Published : 13 Dec 2014 04:42 PM
Last Updated : 13 Dec 2014 04:42 PM
பிழைப்புக்காகப் பெருநகரில் அலைந்து திரியும் விதியென்றாலும் மணிமுத்தா நதிக்கரையின் மண்ணையும் மக்களையும் அவர்கள் தந்த வலிகளையும் ஊர் தந்த இனிமையையும் மறக்க இயலாமல் இந்தத் தொகுப்பெங்கும் தவிதவிக்கிறார் வீரமணி.
முந்திரித் தோப்புகளும், இலுப்பை மரப் பொந்துகளும் சம்மம் புதர்களும் மஞ்சள் நிற அலகு கொண்ட ராவணாத்திகளும் பன்றிகளும் கெண்டைகள் அலையும் குளங்களுமென இயற்கை இயைந்து கிடக்கிறது அவர் கவிதை வெளியில். உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞன் ஹென்றி கார்த்தியே பிரஸ்ஸோனின் புகைப்படங்கள் சொல்லும் சேதிகள் போல, ஒரே ஷாட்டில் வீரமணி பெரும்பாலான கவிதைகளை நிகழ்த்திக் காட்டிவிடுகிறார். அவர் காட்டும் ஒரு ஒற்றைக் காட்சி, அதன் தொடர்பான பல சேதிகளையும் நினைவுக்குக் கொண்டுவந்து ததும்பவிடுகிறது. சொல்லாத பல சேதிகளை, அரசியலை, ஏற்றத்தாழ்வை, வலியின் நெறிகட்டிக் கனக்கும் வீக்கத்தை வீரமணியால் கொண்டுவந்துவிட முடிகிறது.
நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் இருந்த குடிசையையும் இழந்தவர்கள், மதுக் கடையில் அழுதபடி இருக்கும் மனிதர்கள், சமோசா விற்பவர்கள், இரவுப் பணி கண்விழிப்புக்கென்று வரும் வயதான செக்யூரிட்டிகள் எனப் பல மனிதர்களையும் தன் கவிதையெனும் பரிவுகொண்டு அணைத்துக்கொள்கிறார் வீரமணி. சாதியத்தின் சல்லி வேர்கள் இன்னமும் அறுபடாமல் இருக்கிறதேயென அவர் வேறுவேறு சாட்சிகள் மூலம் சத்தமில்லாமல் நம் முன் காட்சிப்படுத்துகிறபோது கூசத்தான் செய்கிறது.
- ரவிசுப்பிரமணியன்
ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை
ஆழி.வீரமணி, வெளியீடு:
செம்மண், எண்: 86, புதுமனைசாரி தெரு,
முதனை அஞ்சல், விருத்தாச்சலம் -607804,
தொடர்புக்கு: 98841 95134.
விலை: 60 ரூபாய்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT