Published : 30 Jun 2019 07:51 AM
Last Updated : 30 Jun 2019 07:51 AM
காந்திய மனோபாவமும் மார்க்ஸியப் பிடிமானமும் இந்தியத் தத்துவ மரபின் ஞானமும் இசைந்து உறவாடிய படைப்பு மனம் கொண்டவர் சார்வாகன். இத்தன்மையான தமிழ்ப் படைப்பாளிகளில் தனித்துவமான படைப்பு மேதை. தமிழக கம்யூனிஸக் கலை இலக்கிய அமைப்புகளால் பெரிதும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய படைப்பு சக்தி. ஆனால், அப்படியேதும் நிகழ்ந்துவிடவில்லை. மாறாக, எந்தவொரு சித்தாந்தப் பிடிமானமும் ஒரு படைப்பாளியை இயக்கும் சக்தியாக இருக்கலாம். ஆனால், படைப்பு கலைத்துவம் கொள்வதுதான் கலை இலக்கியத்தின் அடிப்படை என்று கருதிய கலை இலக்கியவாதிகளால் கண்டறியப்பட்டவர் சார்வாகன். சி.சு.செல்லப்பா, க.நா.சு., வெங்கட் சாமிநாதன், நகுலன், சுந்தர ராமசாமி போன்ற கலைத்துவப் படைப்பாளிகளே இவருடைய அருமையை அறிந்து போற்றினர்.
தொழுநோய் மருத்துவத்தில் மகத்தான கண்டுபிடிப்பும், உலகப் பிரசித்தியும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்த இவர், தன் வாழ்வியக்கத்தின் பிரதான தேர்வாகத் தொழுநோய் மருத்துவ சேவையையே கொண்டிருந்தார். அதேசமயம், படைப்பாக்கம் என்பது அவரது படைப்பூக்கமிக்க மற்றுமொரு செயல் முனைப்பாக இருந்தது. அவர் எழுதியவை அதிகமில்லை. எனினும், பெறுமதியானவை.
நவீனத் தமிழ் இலக்கியத்துடனான என் உறவின் தொடக்கமான 1973-லேயே சார்வாகனின் கதைகளோடு அறிமுகம் நிகழ்ந்துவிட்டது. வாசகர் வட்டம் வெளியிட்ட ‘அறுசுவை’ என்ற குறுநாவல் தொகுப்பு, எனது எம்ஏ பாடத்திட்டத்தில் இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த சார்வாகனின் ‘அமரபண்டிதர்’ என்ற அருமையான குறுநாவல்தான் நான் முதன்முதலாகப் படித்த சார்வாகன் படைப்பு. குறுநாவல் என்ற வடிவத்தின் கச்சிதமான வெளிப்பாடு. கால மாற்றத்தின் சரிவுகளை மிகுந்த ஆதங்கத்தோடு புனைவாக்கியிருந்த படைப்பு. அன்று மனதில் பதிந்த சார்வாகன் பெயர் அடுத்தடுத்து அவரது படைப்புகளோடு உறவுகொள்ள வழிவகுத்தது.
1968-ல் நகுலனால் கொண்டுவரப்பட்ட ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பில் இடம்பெற்றிருந்த, ‘சின்னூரில் கொடியேற்றம்’, ‘உத்தரீயம்’ என்ற அவரது இரண்டு கதைகளை வாசித்திருந்தேன். 1971-ன் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது ‘கனவுக் கதை’ அன்று என்னை வெகுவாக ஆகர்ஷித்திருந்தது. இக்கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாக சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்திருந்தார். மேலும்,
சி.சு.செல்லப்பா தொகுத்த ‘புதுக்குரல்கள்’ தொகுப்பிலும், நகுலனின் ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பின் கவிதைப் பகுதியிலும் ஹரி ஸ்ரீனிவாசன் என்ற இயற்பெயரில் வெளிவந்திருந்த கவிதைகளையும் வாசித்திருந்தேன்.
1983 மத்தியில் ‘க்ரியா’வில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். 1984-ன் பிற்பாதியில் ஒருநாள் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் என்னிடம், “சார்வாகனின் கதைகளைக் கொண்டுவரும் விருப்பத்தோடு அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் கதைகளைச் சேகரித்து அனுப்பிவைப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் அனுப்பிய பாடில்லை. நீங்கள் அவரை நேரில் சந்தித்துக் கதைகளைப் பெற முடியுமா பாருங்கள். திலீப்குமாருக்கு அவரைத் தெரியும் என்பதால், இருவருமாகப் போய்வாருங்கள்” என்றார். அந்த வாரத்தில் ஒருநாள் காலை 7 மணியளவில் செங்கல்பட்டுக்கு திலீப்குமாரும் நானும் பஸ் ஏறினோம்.
அப்போது செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் சார்வாகன் இயக்குநராக இருந்தார். அவர் மருத்துவமனை செல்லத் தயாராகி எங்களுக்காகக் காத்திருந்தார். புத்தகங்களும் இதழ்களும் நிறைந்திருந்த மாடி அறைக்கு எங்களைக் கூட்டிச்சென்றார். “ஏதாவது கிடைக்கிறதா பாருங்கள். நான் ஹாஸ்பிடல் போய்விட்டு வந்துவிடுகிறேன். மதியம் சேர்ந்து சாப்பிடலாம். அதன் பிறகு உங்களோடு இருக்க முடியும்” என்றார். நாங்கள் இதழ்களில் கதைகளைத் தேட ஆரம்பித்தோம். தேடலுக்கிடையே அவ்வப்போது ஒன்று அகப்பட, அது தந்த உற்சாகத்தில் தேடல் தொடர்ந்தது.
12 மணியளவில் சார்வாகன் திரும்பிவந்தார். சாப்பாட்டுக்குப் பின் அவரும் மாடிக்கு வந்து உதவினார். அநேகமாக அவர் கைவசமிருந்த இதழ்களை அலசி முடித்த பின்பு, பல கதைகள் வந்த இதழ்கள் அவர் வசமில்லை என்பது தெரிந்தது. “பிரசுரமான கதைகளையும் அவை வெளிவந்த இதழ்களையும் தெரிவிக்க முடிந்தால், அவற்றை நாங்கள் சேகரித்துக்கொள்கிறோம்” என்றேன். அவரால் அவற்றைச் சொல்ல முடிந்தது. பயணம் திருப்திகரமாக அமைந்தது. மாலையில் எங்களை பஸ் ஏற்றிவிட்டார்.
பல கதைகள் ‘தீபம்’ இதழில் வெளியாகியிருந்தன. ‘தீபம்’ அலுவலகம் சென்று, அக்கதைகளைப் பிரதி எடுத்தவர் பிரபஞ்சன். அச்சமயத்தில் பிரபஞ்சன் ஓரிரு மாதங்கள் ‘க்ரியா’வில் பணியாற்றினார். முதலில், ‘க்ரியா’வின் அச்சுக் கோப்பகத்தில் பிழை திருத்துபவராகச் சில நாட்கள் இருந்தார். அது அவருக்குச் சரிவராததால், இந்தப் பணியை மேற்கொண்டார். அநேகமாகக் கதைகள் சேகரிக்கப்பட்ட பின்பு, அவற்றிலிருந்து ஒரு தொகுப்புக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். அதைத் தொடர்ந்து, சார்வாகன் ஒருநாள் ‘க்ரியா’ வந்தார். நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த கதைகளின் பட்டியலைப் பார்த்தார். ஓரிரு கதைகளைச் சேர்க்கவும், அதேசமயம், எங்கள் தேர்வில் இருந்த ‘வளை’ கதையை நீக்கிவிடவும் விரும்பினார். அது எனக்கு மிகவும் பிடித்த கதை. கனவுத் தன்மையும் குறியீட்டு அம்சமும் மேவிய அருமையான கதை. ஆனால், அக்கதை காஃப்காவின் ‘த பர்ரோ’ (The Burrow) கதையின் நகல் என்பதாக அது வெளிவந்த காலத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. தலைப்பும் ஒன்றாக அமைந்துவிட்டது. அக்கதையில் காஃப்கா கதையின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், தனித்துவமான கதை என்பது எங்கள் எண்ணமாக இருந்தது.
“நான் ‘வளை’ எழுதிய சமயத்தில் காஃப்காவின் அந்தக் கதையைப் படித்திருக்கவில்லை. அது இத்தகைய விமர்சனத்துக்கு ஆளான பின்புதான் படித்துப் பார்த்தேன். அதன் சாயல் இருந்தாலும் என் கதை வேறானதுதான். ஆனாலும், இந்த விமர்சனத்துக்குப் பிறகு அது தொகுப்பில் இடம்பெற வேண்டாம்” எனத் தீர்மானமாகச் சொன்னார். அவர் விருப்பப்படி அது நீக்கப்பட்டது. சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது கதைகளின் முழுத் தொகுப்பிலும் அது இடம்பெறவில்லை. அக்கதையை அவர் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். பழிக்குக் கூசும் ஒரு மனதுக்கு மட்டுமே இது சாத்தியம். சார்வாகனின் முதல் தொகுப்புக்கான இந்த வேலைகளெல்லாம் 1984-85-ல் நடந்தன. ஆனால், அவரது கதைகளின் முதல் தொகுப்பான ‘எதுக்குச் சொல்றேன்னா...’ 18 கதைகள் அடங்கியதாக, நான் ‘க்ரியா’விலிருந்து விலகிச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1993-ல் வந்தது. அன்று ஒரு புத்தகத்தின் பெறுமதிக்கு ‘க்ரியா’ வெளியீடென்பது சான்றாக இருந்தது. அதுபோன்றே அவரது கதைகள் பலவும் காலத்தைக் கடந்து பயணிக்கும் பேராற்றல் கொண்டிருந்தன.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT