Published : 07 Dec 2014 12:46 PM
Last Updated : 07 Dec 2014 12:46 PM

சஞ்சாரம் - புதிய நாவல்

உயிர்மை பதிப்பகம் வரும் ஜனவரியில் வெளியிட உள்ள எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் புதிய நாவலின் ஒரு பகுதி இது. தொடர்புக்கு: 044-24993448.

பொம்மக்காபுரத்தில் பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்வதில் பேர் பெற்ற இரண்டு குடும்பங்களிருந்தன. பாம்பு கடித்தவர்களைத் தூக்கிக்கொண்டு வந்தால் உடனே பச்சை மிளகாயையோ சிவப்பு வத்தலையோ அவர்கள் சாப்பிடச் சொல்லுவார்கள், அதையடுத்து வேப்பிலையை மெல்ல வேண்டும், விஷப் பாம்பு கடித்திருந்தால் மிளகாய் காரம் தெரியாது. வேப்பிலையும் கசக்காது.

வேப்பெண்ணெய், மூலிகைச் சாறு ஆகிய வற்றை எல்லாம் இரும்புச் சட்டியில் கொதிக்க வைத்து, அதுகூடச் சாரைப் பாம்பைக் கொன்று எண்ணெய்க்குள் போட்டுக் காய்ச்சி ‘சாரைப் பாம்புத் தைலம்’ செய்வார்கள். அது வாதம், வீக்கம், நீர்க்கட்டு, ரத்தக்கட்டுக்கெல்லாம் மருந்தாகப் பயன்படும்.

இது போலவே கடுமையான விஷம் இருக்குற கருநாகத்தையும் கொன்று ஆழக் குழி தோண்டி பானைக்குள் நெல்லைப் போட்டு வைத்துப் புதைத்துவிடுவார்கள். நாற்பத்தி அஞ்சாவது நாள் பானையை வெளியில எடுத்துப் பார்த்தால் அதன் உள்ளே, பாம்பின் கூடு மட்டுமேயிருக்கும், நெல் கறுப்பு நிறமாகியிருக்கும். அந்த நெல்லைக் காயவைத்துக் குத்தி அரிசியாக்கினால் கறுப்பு அரிசியாக இருக்கும். அது குஷ்டம் வந்தவர் களுக்கு மருந்தாகத் தரப்படும். இப்படிப் பாம்புக் கடிக்கு வைத்தியம் பார்க்கப் பலரும் பொம்மக்காபுரத்துக்கு வந்து போவார்கள். இப்போது அந்த இரண்டு குடும்பங்களும் ஊரில் இல்லை, அவர்களின் பிள்ளைகள் எவரும் அந்தத் தொழிலைச் செய்யவும் இல்லை, படித்து வேலைக்குப் போய் நகரவாசிகள் ஆகிவிட்டார்கள். ஆனால் கிராமத்தில் இன்னமும் பாம்பும் பாம்புக் கடியும் இருந்துகொண்டேதானிருந்தன.

பனைவிடலிகளுக்குள் அவர்கள் நடக்கத் தொடங்கியபோது உரித்த பாம்புச் சட்டை கிடந்தது, அதைக் காற்றுக் கிழித்துப் போட்டிருந்தது. நடக்க நடக்க மண்ணை வாரித் தூற்றியது காற்று. ஊர்வாசிகளுக்கு மணலேறிய காற்று பழகிப்போய்விட்டது. சாவும், வறட்சியும், பிழைக்க வழியற்று ஊர் நீங்கி வெளியேறிப்போவதும்கூடத் தான் பழகிவிட்டது.

முன்பெல்லாம் யார் வீட்டிலாவது சாவு என்றால் ஊரே ஒன்றுகூடி விடுவார்கள். பாடை புறப்பட்ட பிறகு வீட்டிற்குப் போய்க் குளித்த பிறகுதான் சாப்பாடு. ஆனால் இப்போது அப்படியில்லை. அதிலும் வயதானவர்கள் குறைந்து வருகின்ற ஊரில் இறப்பது ஒரு தகவல் மட்டுமே.

அப்படித்தான் கோவிந்தசாமி நாயக்கரும் கடந்த வெள்ளியன்று இறந்துபோனார். அந்தச் சாவிற்கு வெளியூரிலிருந்து ஒரு ஆள் கூட வரவேயில்லை. உறவினர்கள், அறிந்தவர் தெரிந்தவர் என யாராவது வருவார்களா என உடலை வைத்துக் கொண்டேயிருந்தார்கள், ஆனால் யாரும் வரவில்லை.

விளைநிலத்தை விற்க முடியாது என மறுத்து விட்டதால் பிள்ளைகளுக்கு அவர் மீது கோபம்.

பிள்ளைகள், இனி ஊருக்கே வரப்போவதில்லை எனக் கிளம்பிப் போய் விட்டார்கள். ஆறு வருஷமாகவே யாரும் வந்து போகவில்லை. அதனால் என்ன, சொந்த ஊரில் இருக்கும்வரை வேறு என்ன உறவு வேண்டியிருக்கிறது. கோவிந்தசாமி நாயக்கர் தனியாகத்தான் வாழ்ந்தார்.

ஒரு நாள் பகலில் தனியே மயானத்துக்கு நடந்து போனார், தன்னைப் புதைப்பதற்கு எது நல்ல இடம் என்பதைக் கண்டறிவதற்காகச் சுற்றியலைந்தார். எலும்புகளும் உடைந்த மண்பானையின் துண்டுகளும் சிதறிக்கிடந்தன, தூக்கி எறிந்த மாலைகளில் ஒன்று ஒரு சமாதி மீது உலர்ந்து கருகிகிடந்தது.

கடைசியாக வடக்கே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தார். அந்த இடத்தில் ஒரு கல்லைத் தூக்கி அடையாளம் வைத்தார். இந்த இடத்தில்தான் புதைபடப் போகப்போகிறோம் என்பது சந்தோஷம் தருவதாகயிருந்தது. அந்த மண்ணைக் கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். பிறகு தனது சமாதிக்கு நிழல் தருவதற்காக ஒரு வேம்பை வைக்கலாமே என்ற எண்ணம் உண்டானது.

விதை போட்டு ஒரு வேப்பஞ்செடியை வளர்க்க ஆரம்பித்தார். வேம்பு அந்த மண்ணில் வேகமாக வளரக்கூடியது. ரெண்டு வருஷத்திற்குள் வேம்பு வேர் பிடித்து நின்று விட்டது. அதன்பிறகு அடிக்கடி போய் அந்த வேம்படியில் உட்கார்ந்து கொள்வார்.

மயானத்திலிருக்கிற சமாதிகளிலே தன்னுடையதுதான் மிக அழகானது என்ற சந்தோஷம் அவருக்கு. ஒருநாள் அவர் அந்த வேம்படியில் உட்கார்ந்திருந்தபோது கானலில் யாரோ ஒரு ஆள் வருவது போலத் தெரிந்தது.

யார் அது எனக் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x