Published : 27 Dec 2014 04:28 PM
Last Updated : 27 Dec 2014 04:28 PM
லட்சுமணனின் முதல் படைப்பான ‘ஒடியன்’ இருளர் பழங்குடிகளின் மொழியில் எழுதப்பட்ட முதல் கவிதைத் தொகுப்பாகும். இரண்டாவது படைப்பான ‘சப்பெ கொகாலு’ நூலில் பழங்குடிகளின் பாடல்களைத் தொகுத்து அந்தப் பாடல்களுக்கு உயிர்ப்புமிக்க புனைகதைகளை உருவாக்கியுள்ளார் லட்சுமணன்.
(‘சப்பெ கொகாலு’ என்றால் ‘ஊமைப் பெண்ணின் புல்லாங்குழல்’ என்று அர்த்தம்.) மலை இருளர்களின் பாடல்களைத் தொகுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஒரு நெடிய பயணத்தின் மூலமாக அம்மக்களுடன் பயணிக்கவில்லையென்றால் அவர்களின் பாடல் உலகை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
பழங்குடி மக்களின் மொழிகள் ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்க்கை அனுபவங்களை சேமித்து வைத்துள்ள புதையல் போன்றவை. இப்பாடல்களின் சுவடுகளைப் பின்பற்றி நாம் அவர்களின் கடந்தகால வரலாற்றுக்குள் நுழைய முடியும். இப்பாடல்களில் வெளிப்படும் ஏற்ற இறக்கங்கள் ஒவ்வொரு பழங்குடி இனத்துக்கும் தனித்துவமானவை. தாங்களே உருவாக்கிய இசைக் கருவிகளை இசைத்து எழுப்பும் பழங்குடிகளின் பாடல்கள் ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலை முறைக்குக் கொடுத்துச் செல்லும் பெரும் கொடை.
வாழ்வே இசை
பழங்குடி மக்களின் வாழ்விலிருந்து இசையைப் பிரித்துப்பார்க்க முடியாது. அவர்களின் பிறப்பு, கொண்டாட்டங்கள், வழிபாடுகள், திருமணம், பிள்ளைப்பேறு, இறப்பு என்று வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இசையும் நடனமும் இம் மக்களை வழிநடத்துகின்றன. அவர்கள் நிலங்களில் வித்துகள் தூவப்படும் காலங்களிலும், தங்கள் வித்துகளை சேகரித்துப் பாதுகாத்து சந்ததியை வளமாக்கும் சடங்குகளிலும்கூட பாடல்கள் இசைக் கப்படுகின்றன.
இந்த இசைக்கு யாரும் காப்புரிமை பெற முடியாது. இது சமூகத்தின் பொதுச்சொத்து. ஒவ்வொரு தலைமுறையிலும் படைப்பாற்றல் மிக்க மனிதர்கள் தங்கள் பாடல்களை இசைக்கிறார்கள். தலைமுறைகள் கடந்து அந்தப் பாடல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இந்தப் பாடல்களின் படைப்பாளிகளான இருளர்கள் மலையின் மைந்தர்கள். இருள் போன்ற கரிய தங்கள் நிறத்தின்மீதும் நிலத்தின்மீதும் கர்வம் கொண்டவர்கள். இவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கைமீது நமது நாகரிகச் சமூகம் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஒரு போரைத் தொடுத்து
வருகிறது. அம்மக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தி, அம்மக்களின் பண்பாட்டுக் கூறுகளை அழித்தொழித்து, அவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதைத் தொடர்ந்து நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
அற்புதமான பிணைப்பு
இருளர்கள் ஆதிப் பழங்குடிகள் என்ற வரை யறைக்குள் அடங்கக் கூடியவர்கள். மானுடவிய லாளர்களின் வரையறைப்படி இயற்கை சார்ந்த ஆன்மிகத் தொடர்பையும் ஞானத்தையும் பெற்ற மனிதர்கள் இவர்கள். இருளர்கள் தங்கள் மூதாதையர்களைப் போற்றுபவர்கள்; பாலினச் சமத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்கள்; விருந்தோம்பல் பண்பைக் கொண்டவர்கள்.
இனம்சார்ந்த பற்று கொண்ட மக்கள். தங்கள் செயல்பாடுகளிலும் முடிவெடுப்பதிலும் ஜனநாயகத் தன்மை கொண்டவர்கள். பிற இனங்கள் மீது இந்த மக்கள் வெறுப்பு காட்டுவதில்லை. கடும் உழைப்பையும் படைப்பாற்றலைக் கொண்டிருக்கும் இருளர்கள் எளிய, நிறைவான வாழ்க்கையை வாழ்பவர்கள். மண்ணோடும் வனத்தோடும் இவர்கள் கொண்டிருக்கும் பிணைப்பு அற்புதமானது.
லட்சுமணனின் புனைவுகளில் உலாவும் மனிதர்களும் இத்தகைய பண்பு நெறிகளைப் பெற்றவர்களே. கூடவே, தங்கள் பாரம்பரியம் சார்ந்த மதிப்பீடுகளையும், எவருக்கும் தீங்கு நினைக்காத வாழ்க்கை நெறியையும் கொண்ட வர்கள். இப்படி அறம்சார்ந்த பண்பாட்டைக் கொண் டிருக்கும் மக்களை ‘காட்டுமிராண்டிகள்’ என்று நாகரிகச் சமூகம் அடையாளப்படுத்தும் நிலை உருவாகியிருப்பதுதான் பேரவலம்.
பழங்குடிகளின் ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றையும் மொழிகளையும் பாதுகாக்க அரசுகள் முன்வராத சூழலில் கவிஞர் லட்சுமணனின் இந்தப் படைப்பு அதுபோன்ற முயற்சியில் பனையாக உயர்ந்து நிற்கிறது. இந்த ஒற்றைப் பனையானது எல்லா அலைகளையும் தாண்டி நிற்கும் என்று நம்பலாம். பழங்குடிகளையும், அவர்களுடைய மொழிகள், பண்பாடு, வாழிடம் போன்றவற்றையும் பாதுகாக்க முயலாத அரசுகள்தான் வரலாற்று அநீதியைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன.
பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் ஆதிகுடிகளின்மேல் நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் புரிந்துகொள்ள கொஞ்சம் நேர்மையும் நிறைய மனிதமும் வாசகர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த ஊமைப்பெண் எழுப்பும் குழலின் இசை நம்மால் எழுப்ப முடியாத ஆன்மிக மனத்தை எழுப்பி நம்மை உயிர்ப்பிக்கக்கூடியது.
- ‘சப்பெ கொகாலு’ புத்தகத்துக்கு எழுத்தாளர் ச. பாலமுருகன் அளித்திருக்கும் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT