Published : 06 Jul 2019 09:19 AM
Last Updated : 06 Jul 2019 09:19 AM
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை, அதை எதிர்த்தெழுந்த ஆயுதப் போராட்டத்தின் நெருக்கடியால் ஈழத்திலிருந்து கனடாவில் தஞ்சமடைந்த தமிழ் இளைஞர்களில் சிலர் கண்ட கனவுதான் ‘காலம்’. கலை இலக்கியக் காலாண்டிதழ். தமிழின் சீரிய இலக்கிய இதழ்களின் அற்பாயுள் விதியைத் தாண்டி, ஆசிரியர் செல்வத்தின் இடையறாத முயற்சியால் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ‘காலம்’ இதழ், புகலிடத் தமிழர்களிடமும் தமிழகத்திலும் ஏற்படுத்திய செல்வாக்கு கணிசமானது. 1990 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
53-வது இதழானது மறைந்த எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், கவிஞர் செழியன் சிறப்பிதழாகச் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கவிஞர் செழியனின் நேர்காணல், நண்பர் செழியன் குறித்து ஈழக் கவிஞர் சேரனின் கவிதை, சமீபத்தில் இயல் விருதுபெற்ற எழுத்தாளர் இமையத்தின் விரிவான நேர்காணல், அகரமுதல்வன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் சிறுகதைகளுடன் வழக்கமான உள்ளடக்கக் கனத்துடன் வெளியாகியுள்ளது. இந்த இதழின் சிறந்த படைப்பாக ஷோபா சக்தி எழுதியுள்ள ‘பிரபஞ்ச நூல்’ சிறுகதை உள்ளது. சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் கதையில் கதாபாத்திரமாக வருகிறார். பிரபஞ்சனின் புத்தகம் ஒன்றும் கதாபாத்திரமாக வருகிறது. மறைந்த பிரபஞ்சனின் ஆளுமை, படைப்புலகம் குறித்து இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகளைத் தூக்கிச் சாப்பிடும்வண்ணம் படைப்பு மூலமாக ஒரு கலைஞனுக்குச் செய்யப்பட்ட புகழஞ்சலி இது. பிரபஞ்சன் தனது வாழ்நாள் முழுவதும் தனது கதைகள் வழியாக உருவகித்த ஒரு விழுமியத்தை, ஷோபா சக்தி தனது புனைவால் தொட்டு அந்தக் கலைஞனுக்கு இருதயமுள்ள ஒரு மலரை அஞ்சலியாகச் செலுத்தியுள்ளார்.
காலம்
இதழ் 53
ஆசிரியர்: செல்வம் அருளானந்தம்
விலை: ரூ.150
95000 45611
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT