Published : 18 Dec 2014 12:15 PM
Last Updated : 18 Dec 2014 12:15 PM
ஒரு யுகத்தின் முடிவு!
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய எழுத்துப் புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்காக, வயதானவர்கள் பழைய புத்தகக் கடைகளுக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன்.
அழகிய ஒவியங்களுடன் அச்சிடப் பட்டப் பெரிய எழுத்து மயில்ராவணன் கதை, விக்ரமாதித்யன் கதை, சித்திர புத்திர நாயனார் கதை, நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை போன்ற புத்த கங்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
பெரிய எழுத்துப் புத்தகங்கள் சாணித் தாள்களில் கொட்டைக் கொட்டையான எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்கும். நாடகக் கலைஞர்கள் மற்றும் வில்லுப் பாட்டுக் கலைஞர்கள் இவற்றை ஆர்வ மாக வாங்கி வாசிப்பது உண்டு.
கிராமத்தில் யார் வீட்டிலாவது யாராவது இறந்துவிட்டால் சித்திரபுத்திர நாயனார் கதை படிக்கப்படும். அப்படி கதைப் பட்டிப்பவர்களுக்குக் கடுங் காப்பித் தர வேண்டும். சிலருக்குப் படிப்புக் கூலி தருவதும் வழக்கம். நிறுத்தி நிறுத்திப் பாட்டும் கதையுமாக இதைப் படிப்பார்கள். கேட்பவர்களுக்கும் கதைத் தெரியும் என்பதால் உரையாடல் போல அமைவதும் உண்டு. இப்படி பெரிய எழுத்துப் புத்தகம் படிப்பதற்கு என்றே சில படிப்பாளிகள் இருந்தார்கள். அவர்களைத்தான் சாவு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவார்கள். இப்போது அவர்கள் எவரும் பெரிய எழுத்துப் புத்தகங்களைப் படிக்கிறார் களா எனத் தெரியவில்லை.
பெரிய எழுத்து ‘கொக்கோகம்’ என்பது கிராமவாசிகளுக்கான ‘காம சூத்ரா’ புத்தகம். படங்களுடன் உள்ள இந்தப் புத்தகத்தைப் பெரியவர்கள் மட்டுமே படிப்பார்கள். ரகசியமாக சிலவேளைகளில் பள்ளி மாணவர்கள் திருடி வந்து படிப்பதும் உண்டு. ‘கொக்கோகம்’ தமிழில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. இந்தப் புத்தகம் எவ்வாறு எழுதப்பட்டது என்பதற்கே ஒரு கதை சொல்வார்கள்.
12-ம் நூற்றாண்டில் வேணுதத்தன் என்ற அரசன் வேண்டுகோளுக்கு இணங்க, கொக்கோகர் என்ற ரிஷி இதை எழுதியதாக சொல்கிறார்கள். ஒரு இளம்பெண் காமத்தால் தூண்டப் பட்டு, தனக்கு ஏற்ற வலுவான ஆண் கிடைக்கும்வரை நிர்வாணமாகவே ஊர் ஊராகச் செல்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைத் திருப்தி செய்ய எந்த ஆணாலும் முடியவில்லை. ஒருநாள் அவள் வேணுதத்தன் சபைக்கு வந்தாள்.
அரச சபையில் இருந்த கொக்கோகர் என்ற ரிஷி, ‘‘நான் அவளை அடக்கிக் காட்டுகிறேன்’’ என உடன் அழைத்துப் போய் தீராக் காமத்தை தீர்த்து வைத்தாராம். ‘அவளை எவ்வாறு அடக்கினீர்கள்?’ என்று வேணுதத்தன் கேட்க, அவருக்குப் பதில் கூறும்விதமாக கொக்கோ ரிஷி ‘ரதி ரகசியம்’ என்ற நூலை இயற்றினார் என்பார்கள். அதிவீரராம பாண்டியர் இந்தப் புத்தகத்தைத் தமிழில் வழங்கினார். இந்தப் புத்தகத்தை அந்தக் காலத்தில் மணமக்களுக்குப் பரிசாக தருவது வழக்கம்.
அந்த நாட்களில் பெரிய எழுத்தில் வெளியான மகாபாரதப் பதிப்புகள் புகழ்பெற்றவை. கிராமப்புறங்களில் மழை வேண்டி ‘பாரதம்' படிப்பவர்கள் ‘விராடப் பருவம்’ புத்தகத்தைத்தான் பயன்படுத்துவார்கள்.
புகழேந்திப் புலவர் எழுதிய ‘பஞ்ச பாண்டவர் வனவாசம்’ என்ற பெரிய எழுத்துப் புத்தகம் ஒன்று எங்கள் வீட்டில் நீண்ட காலமாக இருந்தது. அதன் முகப்பில் ‘ஐதீக படங்களுடன்’ என அச்சிட்டிருப்பார்கள். பெரிய எழுத்துப் புத்தகங்களுக்கு யார் ஒவியம் வரைந்தது எனத் தெரியவில்லை. ஆனால், முகபாவங்களும் இயற்கைச் சூழலும் அதில் அற்புதமாக வரையப் பட்டிருக்கும்.
