Published : 02 Nov 2014 12:51 PM
Last Updated : 02 Nov 2014 12:51 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இசை மேதைகள், சமயச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேரறிவாளர்கள் பலருடைய பாதம்பட்ட இடமாகும். இப்பள்ளியின் பார்வையாளர் பதிவேடே இதற்கான சான்று.
கொப்பனாபட்டி அ.மெ. மெய்யப்பச் செட்டியார் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ராமநாதன் கல்லூரி என்னும் மகளிர் பள்ளியைப் பார்த்து வந்தார். அதே போல் தம் பகுதியிலும் ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் எனக் கருதிய அவர் 1935 (பின்னாளைய ஆசிரியர் தினம்) செப்டம்பர் 5-ம் தேதி, பெண் குழந்தைகளுக்காகக் கலைமகள் கல்லூரி என்னும் பெயரில் உண்டு உறைவிடப் பாடசாலையைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் பெண் களுக்கென பிரத்யேகமாகக் கல்வி நிறுவனம் ஏற்படுத்த மிகுந்த துணிச்சல் வேண்டும்.
இது முதலில் அவரது இல்லத்தின் ஒரு பகுதியில் பெண்கள் குருகுலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. 1939-ம் ஆண்டு வாக்கில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் கலைமகள் திருவுருவத்துடன் கூடிய வழிபாட்டு மண்டபம், நூலகம், கல்லூரிக் கட்டிடம், மாணாக்கர் உறையுள், உண்டிச் சாலை, அடுக்களை, பாற்பசுச் சாலை, பண்ட சாலை, ஆசிரியைகள் தங்குமிடம், விருந்தினர் இல்லம், விளையாட்டிடம், வைத்திய சாலை ஆகிய கட்டமைப்பு வசதிகளுடன் படிப் படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல துறைக் கல்வி
இங்கு தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மட்டுமன்றி ஆங்கிலம், கணக்கு, இயற்கை நூல், பொது அறிவு, வாய்ப்பாட்டு, வீணை முதலான சங்கீதம், பின்னல், தையல், சமையல் முதலியனவும் கற்பிக்கப்பட்டுள்ளன. 3 முதல் 8 வரை ஆறு வகுப்புகளும் பின்பு கலைச்செல்வி அதற்கு மேல் கலைமணி என்னும் பெயர்களில் தலா இரண்டாண்டு வகுப்புகளும் நடை பெற்றுள்ளன.
அதே பெயர்களில் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏழு பெண் குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இப்பாடசாலைக்குப் பண்டிதமணி (11.01.1936) வந்திருந்தபோது ஐந்தாம் வகுப்பு வரை 14 பேர் பயின்று வந்துள்ளனர். ஒருமுறை திரு.வி.க. இங்கு வந்திருந்தபோது (3.11.1947) 200 பேர் படித்து வந்துள்ளனர். வெள்ளி விழாவின்போது (1960) 142 பேரும் கல்வி பயின்றுள்ளனர். தற்போது இங்கே 276 பேர் படித்து வருகின்றனர்.
அறிஞர்களின் நினைவில்
இரண்டாவது தடவையாக உ.வே.சா., கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்கு 1939-ல் இங்கு வந்துள்ளார். அப்போது அவர் ஆற்றிய உரை வெள்ளிவிழா மலரில் இடம்பெற்றுள்ளது. அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற (19.3.1961) வெள்ளிவிழாவில் தெ.பொ.மீ. (முதலில் வந்தது 12.12.1947), கி.வா.ஜ., பொள்ளாச்சி நா.மகாலிங்கம் முதலானோர் கலந்துகொண்டுள்ளனர்.
கி.வா.ஜ. முதன்முறை வந்தபோது (23.3.48) அறுசீர் விருத்தமும் அடுத்தமுறை எண்சீர் விருத்தமும் பாடியிருக்க, கிருபானந்த வாரியார் (26.6.64) நேரிசை வெண்பா பாடியுள்ளார். லேனா தமிழ்வாணன் இங்கு படித்த தன் தாயார் மணிமேகலை தமிழ்வாணன் வாயிலாகத் தான் பெற்ற தமிழறிவு குறித்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தான் வந்த தேதியை 31.6.2004 எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். (ஜூன் மாதத்துக்கு 31-ம் தேதி இல்லை) ராஜாஜி, ராய.சொக்கலிங்கம், நீ.கந்தசாமி, டாக்டர் முத்துலட்சுமி, ந.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதி, ஸங்கீத ரத்னாகரம் அரியக்குடி ராமானுஜய்யங்கார், வீணை சாம்பசிவய்யர், டாட்டன்ஹாம், சித்பவானந்தர், விபுலானந்தர், அகிலன், (சிட்டி) பெ.கோ.சுந்தரராஜன், சோமலெ, நெ.து.சுந்தரவடிவேலு, சிட்டிபாபு, வெ.சாமிநாத சர்மா, மாயாவி முதலானோர் இங்கு வருகை தந்துள்ள மற்ற பிரபலங்கள் ஆவர்.
விபுலாநந்த அடிகள் வருகைக் குறிப்பு
பார்வையாளர் பதிவேட்டில் மேற்கண்டவற்றைத் தவிர சிலரது கடிதங்களும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வி நிறுவனத்தை நேரில் பார்த்துவிட்டுச் சென்றவர்கள் தாம் கண்டு வியந்ததையும், சிலர் தாம் கேள்விப்பட்டதையும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
உ.வே.சா-வின் கடிதம்
கலைமகள் சிலை திறப்பு விழாவுக்கு வந்துசென்றவுடன் சென்னையில் இருந்து உ.வே.சா. ஒரு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி (25.04.1948) தான் கல்கத்தாவில் இருப்பதாகவும் தன்னால் பட்டமளிப்பு விழாவிற்கு வர இயலாத காரணத்தால் தனக்குப் பதிலாகத் தன் நண்பர் ரசிகமணி டி.கே.சி-யை அனுப்புவதாகவும் அவரை வைத்து விழாவை இனிதே நடத்துமாறும் தெரிவித்துள்ளார். அவரே பிறிதொருமுறை (02.09.1948) அமைச்சர் ராஜன் மற்றும் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவுக்குப் புதுடெல்லியில் இருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
என்.எஸ். கிருஷ்ணன் தன் துணைவியார் டி.ஏ.மதுரம் இங்கு வந்திருந்தபோது (09.09.1956) நடத்தப்பட்ட ஓரங்க நாடகத்தையும் அவர் மீது காட்டிய அன்பையும் நினைவுகூர்ந்து வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
குறிப்பிடத்தக்க ஆவணம்
கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் பார்வையாளர் பதிவேடு இங்கு வருகை தந்த/ கடிதம் எழுதிய உ.வே.சா. முதலிய ஜாம்பவான்களின் கருத்துகள், பாடசாலையின் அமைப்பு, பாடத்திட்டம், பிற செயல்பாடுகள், கற்பித்த ஆசிரியர்கள், கல்வி பயின்ற பெண்மணிகள் முதலிய தகவல்களை அறிவதற்கான குறிப்பிடத்தக்க ஆவணமாக விளங்குகிறது.
- நா.அருள்முருகன்,
முதன்மைக் கல்வி அலுவலர்
தொடர்புக்கு: arulnam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment