பானிய ஓவியங்கள்.

‘தோற்ற உலகை’ வரைவது மட்டும் சீன ஓவியனின் வேலையில்லை. தோற்றத்தை ஊடுருவி அகக் கண்ணால் பார்ப்பதும் அரூப நிலைகளை உணரச் செய்வதும் கலையின் முக்கியச் செயல்பாடாகும்.

சீன நிலக்காட்சி ஓவியத்தில் மலர்கள்... மகிழ்ச்சியின் திறவுகோல் போலவும், காற்று... கலைஞனின் விருப்பமாகவும், மலைச் சிகரங்கள்... அவனது தனித்த ஆசைகளாகவும், அருவிகள்... அவனது விடுதலையடைந்த சக்தியாகவும், காட்சியளிக்கின்றன. சதுரம் அல்லது நீண்ட சதுர வடிவிலேதான் ஐரோப்பிய பாணி ஓவியங்கள் பெரிதும் வரையப்படுகின்றன. ஆனால் சீன, ஜப்பானிய சுருள் ஓவியத்தில் ஒரு நிகழ்வின் பல்வேறு அடுக்குகளைத் தொடர்ச்சியாக வரைய முடிகிறது என்பது அதன் தனித்துவமாகும்.

‘ஓவியங்களை மக்கள் தங்கள் கண்களைக் கொண்டு பார்ப்பதில்லை. தங்கள் காதுகளைக் கொண்டுதான் பார்க்கிறார்கள்’ என்ற சீன ஓவியக் கலைஞர் கூ காய் ஓவிய விமர்சனங்களைப் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறார்,

இதன் பொருள் ஓவியத்தைப் பற்றி யாரோ, எவரோ சொல்லிய, எழுதிய விஷயங்களைக் கொண்டே மக்கள் அதனை மதிப்பிடுகிறார்கள். திறந்த ரசனையோடு கண்முன்னே உள்ள ஓவியத்தை அணுகுவதே இல்லை என்பதாகும். இது சீன ஓவியங்களுக்கு மட்டுமில்லை; இந்திய நவீன ஓவியங்களுக்கும் பொருந்தக்கூடியதே.

சீன, ஜப்பானிய ஓவியங்களைப் புரிந்து கொள்வதற்கும், ஓவியம் சார்ந்த ரசனையை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தப் புத்தகம் சிறந்த வழிகாட்டியாகும்.

- இன்னும் வாசிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x