Published : 19 Aug 2017 09:47 AM
Last Updated : 19 Aug 2017 09:47 AM
பழ
. நெடுமாறன் ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் என நாம் அறிவோம். ஆனால், அடிப்படையில் அவர் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அவர் நடத்திய சட்டப் போராட்டங்களில் பெற்ற தீர்ப்புகளை வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன் எளிமையான மொழியில் தமிழாக்கம் செய்து நூலாக வழங்கியுள்ளார். இந்த நூலில் 18 தீர்ப்புகளும், இரண்டு மனுக்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல தீர்ப்புகள் முன்னாள் நீதிபதி கே. சந்துரு மூத்த வழக்கறிஞராக இருந்தபோது வாதாடிப் பெற்றவை.
ஆட்சியாளர்கள் மாறினாலும் மாநாடு நடத்துவதற்குக் கூட உயர் நீதிமன்றம்வரை சென்று அனுமதி பெறவேண்டுமென்ற அவலநிலை மாறுவதில்லை. “மாநாடு நடத்த அனுமதி அளித்தால் பொது அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்” என 1998-ல் அரசு கூறிய காரணத்தை நிராகரித்து மாநாடு நடத்த அனுமதி வழங்கியபோது நீதிபதி ஆர். ஜெயசிம்ம பாபு “காவற்படை சட்டம் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இயற்றப்பட்டதாகும். அந்நிய ஆட்சியில் செலுத்தப்பட்ட அதிகாரத்தை அதே முறையில் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு சுதந்திர நாட்டில் செலுத்தக் கூடாது” எனத் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை அதை இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அரசு தமக்குப் பிடிக்காதவர்கள்மீது பொய்யாகப் புனையும் வழக்குகளிலிருந்து விடுபட கே.சந்துரு போன்ற சட்ட நுணுக்கங்களும், கடப்பாடும் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது சட்டத்தின் குரலுக்குச் செவிகளோடு இதயத்தையும் திறந்துவைத்திருக்கிற நீதிபதிகளும் தேவைப்படுகிறார்கள். இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.ஜெயசிம்மபாபு, பி.சண்முகம், வீ.கனகராஜ், பி.டி.தினகரன், கே.ரவிராஜ பாண்டியன், வி.எஸ்.சிர்புர்கர், மாவட்ட நீதிபதிகள் பால்துரை, ஆனந்தி, சுந்தரம் முதலானோர் திறந்த இதயம் கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதை அவர்களது தீர்ப்புகள் காட்டுகின்றன. இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள பரந்தாமன் மீதான வழக்கின் தீர்ப்பைப் படித்தபோது, காவல் துறை பொய்யாக ஒரு வழக்கைப் புனையும்போது அது வெளிப்படையாக நீதிமன்றத்துக்குத் தெரியும்போது அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் அது நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்ற கேள்வி எழுந்தது.
நமது நீதித்துறை நீதியைக் காப்பாற்றினால் மட்டும் போதாது அநீதியைத் தண்டிக்கவும் முன்வர வேண்டும். ஏனெனில், “எங்கோ ஒரு இடத்தில் அநீதி இழைக்கப்படும்போது அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது."
- ரவிக்குமார், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்
(பியுசிஎல்) முன்னாள் மாநிலத் தலைவர்,
விசிக பொதுச்செயலாளர்.
உரிமைகளை நிலைநிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்
வெளியீடு : தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை 43
போன்: 044- 2264 0451
பக்கங்கள் : 247 விலை 200/- ரூபாய்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT