Published : 22 Aug 2017 06:08 PM
Last Updated : 22 Aug 2017 06:08 PM
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் இழந்த காதலை நினைத்தபடியே மனதுக்குள் வருந்திக்கொள்வது இயல்பே. சிலர் நிறைவேறாத தனது முதற்காதலை நினைத்து ஏங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். திரும்ப ஒருமுறை அந்தப் பெண்ணை அல்லது அந்த ஆணை சந்தித்துவிட முடியாதா என ஏக்கம் கொண்டிருக்கிறார்கள். விழித்த பின்பு கனவுக்குள் திரும்பப் போவது எளிதா என்ன?!
ஒருவேளை, சந்தர்ப்பவசமாக சந்தித்தால்கூட அது சந்தோஷமான நிகழ்வாக இருப்பது இல்லை. நிரப்பவே முடியாத இடைவெளி அல்லவா அது! காதல் விசித்திரமானது. யாரை, எப்போது தீண்டும் என, எவராலுமே கணிக்க முடியாது. இலக்கியத்தில் காதலின் துயரமே அதிகம் எழுதப்பட்டுள்ளது. திரையில், பாடல்களில், நினைவுகளில் காதலின் வேதனையே திரும்பத் திரும்பப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
தோற்றுப்போன காதலின் குறியீடு - தேவதாஸ். நாகேஸ்வர ராவ் நடிப்பில் அற்புதமாக உருவாக்கப்பட்ட ‘தேவதாஸ்’ மறக்க முடியாத திரைப்படம். அப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, மரணத்தின் முன்பாக பார்வதியை ஒருமுறை காண விரும்பி, ரயிலைவிட்டு இறங்கி வரும் தேவதாஸின் கடைசி நிமிடங்கள்தான்.
பார்வதியைக் காண விரும்பும் தேவதாஸ், ரயிலைவிட்டு அவசரமாக இறங்கி, மழையோடு அவளது ஊரைத்தேடி மாட்டுவண்டியில் செல்கிறான். வண்டி சகதியில் மாட்டிக்கொள்கிறது. மழையில் நனைகிறான். உடல் தடுமாடுகிறது. மூச்சு முட்டுகிறது. தட்டுத் தடுமாறி பார்வதியின் வீட்டின் முன்புறம் உள்ள மரத்தின் அடியில் வண்டிக்காரனால் படுக்க வைக்கப்படுகிறான்.
தேவதாஸின் எதிரே சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னால் பார்வதி இருக்கிறாள். அவன் கதவைத் தட்டவில்லை. அவளைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. மரணத்தருவாயில் மவுனமாக அவளது வீட்டை வெறித்துப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான். மனசுக்குள் அவளது நினைவு ஒளிர்கிறது. பார்வதியைச் சந்திக்காமலே தேவதாஸ் இறந்தும்விடுகிறான். காதலின் மீளாத் துயரம் பார்வையாளர்களின் மனதை உருக்கிவிடுகிறது.
சரத் சந்திரர் எழுதிய ‘தேவதாஸ் நாவல்’ 1917-ல் வெளியானது. இதைப்போலவே காதலின் துயரைப் பேசிய சிறுநாவல்களாக மூன்றைச் சொல்வேன். ஒன்று, வைக்கம் முகமது பஷீரின் ‘பால்யகால சகி’. 2-வது, கவிஞர் கதேயின் ‘இளம் வெர்தரின் துயரங்கள்’, 3-வது பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’. இந்த மூன்றும் நிறைவேறாத காதலின் துயரத்தைச் சொல்கின்றன. இன்று காதலை வெறும் உடல் கவர்ச்சியாக, விளையாட்டாக, பொழுதுபோக்காகக் கருதும் இளம் தலைமுறை உருவாகிவிட்டது. காவியக் காதல்கள் எல்லாம் கேலிப் பொருளாக மாறிவிட்டன. உண்மையில் காதல் வெறும் பொழுதுபோக்கு இல்லை. ஏமாற்று நாடகமும் இல்லை. தன் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் துணையைக் கண்டறிவதே காதல். படகும் துடுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போன்றதே காதல்!
இன்று, காதல் அரசியலாகிவிட்டது. இளம் காதலர்கள் பண்பாட்டின் பெயரால், சாதிய, மத துவேஷத்தால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பொதுவெளியில் காதலர்களைத் தடியால் அடித்துத் துன்புறுத்தும் வெறியர்கள் பெருகிவிட்டார்கள்.
சமீபத்தில் இணையத்தில் அப்படி ஒரு வீடியோவை கண்டேன். ஓர் இளம்பெண் காதலிக்கிறாள் என்பதற்காக தெருவில் நிறுத்திவைத்து, கட்டையால் மாறி மாறி அடிக்கிறார்கள். அவள் துடிக்கிறாள். அலறுகிறாள். அடிப்பவர்களை சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஒருவரும் உதவி செய்யவில்லை. அந்தப் பெண்ணை அடித்து, சித்ரவதை செய்பவர்கள் அவளது குடும்பத்து மனிதர்கள் இல்லை. கலாச்சாரக் காவலர்களாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் பொறுக்கிகள்தான் அவர்கள். அந்தப் பெண்ணுடைய குரல் இந்தியாவின் மனசாட்சியை நோக்கிய கூக்குரலாகவே இருக்கிறது. இதுதானா பெண்மையைப் போற்றும் லட்சணம்?
