Published : 05 Aug 2017 10:48 AM
Last Updated : 05 Aug 2017 10:48 AM
ஈ
ரோட்டைச் சுற்றிலும் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான புத்தகக் காதலர்களை வரவேற்கத் தயாராகிவிட்டது ஈரோடு. மக்கள் சிந்தனைப் பேரவை எடுத்த முயற்சி, ஈரோடு புத்தகத் திருவிழா. கடந்த 12 ஆண்டுகளில், அளப்பரிய வளர்ச்சி பெற்று, இந்த ஆண்டு 160 முன்னணி பதிப்பகத்தாரின் 230-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் வாசகர்கள் வருகைக்காக ஈரோடு புத்தகத் திருவிழா காத்திருக்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்க்கும் சக்தி படைத்துள்ளது ஈரோடு புத்தகத் திருவிழா. கடந்த ஆண்டுகளில் ரூ.7 கோடி என்ற விற்பனை இலக்கைத் தொட்டுள்ள ஈரோடு புத்தகக் கண்காட்சி, இந்த ஆண்டு அதனை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், பல்வேறு பதிப்பகத்தார் தங்களது புதிய நூல்களை வெளியிடுகின்றனர். அதற்கென தனி அரங்கமும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய, ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’ இந்தத் திரு விழாவின் சிறப்பம்சம். இதில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு, தங்களது அனுபவங்களை வெளிப்படுத்த நாள்தோறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இத்துடன், தங்களின் ஆதர்ச எழுத்தாளர்களை, படைப்பாளிகளைப் பார்க்க வேண்டும் என்ற வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் வகையில், ‘படைப்பாளர் மேடை’ என்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா நடக்கும் 12 நாட்களிலும், பிரபல எழுத்தாளர்களுடன் வாசகர்கள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சமான சிந்தனை அரங்கில் பல்வேறு துறைகளின் புகழ்பெற்ற ஆளுமைகள் நாள்தோறும் கருத்துரை வழங்கவுள்ளனர். கவிஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 10-ம் தேதியன்று ‘கவிதைத் திருவிழா’ நடக்கிறது. மேலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளரைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது (ஒரு லட்ச ரூபாய் பரிசு) வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. ‘இல்லந்தோறும் நூலகம்’, ‘நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்’ என்ற முழக்கத்தோடு, புத்தகக் காட்சி குறித்து ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்குத் தேவையான அறிவியல், இலக்கியம், விஞ்ஞானம், கணினித் துறை உள்ளிட்ட துறை நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கவுள்ளது. ரூ.250-க்கு மேல் புத்தகங்களை வாங்கும் மாணவர்களுக்கு ‘புத்தக ஆர்வலர்’ என்ற பாராட்டுச் சான்று வழங்கி மக்கள் சிந்தனைப் பேரவை கெளரவிக்கிறது.
ஆகஸ்ட் 4 தொடங்கி 15 வரையிலான 12 நாட்களும் ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானம் புத்த கக் காதலர்களால் நிரம்பி வழியப் போகிறது. ‘உண்மை யான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை’ என்று ஆஸ்கர் வைல்டு கூறியதை ஈரோடு வாசகர்கள் நிரூபிக் கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT