Published : 04 Jul 2017 10:50 AM
Last Updated : 04 Jul 2017 10:50 AM
‘பயணத்தைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறீர்களே, உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு முறை குடும்பத்துடன் பயணம் போய்வரும்போதும் நிறைய ஏமாற்றப் பட்டதாகவே உணர்கிறேன். தங்குமிடம், உணவகம், டாக்ஸி, நினைவுப் பொருட்கள் என எல்லாவற்றிலும் ஏமாற்றுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் பல்வேறு சுற்றுலா மையங்களுக்கும் போய்வந்துவிட்டேன். எல்லாமே ஏமாற்றம் தரும் அனுபவங்கள்தான். இந்தக் கசப்பை மனதில் வைத்துக்கொண்டு எப்படி நிம்மதியாகப் பயணத்தை அனுபவிப்பது? இனிமேல் பயணமே போகக் கூடாது என முடிவு செய்துவிட்டேன்’ என ஒரு நண்பர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
அவர் சொன்னது நிஜம். நானும் அனுபவித்திருக்கிறேன். ஆனால், பயணத்தில் மட்டும்தான் ஏமாற்றுகிறார்களா? சொந்த ஊரின் ஷாப்பிங் மால்களில், உணவகங்களில், கடைகளில் ஏமாற்றவில்லையா என்ன? ஆனாலும், ஒன்றை ஒப்புக்கொள்ளவேண்டும்.
திறந்தவெளி கொள்ளைக் கூடங்கள்
சுற்றுலா மையங்கள் திறந்தவெளி கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன. இணையதள வசதி வந்த பிறகு இந்தக் கொள்ளை எளிதாகிவிட்டது. பொய்யாக எதைஎதையோ காட்டி எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள்.
நண்பர் ஒருவரின் குடும்பம் இணையதளம் மூலம் மூணாரில் தங்கும் அறை ஒன்றை புக் செய்தார்கள். இணையத்தில் காணப்பட்ட அறையின் புகைப்படங்கள் அற்புதமாக இருந்தன. ஆனால், மூணாருக்கு நேரில் சென்றாலோ அறை ஒரு சவப் பெட்டியைப் போல இருந்தது. இதற்கு ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாயா என சண்டையிட்டதற்கு, இணையவழி பதிவு செய்த அறைகளை கேன்சல் செய்ய முடியாது என அந்த விடுதி நிர்வாகத்தினர் சண்டையிட்டுள்ளார்கள். போலீஸுக்குப் போவதாக மிரட்டவே பாதி பணம் மட்டும் தரப்பட்டுள்ளது. அப்புறம் தேடி அலைந்து வேறு ஓர் அறையில் போய்த் தங்கியிருக்கிறார்கள்.
மூணாரில் உள்ள ஓர் உணவகத்தில் போய் சாப்பிடுவதற்கு பட்டர் நான் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். வந்தது சுட வைத்து பட்டர் தடவிய பீட்சா ரொட்டி. ‘இதுதான் இந்த ஊரின் பட்டர் நான். இதன் விலை 240 ரூபாய்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த உணவகத்திலும் சண்டை. இது போல டிரக்கிங் ஜீப், தைலம் விற்கும் கடை என எல்லாவற்றிலும் மோசடி. அவர்கள் மிக மோசமான அனுபவத்துக்கு உள்ளாகி ஏன் விடுமுறையை இப்படி நாசமாக்கிக் கொண்டோம் என வருத்தமாக வீடு திரும்பியிருக்கிறார்கள். இது ஓர் உதாரணம்தான். இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அல்லது இயற்கை வாழிடங்களுக்குப் போய்வந்த பலருக்கும் இதுவே அனுபவம்.
அரசு தரப்பில் இயங்கும் தங்குமிடங்கள், உணவகங்களின் நிலை இதை விட மோசம். அரிதாக ஒன்றிரண்டு சுற்றுலாத் துறை தங்குமிடங்களே முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கும் குடிகாரர்கள் நிரம்பி வழிகிறார்கள். குடித்துவிட்டுத் தூக்கி யெறிந்த பாட்டில்கள் எங்கும் குவிந்து கிடக்கின்றன. உணவுகளின் தரமோ மிக மிக மோசம்.
சுற்றுலாத் தலங்களில்தான் இப்படியென்றால், புகழ்பெற்ற கோயில்கள் உள்ள ஊர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். காலில் போட்டிருக்கும் காலணியைக் கழற்றிப் போடத் தொடங்கும் இடத்தில் இருந்து மொட்டை போடுவது, அர்ச்சனைக்கு தேங்காய்ப் பழம் வாங்குவது, சாமி தரிசனம் வரை கொள்ளை. பக்தர்களை விதவிதமாக ஏமாற்றுகிறார்கள்.
கோயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தரப் பரிசோதனை ஏதாவது இருக்கிறதா என்றே தெரியவில்லை. சாமி தரிசனம் பண்ணி வைக்கிறேன் என அலையும் புரோக்கர்களின் தொல்லை ஒரு பக்கம். புகழ்பெற்ற ஒரு முருகன் கோயிலில் புரோக்கர் ஒருவரின் பெயர் ‘ஹார்லிக்ஸ்’. அவ்வளவு ஊட்டமாக சம்பாதிக்கக் கூடியவர் என்கிறார்கள். சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய, ஒரு குடும்பத்துக்கு அவர் 5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார். அதை கொடுத்துவிட்டால் போதும். உங்கள் மடியிலேயே சாமியைத் தூக்கி வைத்து, தொட்டு கும்பிட்டுக் கொள்ளுங்கள் என விட்டுவிடுவார். அவ்வளவு செல்வாக்கு!
கோயிலைச் சுற்றியுள்ள வெளிப்புறங்களில் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என காவல்துறை சிலருடைய புகைப் படங்களை ஒட்டியிருக்கிறார்கள். அதில், இப்படியான புரோக்கர்களின் மோசமான வணிகர்களின் படங்கள் ஒட்டப்பட்டதில்லை.
ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கும் மேல் வந்து செல்லும் திருப்பதி எவ்வளவு முறையாக இயங்குகிறது? அப்படி முறையாக இயங்கும் ஒரு கோயிலையாவது தமிழகத்தில் காட்ட முடியுமா என ஆதங்கமாக இருக்கிறது.
சுற்றுலாத் தலங்கள் ஏன் கொள்ளைக் கூடங்களாக மாறிப்போயின? முதல் காரணம், கையில் காசு இருப்பதால்தானே இங்கே வருகிறார்கள்; செலவு செய்யட்டுமே என்கிற எண்ணம். இரண்டாவது, எந்தக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாமல் திறந்துவிடப்பட்ட சூழல். இதற்கு உடந்தையாக இருக்கிற அரசியல்வாதிகள். மூன்றாவது இவர்களைத் தவிர மாற்றுவழிகள், தங்குமிடங்கள், ஆரோக்கியமான உணவகங்கள் எதுவுமில்லாதது. நான்காவது, இது போலவரும் புகார்களை விசாரிக்க, நடவடிக்கை எடுக்க தனிப் பிரிவு இல்லாதது போன்றவைதான் மிக மிக முக்கிய காரணங்கள்.
புனித யாத்திரை
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் பலரும் புலம்பித் தள்ளுகிறார்கள். குறைந்தபட்சம் இது போன்ற சுற்றுலாப் பயணிகள் புகார் செய்யவும்; அதன் மீதான உடனடி நடவடிக்கைக்கும் ஓர் இணையதளமோ, அவசர தொலைபேசி எண்ணோ உருவாக்கலாம் அல்லவா? அரசு சார்பிலே ஓர் இரவுக்கான பொது தங்குமிடங்கள், பொது குளியல் அறைகள், சுகாதாரமான குடிநீர், மற்றும் உணவு வழங்கல், முறையான வாகன நிறுத்தம், மருத்துவ வசதிகள் போன்றவற்றை உருவாக்கித் தர வேண்டும் இல்லையா?
பயணிகளை எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை, ஓர் தைவான் கதை சுட்டிக்காட்டுகிறது.
மன நிம்மதியைத் தேடி மனிதர்கள் புனித யாத்திரைக்குப் போய் வருவதைக் கண்ட நாய்கள், தாங்களும் புனித யாத்திரை போய் வரலாமே என முடிவு செய்தன.
‘‘புனித யாத்திரை எதற்காக?’’ எனக் கேட்டது ஒரு நாய். அதற்கு இன்னொரு நாய் பதில் சொன்னது: ‘‘நாம் கோபத்தில் அதிகம் கத்திக் கொண்டிருக்கிறோம் அல்லவா. ஆகவே, அமைதியாக, ஒருமுறை கூட குரைக்காமல் வாயை மூடிக் கொண்டு பயணம் மேற்கொண்டால் நம் கோபம் அடங்கிவிடும். ஆகவே, ஜென்லான் புத்தர் கோயிலுக்குப் போய் வரலாம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்!’’
ஒரு பவுர்ணமி நாளில் நாய்களின் பயணம் தொடங்கியது. புனித யாத்திரை செய்யும் நாய்களைப் பயணிகள் எல்லோரும் கேலி செய்தார்கள். அடித்து துரத்தினார்கள். ஆனால், அவை பதிலுக்கு குரைக்கவே இல்லை.
பயண வழியில் நாய்களுக்கு பசி எடுத்தது. ஓர் உணவகத்தில் ஏதாவது மிச்சம் மீதி கிடைக்குமா என எட்டிப் பார்த்தன. ஆனால், கெட்டுப்போன மீனைக் கொடுத்து தங்களைக் கடைக்காரன் ஏமாற்றிவிட்டான் என ஒரு பயணி அங்கே சண்டை போட்டுக் கொண்டிருந்தான். கடைக்காரன் அவனை அடித்துத் துரத்தினான். அதை கண்ட நாய்கள் பயந்துபோய் அங்கிருந்து அமைதியாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தன.
ஜென்லான் கோயிலின் வாசலில் ஊதுபத்தி, தாமரை மலர்கள் விற்பவர்கள் அநியாய விலைக்கு அவற்றை விற்பனை செய்தார்கள். சாமி தரிசனம் செய்ய வந்த பயணிகள் அந்த வியாபாரிகளிடம் சண்டை போட்டார்கள். ஜென்லான் பவுத்த ஆலயத்துக்குள் போனால், அங்கே இருந்த பவுத்த துறவிகள், பயணிகளிடம் காணிக்கை கேட்டு தொல்லைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய்கள், அமைதியாக புத்தர் கோயிலை வணங்கிவிட்டு வெளியே வந்தன. அப்போது ஒரு நாய் சொன்னது: ‘‘பயணங்களில்தான் மனிதர்கள் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். கோபம் அடைகிறார்கள். சண்டை போடுகிறார்கள். நம்மை விட மோசமாகக் குரைக்கிறார்கள். இவர்களைவிட நமது பயணம் எவ்வளவோ சிறந்தது!’’
நாய்கள் சொன்னது முற்றிலும் உண்மை! மனசாந்தி தேடிப் போகிற பயணங்கள், இருக்கிற அமைதியையும் இழக்கவே வைக்கின்றன. தன்னை திருத்திக் கொள்ள நாய்கள் கூட முற்படுகின்றன. ஆனால், பேராசை கொண்ட மனிதர்கள்தான் ஒருபோதும் திருந்துவதே இல்லை!
இணைய வாசல்: >தைவான் நாட்டுப்புறக் கதைகளை வாசிக்க
- கதைகள் பேசும்... | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT