Last Updated : 13 Dec, 2014 04:36 PM

 

Published : 13 Dec 2014 04:36 PM
Last Updated : 13 Dec 2014 04:36 PM

தமிழ் சினிமாவின் பெருமிதங்கள்

இந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. தமிழ்ப் படங்களைப் பற்றிய நம்பகமான தகவல் திரட்டுகள் ஆங்கிலத்தில் அதிகம் இல்லை. ராண்டார் கை மட்டுமே தொடர்ந்து ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதிவருகிறார். தமிழ் சினிமா சரித்திரம்பற்றி தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். சினிமா தயாரிப்பு நிறுவனமொன்றின் தலைவர் ஜி. தனஞ்செயன் சமீப வருடங்களில் அந்தப் பணியைத் தனக்கேயுரிய பாணியில் மேற்கொண்டுள்ளார்.

‘பெஸ்ட் ஆஃப் தமிழ் சினிமா (1931 - 2010)’ என்கிற ஆங்கிலப் புத்தகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். இப்போது ‘ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா’ (1931 - 2013). தமிழ் சினிமாவின் பெருமிதங்கள். மொத்தமாக 202 திரைப்படங்கள். இதில் அவர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். மத்திய அரசு ஆண்டுதோறும் இரு வகையான படங்களை அங்கீகரித்துவருகிறது: விருதுப் படங்கள், பனோரமா படங்கள். அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் ஒவ்வொரு ஆண்டிலும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பனோரமா படங்கள் என்பன இந்திய மொழிகளில் தயாரான சிறந்த பரிசோதனை முயற்சிகளும் கலைப் படங்களும் ஆகும். இவ்விரண்டு பிரிவுகளிலும் தேர்வான மொத்தத் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை இதுநாள்வரை 163.

விருதுகள் வழங்கப்படுவதற்கு முன்பாக வெளிவந்த படங்களை விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்துடன், 1931-லிருந்து 1953 வரையிலான படங்களில் தகுதிக்குரிய 39 படங்களையும் இணைத்திருக்கிறார். புத்தகத்தின் தோற்றுவாயிலில் தமிழ் சினிமா முன்னோடிகளை நினைவுகூர்கிறார். தனிமனித ஆவணக் காப்பகமாகச் செயல்பட்டுவரும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனையும் இணைத்திருப்பதற்காக அவரைத் தனியாகப் பாராட்டலாம்.

படங்களைப் பற்றிய அனைத்துத் தரப்புத் தரவுகளையும் ஒருங்கிணைத்துத் தருகிறார். படம் பற்றிய அறிமுகம், கதைச் சுருக்கம் அதன் தனிப்பெரும் சிறப்புகள், அது ஏற்படுத்திய பாதிப்புகள், நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் முக்கிய பாடல்கள், இயக்குநர் பற்றிய குறிப்பு, சுவாரசியமான கொசுறுத் தகவல்கள் ஆகிய உப தலைப்புகளைக் கொண்ட கட்டுரையாக ஒவ்வொரு படமும் முன்னிறுத்தப்படுகிறது. படத்தின் ஸ்டில்களுடன் போஸ்டரும் தரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் போஸ்டர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர் களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.

விருது மற்றும் பனோரமா படங்களை மட்டுமே இதில் எடுத்துக்கொண்டுள்ளதால் அந்த வரை யறைக்குள் வராத படங்களைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் வேறு பல அனுகூலங்கள் நிகழ்ந்துள்ளன. சினிமா விமர்சகர் களும் ஆய்வாளர்கள் பலரும் மாற்றுப் படங்களை அலட்சியப்படுத்திவிடுவதால் மல்லி, உச்சிவெயில், ஜமீலா, ஊருக்கு நூறு பேர், நண்பா நண்பா, ஒருத்தி, செங்கடல் போன்ற படங்கள் மக்களின் கவனத்துக்கு வருவதில்லை. தனஞ்செயன் முழு நீள மாற்றுப் படங்களை மட்டுமின்றி விருது பெற்ற குறும்படங்களையும் சினிமா புத்தகங்களையும் ஆய்ந்து எழுதியுள்ளது முன்னுதாரணச் செயலாகும். தமிழ்ப் படங்களைப் பற்றி மட்டுமின்றி, பிற மொழிப் படங்களைப் பற்றியும்கூட ஆங்கிலத்தில் இவ்வளவு விரிவான தளத்தில் ஒரு புத்தகம் வெளிவந்ததில்லை. அச்சாக்கமும் வடிவமைப்பும் சிறந்த தரத்துடன் விளங்குகின்றன.

தாஷ்கண்டு பட விழாவுக்கு ‘பராசக்தி’ படத்தை அனுப்பக் கூடாது என்று அதன் வசனகர்த்தா மு. கருணாநிதி தடுத்தது, தடை உத்தரவு பெற்றிருந்த ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படத்துக்குக் குடியரசுத் தலைவரின் விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத் திலிருந்து அதற்கான உத்தரவு நீக்கம் பெற்று, சிரிபோர்ட் ஆடிட்டோரியத்துக்குத் தயாரிப்பாளர் எஸ். ரங்கராஜன் விரைந்தது போன்ற பல அறிந்தும் அறியாததுமான தகவல்களைக் ‘கொசுறு’ தலைப்பின் கீழ் தனஞ்செயன் தருகிறார். இப்புத்தகத்தின் சிறப்பான பகுதிகளில் ஒன்று இது.

ஆங்காங்கே பிழைகள் தென்படுகின்றன. இயக்குநர் நிமாய் கோஷுக்குப் பதிலாக யாரோ ஒருவரின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1936-ல் ‘தியாக பூமி’ வெளிவந்தவுடன் அது தடை செய்யப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், படம்

1944-ல்தான் தடை செய்யப்பட்டது. ‘அக்கிரகாரத்தில் கழுதை’ படம் தடை செய்யப்பட்டது என்பதும் தவறு. தூர்தர்ஷனில் ஒளிபரப்பத்தான் தடை ஏற்பட்டது. படம் தடை செய்யப்படவில்லை. இப்புத்தகம் தமிழிலும் விரைவில் வெளிவர விருக்கிறது. சிறப்புக் கவனம் பெற்ற தமிழ்ப் படங்களை தமிழர்கள் அல்லாதவர் மத்தியில் ஆங்கிலத்தின் வழியாக இத்தனை விமரிசையுடன் கொண்டுசென்றது மிக முக்கியமானது.

- அம்ஷன் குமார்
திரைப்பட ஆவணப்பட இயக்குநர்,
எழுத்தாளர்
தொடர்புக்கு: amshankumar@gmail.com

அலைப்பேசி எண்: 8754506060

ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா (1931 - 2013)
(ஆங்கிலம்) ஜி. தனஞ்செயன்.
ப்ளு ஓஷன் பப்ளிஷர்ஸ்,
நியூ செகரடேரியட் காலனி மெயின் தெரு,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.
பக்கங்கள் 594, A4 தாள், கெட்டி அட்டைக் கட்டு,
விலை ரூ. 1,500

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x