இழந்த காதலின் வலியை மனிதர்கள் மட்டும் உணர்வதில்லை; பொருட்களும்கூட உணர்கின்றன எனக் கூறுகிறது ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் கதை.
ஒரு வீட்டின் இழுப்பறைக்குள் ஒரு பந்தும், பம்பரமும் ஒன்றாக இருந்தன. அழகான பந்தின் மீது பம்பரம் காதல் கொண்டது. அது ஆசையோடு பந்திடம் சென்று, ‘‘நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோமா?’’ எனக் கேட்டது.
அதற்கு பந்து ‘‘நீ ஒன்றும் அவ்வளவு அழகாக இல்லை. உன் உருவம் கேலிக்குரியதாக இருக்கிறது!’’ என்றது.
இதனால் பம்பரம் கவலைகொண்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பம்பரத்தை வெளியே எடுத்த சிறுவன், அதற்கு அழகான வண்ணம் தீட்டிச் சுழலவிட்டான். புதிதாக உருமாறிய பம்பரம் ஆசையோடு மீண்டும் பந்திடம் சென்று, ‘‘நீ துள்ளக்கூடியவள். நான் நடனமாடக்கூடியவன். நமக்குள் நல்ல பொருத்தம் இருக்கிறது. இப்போது சொல், நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?’’ என்று கேட்டது.
இதைக் கேட்ட பந்து சொன்னது: ‘‘உண்மையில் நான் ஒரு குருவியை விரும்புகிறேன். ஒருநாள் சிறுவன் என்னை ஆகாசத்தில் வீசியபோது ஒரு குருவியைக் கண்டேன். அது ஆசையோடு ‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’ எனக் கேட்டது. எனக்கும் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்த காரணத்தால் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆகவே, உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றது.
இதைக் கேட்ட பம்பரம் மனவருத்தம் அடைந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் அந்தச் சிறுவன் பந்தை எடுத்து எறிந்து எறிந்து விளையாடிக்கொண்டிருந்தான். ஒருமுறை எறிந்தபோது வானில் உயரப் போன பந்து எங்கோ விழுந்து காணாமல் போய்விட்டது.
‘அந்தப் பந்து நிச்சயம் குருவியின் கூட்டுக்குள்தான் போய் விழுந்திருக்கும். நிச்சயம் அந்தக் குருவியை பந்து திருமணம் செய்துகொண்டிருக்கும்’ என நினைத்தது பம்பரம். அன்று முதல் இழந்த தன் காதலை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டே இருந்தது பம்பரம். காலம் மாறியது. பம்பரம் பயன்படுத்தி தூக்கி வீசி எறியப்பட்டது. ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த பம்பரம், அங்கே அழுக்கேறி கிழிந்த நிலையில் உள்ள பந்து ஒன்றை கண்டது. அது, தான் காதலித்த அதே பந்துதான் என்பதைக் கண்டுகொண்டது.
பம்பரத்துக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்திருக்கும் என நம்பிய பந்து, இப்படி குப்பையில் கிடக்கிறதே என வருத்தம் கொண்டது.
அப்போது பம்பரத்திடம் பந்து சொன்னது: ‘‘வானில் இருந்து சாக்கடையில் தவறி விழுந்து, சிக்கி சின்னாபின்னமாகி என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. சாக்கடை நீரில் நனைந்து ஊறிப்போய், என் உருவமே மாறிவிட்டது. இப்போது என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. ஆசைப்பட்டதை நான் அடையவில்லை. இவ்வளவுதான் என் வாழ்க்கை!’’ என்றது.
அதைக் கேட்டு பம்பரம் வருந்தியது. தான் விரும்பிய பந்துதான் என்றாலும் குப்பையில் கிடந்து அழுக்கேறி அழிந்துகொண்டிருக்கும் அதை என்ன செய்வது எனப் புரியவில்லை. பம்பரம் தன் பழைய காதலைப் பற்றி பேசவே இல்லை என கதை முடிகிறது.
பம்பரமும் பந்தும் காதலிக்கிற கதைகூட துயரத்தில்தான் முடிகிறது. வாழ்க்கை எல்லோரது கனவுகளையும் நனவாக்கிவிடுவதில்லை. எத்தனையோ பேர் நிறைவேறாத காதலை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். சிலரோ, ஆசை ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டு இப்போது அதன் அருமை உணராமல் மோசமாக நடந்துகொள்கிறார்கள்.
‘இட் இஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப்’ என்ற ஹாலிவுட் படம் இணையத்தில் கிடைக்கிறது. 1946-ல் வெளியான இந்தப் படம் நாம் பிறந்ததற்கு என்ன காரணம் இருக்கிறது என்பதை கண்டறிய முயற்சிக்கும் ஒருவனது கதையை விவரிக்கிறது. வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லும் உன்னதமான திரைப்படம் அது.
வாழ்வின் உண்மைகளைதான் கதைகளும் பேசுகின்றன. கதைகளில் படித்து, காதலைக் கொண்டாடும் பலர் நிஜவாழ்வில் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவது கண்டிக்க வேண்டியதே!
இணையவாசல்:
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் கதைகளை வாசிக்க http://hca.gilead.org.il/
- கதைகள் பேசும்…
எண்ணங்களைப் பகிர:writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT