Last Updated : 13 Aug, 2017 11:14 AM

 

Published : 13 Aug 2017 11:14 AM
Last Updated : 13 Aug 2017 11:14 AM

ஓநாய்கள் இல்லாத நிலத்தில் எலிகள்தான் அரசர்கள்!

மார்க்ஸிய ஆய்வாளர் கோ. கேசவனிடம் மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்துவிட்டுப் பரவசமாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் கேட்டேன். “மொழிபெயர்ப்பில படிக்கும்போதே இப்படியிருக்கே ரஷ்ய மொழியில படிச்சா எப்படி இருந்திருக்கும் தோழர்?” கேசவன் சலனமில்லாமல் இப்படி பதில் சொன்னார் “அதனாலதான் தோழர் அங்க புரட்சி வந்துச்சு.”

தமிழில் மொழிபெயர்ப்பை வாசிப்பதென்பது கண்ணிவெடி பதிக்கப்பட்ட நிலத்தில் நடப்பதற்கு ஒப்பானது. 90% கண்ணிவெடிகள் நம் கால்களை இல்லாதாக்கிவிடும். அரிதாகவே நாம் முழுதாய்ப் போய்ச்சேர்வோம்.

ஒரு நூலைப் பற்றி ஆங்கிலத்திலோ, வேறு மொழியிலோ வாசித்ததை யாரேனும் பரவசமாக நம்மிடம் சொல்ல, நாமும் அதே பரவசத்துடன் அதன் மொழிபெயர்ப்பை வாங்கி வாசிக்கத் தொடங்க, பத்துப் பக்கத்துக்குள் அதன் மோசமான மொழிபெயர்ப்பால் உருவாக்கப்பட்ட வேட்டை நாய்கள் நம்மை அந்தப் புத்தகத்திலிருந்து வெளியே துரத்த, நாமும் இந்தப் பிறவியில் இனி வாசிப்பதிற்கில்லை என்ற சங்கற்பத்தோடு புத்தக அலமாரியில் அடுக்கிவைத்த புத்தகங்கள் குறைந்தபட்சம் இருபத்தைந்தாவது தீவிர வாசகர்கள் எல்லோரிடமும் இருக்கும்.

ஜியாங் ரோங் சீன மொழியில் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலை சி.மோகன் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பதின் வழி, காலங்காலமாக நம் மொழியில் நடக்கும் இந்த ‘பாவங்களுக்கு’ ஒரு நேர்த்தியான பரிகாரத்தைச் செய்திருக்கிறார். இயல்பான, தங்குதடையற்ற வாசிப்பை இந்த மொழியாக்கம் தருகிறது. எங்கும் நாம் சிக்கி நிற்க வேண்டியதில்லை. பலமுறை மொழிபெயர்ப்பின் மூலம் கொல்லப்பட்ட வேற்று மொழிப் படைப்பாளிகளின் ஆவிகள் சந்தோஷமாய் ‘ஓநாய் குலச் சின்னம்’ நாவலைச் சுற்றி வருகின்றன.

கலாச்சாரப் புரட்சி!

சீனாவில் மாவோவின் கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து 1967-வாக்கில் முதலாளித்துவத் தப்பெண்ணங்களில் இருப்பவர்களை, குட்டி பூர்ஷ்வா மனநிலையில் இருப்பவர்களை அந்தக் கருத்தியல்களிருந்து மாற்றுவதற்காக கிராமப்புறங்களுக்கு அனுப்புகிறார்கள். பீஜிங் பல்கலைக் கழகத்தின் மாணவர்களான ஜென்னும் அவனது நண்பர்களும் மங்கோலியாவின் உள்பகுதிக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஜென்னுக்கோ அவனது நண்பர்களுக்கோ மேய்ச்சல் நிலம் பற்றி எதுவும் தெரியாது. அங்கிருக்கும் ஆட்டுப் பட்டிகளின் மீது, குதிரைகளின் மீது அடிக்கடி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் மங்கோலிய ஓநாய்களை அவர்கள் எதிரிகளாகப் பாவிக்கின்றனர். ஆனால், மங்கோலிய மக்களோ ஓநாய்களை அப்படிப் பார்க்கவில்லை. நாடோடிகளின் மூத்த குடியான பில்ஜியின் ஞானத்தின் வழி ஜென்னும் அவனது நண்பர்களும் ஓநாய்களை நேசிப்பவர்களாக மாறுகின்றனர்.

மங்கோலிய மேய்ச்சல் நாகரிகத்தில் எல்லாம் மிகத் துல்லியமாக இருக்கின்றன. அவர்கள் நாடோடிகளாகத் தொடர்ந்து இடம்பெயர்ந்தபடி இருக்கிறார்கள். இடம்பெயர்வதின் வழியேதான் ஒரு நிலப்பரப்பைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைக்க முடியுமென அவர்கள் கண்டறிகிறார்கள். ஓநாய்கள் மான்களை வேட்டையாடுகின்றன. மான்கள் வேட்டையாடப்படுவதின் வழி மான்களின் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மான்களைக் கட்டுப்படுத்துவதின் வழி புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. புல்வெளிகள் காப்பாற்றப்படுவதின் வழியே ஆடுகள், குதிரைகள் மற்றும் மனித சமூகம் உயிர் வாழ்கின்றன.

ஆட்டையோ குதிரையையோ தாக்கவரும் ஓநாய்க் கூட்டத்துடன் உக்கிரமாக மங்கோலிய நாடோடியினம் சண்டையிடுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஓநாய்கள் தங்களைக் காப்பதற்காக டென்ஞ்சர் கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் என்றே நம்புகிறார்கள். ஓநாய்கள் இன்றி அவர்கள் வாழ்வு இல்லையென அவர்களுடைய ஆயிரம் வருட அறிவுச் சேகரிப்பு சொல்கிறது. மங்கோலியர்கள் இறந்தபின்பு அவர்களைப் புதைக்காமல் ஓநாய்கள் தின்பதற்காக அடர் புல்வெளிகளில் சடலங்கள் வைக்கப்படுகின்றன. ஓநாய்கள் அந்தச் சடலத்தைத் தின்பதன் வழியேதான் அதற்குரிய ஆன்மா டென்ஞ்சர் கடவுளை அடைய முடியுமென உறுதியாக நம்புகிறார்கள்.

மனிதர்களுக்குத்தான் எல்லாம்

13chdas_wolf-totem-wrapper

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கலாச்சாரப் புரட்சியின் தொடர்ச்சியாக கட்சியின் ஆணைப்படி கிழக்கின் ‘பசி’க்காக மனிதர்கள் கால்படாத மங்கோலியப் புல்வெளிகள் விவசாயத்துக்கு மாற்றும்வரை பீஜிங்கிலிருந்து வந்தவர்களுக்குப் புரியவேயில்லை. மனிதர்களுக்குத்தான் எல்லாம் என்கிறார்கள். ஓநாய்களைக் கொல்வதின் வழி மங்கோலியர்களுக்கு நன்மை செய்வதாகவே கருதுகிறார்கள். ஓநாய்களின் உயிர்த்திருத்தலின் வழியேதான் மங்கோலிய நிலப்பரப்பு உயிர் வாழ முடியுமென பில்ஜி மன்றாடுகிறார். கட்சித் தலைமை கேட்பதாகயில்லை. ராக்கெட் பறக்கும் இந்த யுகத்தில் இவையெல்லாம் அபத்தமென்கிறார்கள்.

ஆயிரம் வருடங்களின் மங்கோலிய ஞானம், நிலப்பரப்பு, ஓநாய்கள், பறவைகள், உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. இருபதே வருடத்தில் அந்த நிலப்பரப்பு பாலையாகிறது. ஓநாய்கள் இல்லாத நிலத்தில் எலிகள் அரசர்களாகின்றன. பில்ஜி “இதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்கிறார். பீஜிங் நகரத்தை வாரக் கணக்கில் பனிப்புயல் சூழ்கிறது.

ஜென் இருபது வருடம் கழித்து மறுபடியும் அங்கு போகும்போது அதிநவீன பைக்குகளும் வாகனங்களும் டிஷ் ஆண்டனாக்களும் அவனை வரவேற்கின்றன. அந்த நிலத்தின் இயற்கையின் சமத்துவத்தைப் பேணும் பிரதிநிதிகளாக இருந்த ஓநாய்கள் மூதாதையர்களின் கனவுகளில் மட்டுமே வாழ்கின்றன.

வரலாறாக, மானுடவியலாக, சுற்றுச்சூழலாக, புவியியலாக, நாம் வாழும் இந்த வாழ்வு குறித்தான விமர்சனமாக இந்த நாவல் பலநூறு படிப்பினைகளை நமக்கு முன்வைக்கிறது. இந்த நாவலை வாசிக்கும்போது இது நிகழ்ந்தது/ நிகழ்வது சீனாவில்தானே, பனிப்புயல் தாக்குவது பீஜிங் நகரத்தைத்தானே, அழிக்கப்பட்டது ஓநாய்கள்தானே என நாம் கருதினால் அது நம் மகத்தான அறியாமையன்றி வேறென்ன?

-சாம்ராஜ், கவிஞர்,

‘என்றுதானே சொன்னார்கள்!’ கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: naansamraj@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x