இன்று ‘மகாபாரதம்’ தொலைக் காட்சித் தொடராக இந்தியா முழுவதும் தொடர்ந்துப் பார்க்கப்படுகிறது. அத்துடன் மகாபாரதம் சார்ந்த நவீன நாவல்கள், நாடகம், மறுவாசிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பிரதிகள் என பல்வேறு நிலைகளில் ‘மகாபாரதம்’ புதுப்பொலிவுப் பெற்று வருகிறது.
மகாபாரதத்தின் அறியப்படாத விஷயங்களை முன்வைத்து நான் ‘உபபாண்டவம்’ என்ற நாவலை எழுதியி ருக்கிறேன். அதற்காக மகாபாரதத்தை முழுமையாக வாசித்தேன். ‘மகாபாரதம்’ தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள இடங்களைச் சுற்றி அலைந்து கண்டிருக்கிறேன்.
‘மகாபாரதம்’ சார்ந்த தெருக்கூத்து, நாடகங்கள், நிகழ்த்துக் கலைகளைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். ‘மகாபாரதம்’ குறித்த புதினங்கள், ஆய்வு களையும் ஆழ்ந்து வாசித்திருக்கிறேன்.
‘மகாபாரதம்’ என்பது மாபெரும் நினைவுத் தொகுப்பு. இந்திய சமூகத்தின் பண்பாட்டு நினைவுகளும்; சமூக, அரசியல் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்களும்; அதன் ஞாபகங்களும் ‘மகாபாரதம்’ வழியாக ஒன்று சேர்க்கப்பட் டிருக்கின்றன. ஆகவே, ‘மகாபாரதம்’ என்பதை மாபெரும் மானுட ஆவண மாகவே கருதுகிறேன்.
- ஐராவதி கார்வே
‘மகாபாரதம்’ குறித்து இன்று வரை எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் எனக்கு மிகவும் பிடித்தப் புத்தகம் ‘ஐராவதி கார்வே’ (Irawati Karve)எழுதிய ‘யுகாந்தா’.
1989-ம் ஆண்டு இதன் பிரதி ஒன்றை மும்பையின் பழைய புத்தகக் கடை ஒன்றில் வாங்கினேன். ‘மகாபாரதம்’ பற்றிய எனது புரிதலை செழுமைப்படுத்தியது இந்தப் புத்தகம். தமிழில் இதனை ‘ஓரியண்ட் லாங்மென்’ வெளியிட்டுள்ளது. ‘அழகியசிங்கர்’ தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் வாங்கியது ஆங்கிலப் பதிப்பு.
‘ஐராவதி கார்வே’ பெர்லின் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களை மானுடவியல் மற்றும் வரலாறு சார்ந்து விரிவாகவும் நுட்பமாகவும் ‘கார்வே’ மேற்கொண்ட ஆய்வு, மகாபாரதத்தைப் புரிந்துகொள்ள பெரிதும் வழிகாட்டுகிறது. ‘கார்வே' இந்தக் கட்டுரைகளை முதலில் மராத்தியில் எழுதினார். பின்பு பன்னாட்டு வாசகர்களுக்காக அவரே ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
‘மகாபாரதம்’ ஆரம்பத்தில் ‘ஜெயா’ என்ற பெயரில்தான் அழைக்கபட்டிருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் புத்துருவாக்கம் பெற்று, முடிவில் ‘மகாபாரதம்’ என்ற இதிகாசமாக மாறியது என்கிறார் ‘ஐராவதி கார்வே’.
காந்தாரி, திரவுபதி, மாத்ரி, குந்தி போன்ற கதாபாத்திரங்களை ஆராயும்போது மகாபாரதக் காலத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? அதன் பின்னுள்ள சமூகக் காரணிகள் எவை என்பதைக் குறித்து விரிவாக ஆராய்கிறார். பாண்டுவின் மனைவி என்ற முறையில் குந்தி உடன்கட்டை ஏறாமல், ஏன் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள் என்று ‘கார்வே’ முன்வைக்கும் கேள்வி மிக முக்கியமானது!
விதுரனுக்கும் யுதிஷ்ட்ரனுக்குமான உறவானது தந்தை மகன் உறவு போன்றது என ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறார். அதற்குச் சான்றாக விதுரன் இறப்பதற்கு முன்பு, அவரைத் தேடி வரும் யுதிஷ்ட்ரனுடன் நடைபெற்ற உரையாடலின் வழியே இந்த உறவை உறுதி செய்கிறார்.
இதுபோலவே கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமான நட்பையும் இருவரது தோழமை உணர்வையும், காண்டவபிரஸ்தத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒன்றுசேர்ந்து எப்படி தீக்கிரையாக்கினார்கள் என்பதையும் ஆராயும் ‘கார்வே’, பக்தி இயக்கம் தீவிரமாக வளரத் தொடங்கியபோது... இதிகாச பாத்திரங்கள் தெய்வாம்சம் பெற்ற கடவுளாக மாறினார்கள். அப்படித்தான் மகாபாரதப் பிரதியில் கிருஷ்ணரும் உருவாக்கப்பட்டார் என்று கூறுகிறார்.
இன்று ‘மகாபாரதம்’ குறித்த ஆர்வம் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், ‘மகாபாரத’க் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள ‘ஐராவதி கார்வே’ எழுதியுள்ள ‘யுகாந்தா’ ஒரு திறவு கோலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
- இன்னும் வாசிப்போம்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramiki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT