Published : 07 Jul 2019 09:16 AM
Last Updated : 07 Jul 2019 09:16 AM
தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாற்றூர் ராமகிருஷ்ணன், கேசவதேவ், வைக்கம் முகம்மது பஷீர், எஸ்.கே.பொற்றேகாட், எம்.டி.வாசுதேவன் நாயர், பால் சக்கரியா, ஓ.வி.விஜயன், புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.கோவிந்தன் போன்ற மலையாள இலக்கியத்தின் மூத்த ஆளுமைகளின் சாகாவரம் பெற்ற படைப்புகளுடனும் எம்.முகுந்தன், சேது, உன்னி.ஆர், என்.எஸ்.மாதவன் போன்ற பிந்தைய தலைமுறைக் கலைஞர்களின் படைப்புகளுடனும் ஒரு வாசகனாக நான் கொண்டிருந்த உறவு இப்போது வேறொரு பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. நான் அவர்களது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி நடக்கும் அவர்களது சகபயணிகளுள் ஒருவனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.
என் கதைகளின் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவருவது பற்றிய தன் விருப்பத்தைத் தெரிவித்தார் குஞ்ஞாம்பு. நான் அவருக்கு ‘பலி’ முதல், ‘நட்ராஜ் மகராஜ்’ வரையிலான எனது எல்லாப் புத்தகங்களையும் அனுப்பித் தந்தேன். ஏறத்தாழ இரண்டாண்டு காலம் வரை நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். இப்போது ‘தில்லிக்குச் செல்லும் ரயில் வண்டி’ என்னும் பெயரில் எனது ஐந்து கதைகள் அடங்கிய தொகுப்பு வந்திருக்கிறது. ஜூலை 2 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்ற என் புத்தகத்தின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா பல ஆச்சரியங்களை எனக்குத் தந்தது.
கேரளம் தந்த ஆச்சரியங்கள்
ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சாலையொன்றின் பெயர்ப் பலகையில் தென்பட்ட வைக்கம் முகம்மது பஷீர் ரோடு, மிட்டாய்த் தெருவில் தெருவை அடைத்து நிற்கும் பொற்றேகாட்டின் பிரம்மாண்ட சிலை, விழா நடைபெற்ற நவதரங்கம் அரங்கு, அதில் குழுமியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், விழாவின் முடிவில் உலகப் புகழ்பெற்ற பார்வதி பாவுலின் கீழ் இசைப் பயிற்சிபெற்ற சாந்திப்ரியாவால் நிகழ்த்தப்பட்ட பாவுல் சங்கீதம் என்னும் கலை நிகழ்வு. எல்லாமும் பரவசத்தைத் தந்தன.
விழாவுக்குப் பெருமளவில் ஊடகவியலாளர் களும் தொலைக்காட்சி செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். மறுநாள் மலையாள இலக்கிய உலகின் சமகால ஆளுமைகள் சிலரைச் சந்தித்து உரையாடினேன். பேச்சில் அதிகம் இடம்பெற்ற ஆளுமை பஷீர்.
பஷீரின் 25-ம் நினைவு ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்தது கேரளம். பஷீரின் நினைவுநாள் கொண்டாட்டங்களுக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மொழிபெயர்ப்பாளர் குஞ்ஞாம்பு ஏற்றிருந்தார். 6-ம் தேதி போப்பூரில் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்கு வருகை தருபவர் மலையாள இலக்கியத்தின் முன்னோடி ஆளுமைகளில் ஒருவரான
எம்.டி.வாசுதேவன் நாயர். நான் பஷீரையும் வாசுதேவன் நாயரையும் அவர்களது இல்லத்துக்குச் சென்று சந்திக்க விரும்பினேன்.
பஷீர் கொண்டாட்டங்கள்
வாசுதேவன் நாயர் அரிதாகவே பார்வையாளர்களைச் சந்திக்க விரும்புபவர் என்றார்கள். 3-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வாசுதேவன் நாயரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அன்போடும் தோழமையோடும் வரவேற்ற வாசுதேவன் நாயர், நல்ல மனநிலையில் இருந்தார். பஷீரைப் பற்றியும் எம்.கோவிந்தனைப் பற்றியும் கொஞ்சம் பேசினோம். பிறகு, அவரது இல்லத்தை, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களை, அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளைப் பார்த்தேன். பிறகு, தமிழ் நவீன இலக்கியம் குறித்தும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தனது படைப்புகள் குறித்தும் பேசினார். குறிப்பாக, ‘இரண்டாம் இடம்’ நாவல் குறித்து. நான் சமீபத்தில் வாசித்திருந்த அவரது ‘நாலுகட்டு’, ‘மஞ்சு’ குறித்துச் சொன்னேன்.
இரவு பத்து மணிக்கு மேல் போப்பூர் சுல்தானின் அரண்மனைக்குப் போனோம். பஷீரின் மகன் அனீஷ், அவரது மகள் வயிற்றுப் பேரனும் எங்களை வரவேற்று பாத்துமாவும் அவளுடைய ஆடும் இடம்பெற்றிருந்த தைல வண்ண ஓவியம் பதிக்கப்பட்டிருந்த வரவேற்பறைக்கு அழைத்துச்சென்றார்கள். பஷீர் பற்றிக் கேட்பதற்கு எங்களுக்கு நிறைய இருந்தன. பேசிக்கொண்டே அவர் வாழ்ந்த அறைக்குச் சென்றோம். நான் அவரது சாய்வு நாற்காலியை, அதன் எதிரே விரித்து வைக்கப்பட்டிருந்த அவரது கையெழுத்துப் படிகளை, அவரது மூக்குக் கண்ணாடியை, அவர் விட்டுச்சென்ற துண்டை, சுவரெங்கும் தென்பட்ட ஓவியங்களை, வெவ்வேறு காலகட்டங்களில் வந்த அவரது நூல்களின் படிகளை இன்னும் அந்த அறைக்குள் சுழன்றுகொண்டிருக்கும் அவரது மூச்சுக்காற்றைச் சுவாசித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன்.
பேருருவாய் பொற்றேகாட்
அவரது அடையாளங்களில் ஒன்றாக அமைந்துவிட்ட மாமரத்தைப் பார்க்கவும், அதைத் தீண்டவும், அதைப் பற்றிக்கொண்டு சில நிமிடங்கள் நிற்கவும் விரும்பினேன். அனிஷ் ஒரு டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு இருள் சூழ்ந்த அந்த மாமரத்துக்கு அழைத்துச்சென்றார். என்னை அதற்குக் கீழே தனித்து விட்டுவிட்டு அவர்கள் விலகியபோது, உயர்ந்த அந்த மாமரத்தைப் பற்றி பஷீரைத் தீண்டினேன். பஷீரின் படைப்புகளையும், அவரது உலகில் நடமாடிய மனிதர்களின் பரிதவிப்புகளையும் நினைவுகூர்ந்தபடி அங்கிருந்து கிளம்பி மிட்டாய்த் தெருவில் பேருருவாய்த் தென்பட்ட பொற்றேகாட்டின் அற்புதமான சிலையை அடைந்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது.
தூறல்களினூடாகவும் மஞ்சள் நிற ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்த விளக்குகளினூடாகவும் அந்தத் தருணத்திய கோழிக்கோடு அற்புதமாக விளங்கியது. பொற்றேகாட் வாழ்ந்த மிட்டாய்த் தெரு ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டிருந்தது. எதிரே தென்பட்ட சுவர்களில் பொற்றேகாட்டின் கையெழுத்துகள் அடங்கிய பித்தளைத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன. ஈரம் படிந்த சாலையில் வரிசையாகத் தென்பட்ட இரும்பாலான பெஞ்சுகளில் வைக்கம் முகம்மது பஷீரும் பொற்றேகாட்டும் அளவளாவிக்கொண்டிருப்பது பற்றிய கற்பனைகளில் மூழ்கத் தொடங்கியபோது மழை வலுத்தது. அங்கிருந்து புறப்பட்டு ரயில்நிலையத்தை அடைந்தபோது மனம் ததும்பியது. கோழிக்கோட்டிலிருந்து என்னை ஈரோட்டுக்கு அழைத்துவந்த அந்த ரயிலில் ஆழ்ந்த பெருமூச்சுடன் ஏறி அமர்ந்தேன்.
- தேவிபாரதி, ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: devibharathi.n@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT