Published : 06 Jul 2019 09:12 AM
Last Updated : 06 Jul 2019 09:12 AM

ரங்கநாயகம்மா புத்தகம்: அம்பேத்கர் மீதான விமர்சனமா, அவதூறா?

ரங்கநாயகம்மா எழுதி தெலுங்கில் 2000-ல் வெளிவந்த ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!’ என்ற புத்தகம் இதுவரை 10 முறை மறுபதிப்பு கண்டிருக்கிறது. இந்நூலை ஆங்கிலத்தில் பி.ஆர்.பாபுஜியும், தமிழில் கொற்றவையும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கொற்றவையின் நூலுக்கு மறுப்பாக ம.மதிவண்ணன் எழுதிய ‘அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும் உண்மைகளும்’ நூலை ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகம் வெளியிட்டிருப்பதையடுத்து, ரங்கநாயகம்மாவின் புத்தகம் தமிழ் வாசிப்புலகில் ஒரு விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

நாவல்கள், சிறுகதைகள், மார்க்ஸின் மூலதனம் நூலுக்கான அறிமுகங்கள் என 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் ரங்கநாயகம்மா. அம்பேத்கரின் சாதி தொடர்பான ஆய்வுகளைப் பற்றிய விமர்சனத்தை இந்தப் புத்தகம் மூலமாக எழுத முற்படும் ரங்கநாயகம்மா, ‘சாதியை ஒழிப்பதற்கு அம்பேத்கர் மட்டும் போதாது, மார்க்ஸியமும் தேவை’ என்று வலியுறுத்துகிறார்.

அம்பேத்கரின் நோக்கம்

இந்தியாவில் சாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் அம்பேத்கர். அரசியல் தலைவராக மட்டுமில்லாமல், இந்தியாவில் சாதியத்தின் தோற்றத்தையும் காரணங்களையும் கண்டடையும் சமூகவியல் ஆய்வுகளையும் மேற்கொண்டவர் அவர். அவருடைய ஆய்வுகள் ஒவ்வொன்றையும் தனது எளிய தர்க்கங்களால் கேள்விக்குட்படுத்த முற்படுகிறார் ரங்கநாயகம்மா. “வருண அமைப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சாதிகள் தோன்றின” என்கிற அம்பேத்கரின் கருத்தை “வருண அமைப்பின் அடிப்படை வேலைப் பகுப்பு முறை என்பதால் சாதிகளின் தோற்றத்துக்கும் வேலைப் பகுப்பு முறையே அடிப்படையாக இருந்தது என்று கொள்வதுதானே முறையானது?’ என்ற கருத்தால் ரங்கநாயகம்மா எதிர்கொள்ள முற்படுவதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

சாதியத் தோற்றம் குறித்த அம்பேத்கரின் அனுமானங்களின் மீது இப்படி அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்புவதன் வாயிலாக அம்பேத்கரின் பார்வை முழுமையானது அல்ல என்று நிறுவ முயல்கிறார் ரங்கநாயகம்மா. சமூக ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியாக திருமணம், குடும்பம், உறவுமுறைகளே இருந்துவந்திருக்கின்றன. புராணங்களை ஆதாரங்களாகக் கொண்டு, இத்தகைய குடும்ப அமைப்பு முறை எப்படியெல்லாம் நடைமுறையில் இருந்திருக்கலாம் என்று அனுமானிக்க முயல்வதுதான் அம்பேத்கரின் நோக்கம். சமூகத்தின் பெருந்தீமையை ஒழிப்பதற்காக முனைந்து நிற்கையில் அதன் மூல காரணங்களையும் ஆய்வுக்குட்படுத்த விரும்பினார் அம்பேத்கர். ஆனால், அந்த ஆய்வுகளின் முடிவுகளைப் போதாமைகள் என்று சுட்டிக்காட்டுவதன் வாயிலாக சாதிய ஒழிப்பில் அம்பேத்கர் போதுமானவர் இல்லை என்று நிறுவ முயல்வது ரங்கநாயகம்மாவின் நோக்கம்.

சாதியத் தோற்றம் தொடர்பான ஆய்வுகளைப் போலவே புத்தர், மார்க்ஸ் பற்றிய அம்பேத்கரின் ஒப்பீடு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறார் ரங்கநாயகம்மா. ஆனால், அம்பேத்கரின் நோக்கம் புத்தரையோ அம்பேத்கரையோ மறுப்பதல்ல என்பதையும், இருவரின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று உடனிசைந்தவை என்ற அம்பேத்கரின் மதிப்பீட்டையும் ரங்கநாயகம்மா தவறவிடுகிறார். “சோஷலிஸம் தவிர்க்க முடியாத ஒன்று என்பது தவறாகிவிட்டது” என்றே மதிப்பிடுகிறார் அம்பேத்கர். பொருளாதார அடிப்படையில் மட்டுமே சமூகப் பாகுபாடுகளை அணுகுவதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டத்தை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்.

நீண்ட காலம் தொடரும் கேள்வி

மார்க்ஸியர்களுக்கும் அம்பேத்கரியர்களுக்கும் பொதுவானதும் விவாதத்துக்குரியதுமான புள்ளி இதுதான். இந்தியாவில் நிலவும் சமூகப் படிநிலை அமைப்பைப் பொருளாதாரக் கோணத்திலிருந்து அணுகுவதா, இல்லை சமூகக் கண்ணோட்டத்திலிருந்து அணுகுவதா என்ற கேள்வி நீண்ட காலமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து அணுகுவதே சரியானது என்பது மார்க்ஸியர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், மார்க்ஸும் எங்கெல்ஸும் ஐரோப்பிய நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தையே தங்களது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். இந்திய சமுதாயமோ முற்றிலும் வேறானது. எனவே, இந்திய உழைக்கும் மக்களின் வர்க்க நிலையைப் பற்றி விவாதிக்கும்போது, அதைக் குறித்த அம்பேத்கரிய ஆய்வுகள் தவிர்க்க முடியாதவை. மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் பேசினால் அம்பேத்கர் தவிர்க்க முடியாதவர். அதேவேளையில், உழைக்கும் மக்கள் என்ற அணிதிரட்டலின் கீழாக சாதியக் கட்டமைப்பின் இறுக்கத்தையும் தளர்த்த முடியும்.

ரங்கநாயகம்மாவின் புத்தகத்தில் உள்ள – குறிப்பாக, தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள - ஓட்டைகளைச் சுட்டிக்காட்டும் மதிவண்ணன் ‘சூத்திரர்கள் யார்?’ என்ற அம்பேத்கரின் ஆய்வு முடிவு தற்போதைய தரவுகளுக்கு மாறாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார். இனி வரும் காலங்களில் கிடைக்கும் புதிய தரவுகள் அம்பேத்கரின் ஆய்வு முடிவுகளில் சிலவற்றை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்தவும்கூடும். ஆனால், அம்பேத்கர் எந்த நோக்கத்துக்காக இந்த ஆய்வுகளை மேற்கொண்டாரோ, அந்த நோக்கத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அம்பேத்கரின் ஆய்வுகள் புலமைக்காய்ச்சல்கள் இல்லை. சமுதாய மறுகட்டமைப்புக்கான திறவுகோல்கள்.

கருத்தொருமித்த உரையாடல் அவசியம்

அம்பேத்கர் வழக்கமான ஒரு சமூக ஆய்வாளராக மட்டுமே இருந்திருந்தால், ரங்கநாயகம்மாவின் விமர்சனமும் அதற்கான மறுப்பும் ஆய்வு வட்டத்துக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கும். தலித்துகள் தங்களது விடுதலைக்கான தத்துவமாக முன்னிறுத்தும் ஆளுமை என்பதால், அம்பேத்கரைப் பலவீனப்படுத்துவதை, அவதூறாகவும் அரசியல் சதியாகவும் கணிக்கிறார் ம.மதிவண்ணன். புத்தகத்தின் சில இடங்களில் வெளிப்படும் தொனி அவருடைய கோபத்தில் உள்ள நியாயத்தை வெளிப்படுத்துகிறது.

அம்பேத்கரின் போதாமைகள் என்று சொல்வதன் நோக்கமே அவர் மீது அவதூறு பரப்புவதுதான் என்றும், சமூகவியல் ஆய்வுத் தளத்தில் அம்பேத்கரை நிராகரிப்பது என்பது சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது என்றும் கருதும் ம.மதிவண்ணன், அவதூறுக்கான மறுப்பு என்றே தனது நூலை அடையாளப்படுத்துகிறார். ரங்கநாயகம்மாவையும் அவரைத் தமிழில் மொழிபெயர்த்த கொற்றவையையும் ‘டுபாக்கூர் மார்க்ஸிஸ்ட்டுகள்’ என்கிறார் மதிவண்ணன். அப்படியென்றால், ‘ஒரிஜினல் மார்க்ஸிஸ்ட்டு’களோடு உரையாட மதிவண்ணன் தயாராகத்தான் இருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

மார்க்ஸியவாதிகளுக்கும் அம்பேத்கரியவாதிகளுக்கும் இடையே அப்படியொரு கருத்தொருமித்த உரையாடல்தான் இன்றைய சூழலில் அவசியமாகயிருக்கிறது. மாறி மாறி சேறு வாரியிறைத்துக்கொள்ளும் அக்கப்போர் சண்டைகளுக்கான அவசியம் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:

புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது!

மார்க்ஸ் அவசியத் தேவை!

ரங்கநாயகம்மா

தமிழில்: கொற்றவை

ஸ்வீட் ஹோம் பப்ளிகேஷன்ஸ்,

நூல் விநியோகம்: குறளி பதிப்பகம்

 95001 50047 விலை: ரூ.80

--------------------------------------------------------------------------------

அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும் உண்மைகளும்

ம.மதிவண்ணன்

கருப்புப் பிரதிகள், சென்னை-5,

: 94442 72500 விலை: ரூ.280

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x