Published : 27 Apr 2014 12:00 AM
Last Updated : 27 Apr 2014 12:00 AM
ஒவ்வொரு நம்பிக்கையும், தனக்குரிய படைபலத்துடன் விளங்குவதை நாமெல்லோரும் அறிவோம்; கருணையை அடிப்படையாகக் கொண்டதாகத் தம்மை விளம்பரப்படுத்தும் நம்பிக்கைகளும், இப்படித்தான் இருக்கின்றன.
இவ்வித விளம்பரங்கள் - குறியீடுகளாக, சடங்குகளாக, அலங்கார வார்த்தைகளாக, நம்பிக்கைகளாக மாற்றம் பெற்று, மறைந்து நிற்கின்றன. இவை மதம் சர்ந்தவை யாகவோ மத சம்பந்தமற்றவையாகவோ இருக்கலாம் - அல்லது மதத்தை எதிர்ப்பவையாக இருக்கலாம்.
ஆனால், போராடுவதில் தமக்குள்ள பெருவிருப்பத்தை இவை காண்பித்துக்கொள்கின்றன. உண்மை நிலை இதுதான் என்று தெரிந்திருந்தும், எதற்காக மனிதன் இந்த நம்பிக்கைகளில் தன்னைப் பிணைத்துக்கொள்கிறான்?
ஒருவேளை, இவை இகலோக வாழ்க்கைக்கோ, அல்லது பரலோக வாழ்க்கைக்கோ பாதுகாப்பைத் தரலாம் என்ற எண்ணத்தில், அவன் நம்பத் தொடங்கியிருக்கலாம். ஆயினும் இன்றும்கூட, தம் நம்பிக்கையைப் பாதுகாக்கப் போரிடவே முனைகிறான். பாதுகாப்பின் நிமித்தமாக, பாதுகாப்பில்லாத நிலையை நீடிக்கச் செய்யும், சண்டை சச்சரவுகளுக்குள் வேகத்துடன் பாய்கிறான்.
பெரும்பாலான மனிதர்களுக்குத் தமது நம்பிக்கையின் நிமித்தமாக, கொல்வதும் கொல்லப்படுவதும், மெச்சத் தகுந்த - உன்னதம் வாய்ந்த செயலாகத் தோன்றுகிறது. இதற்கான வெகுமதியை, ஒருவன் பரலோக வாழ்வில் பெறுகிறான் என்றோ, அல்லது பின்வரும் சந்ததியினரும் கட்சியினருமாவது நல்லதோர் உலகத்தைப் பெறுவார்கள் என்றோ, அவர்கள் நம்புகிறார்கள்.
வாழ்வைப் பாதுகாக்க ஒருவன் விழையும்போது, அச்செயலுக்காகக் கொல்லவும் கொல்லப்படவும் நேரிடும் தருணங்கள் சில, ஏற்படவே செய்கின்றன. அவ்வகைத் தருணங்கள், வீரதீரப் பராக்கிரமம் நிறைந்தவை என்று கொண்டாடப்பட்டு, கற்பனாதீதக் குறியீடுகளைப் பிறப்பிக்கின்றன. ஒருவேளை, வாழ்வைப் பாதுகாக்க வேண்டும் என்ற உந்துதல் ஒரு நம்பிக்கையையோ கருத்தையோ பாதுகாப்பது என்ற மாறுபாடான செயலுக்கு இட்டுச்சென்றிருக்கலாம்.
இச்செயல், நம்பிக்கை என்பது ஒரு உயிருள்ள பொருள் என்பதாகவும், அதற்காக அவன் கொல்லவும் கொல்லப்படவும் தயாராயிருக்கிறான் என்பதாகவும், மரணத்தை எதிர்கொள்ளவும் துணிகிறான் என்பதாகவும் மனிதனை எண்ணச் செய்கிறது.
வாழ்வைப் பாதுகாக்க விழையும் உந்துசக்தியையும் மரணத்தை எதிர்கொள்ளச் செய்யும் உந்துசக்தியையும் பரிசோதித்துப் பார்ப்பதுதான், இப்போது நமது உடனடிக் காரியமாக இருக்கிறது. இவை இரண்டும், ஒரே செயலாக மாற்றம் பெறுவது எப்படி நிகழ்கிறது?
பாதுகாப்பு என்ற ஒன்றை மட்டுமே நினைத்து, மனிதன் வாழவில்லை என்றால்தான் இப்படி நிகழ முடியும். வாழ்ந்தேயாக வேண்டும் என்ற விஷயம், ஏன் அவனுக்கு முக்கியமாகிறது? இயற்கையில், அவன் ஒன்றுமற்றவனாகவே பிறந்து வளர்கிறான். இந்த வெறுமை நிலை, பின்பு ஒருவேளை, தமக்கேயுரிய நிறைவைத் தேடுவதாயிருக்கலாம். எனவே, அவன் ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொள்கிறான். நம்பிக்கை, மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட வாழ்நிலையைத் தருகிறது.
இந்நிலையானது, விசேடச் சிறப்புகளைப் பெற்றுள்ள இன்னொன்றைப் போலவோ - இன்னொருவரைப் போலவோ - ஆதல் என்பதேயாகும். இச் சிறப்புக்கான நிறைவை நோக்கிச் செல்லும்போது, வாழ்வுக்கான பாதுகாப்பை விடுத்து, நம்பிக்கையின் பாதுகாப்பை நோக்கிப் பின்வாங்குதல் நிகழ்கிறது. தற்பாதுகாப்பை நாடுவதாக, அல்லது மற்றவர்களைப் பாதுகாப்பதாகவேகூட இது இருக்கலாம். மரணத்தையும் விசாரிப்பது என்ற மிகப் புனிதமான காரியமாக இது மாறுகிறது.
ஆனால், வெறுமை என்ற - ஒன்றுமற்ற நிலை என்ற - அஸ்திவாரத்திலிருந்தே இது கட்டி எழுப்பப்படுகிறது; அப்படித்தான் இல்லையா?
(பிரமிள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம், தமிழில்: கால சுப்ரமணியம், ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பாதையில்லாப் பயணம்’ நூலிலிருந்து…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT