Published : 27 Jul 2017 11:52 AM
Last Updated : 27 Jul 2017 11:52 AM
பயணம்
பெசன்ட் நகர் ஸ்பேசஸ் திறந்தவெளி அரங்கம். நான்கு பக்கங்களிலும் இரண்டு அடுக்கு படிகட்டுகள். நடுவில் முற்றம் மாதிரியான இடத்தில் நவீன நாடகம். அறிவியல் புனைவியலின் அன்றாட சென்னை இளைஞர்களின் வாழ்வியலில் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ தாயார் கலைக்கூடத்தின் தயாரிப்பு. இயக்கம் ஐகார் வீஇ.
கண்களும் கைகளும் கட்டப்பட்டு களத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள் நான்கு இளைஞர்கள். ஏன், எப்படி, எதற்காக என்று அறியாத அடிமைகள். கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, நால்வரும் ஒரு பிணக் குவியலில் தள்ளிவிடப்படு கிறார்கள்.
இவர்களுக்குள் ஒரு போட்டி அறிவிக்கிறான், அழைத்து வந்த தலைவன். ‘‘அதோ தொலைவில் ஒரு பெண். உங்கள் நால்வரில் யார் அவளை அடைந்து திருப்தி படுத்துகிறீர்களோ, அவரே போட்டியில் வெற்றியாளன். மற்ற அடிமைகள் எங்கள் விதிகளின்படி கொல்லப்படுவார்கள். அந்தப் பெண்ணை அடையும் வரை நீங்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்…’’ என்று விதிமுறைகளை அறிவித்துவிட்டு தலைவன் அகன்றுவிட, நால்வரின் ஒரு மணிநேர விறுவிறுப்பான பயணம் ஆரம்பம்.
ஓடிக்கொண்டிருக்கும்போதே அடிமைகள் நா ல்வரும் ஜாலியாகப் பேசிக் கொள்கிறார்கள்... ஆவேசமாக வாதிடுகிறார்கள். ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பாதி வழியில் சிலர் இறந்தும் விடுகிறார்கள்.
மற்றவர்களுக்குப் பயணம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத மாயவலையைக் கடந்தால் மட்டுமே பெண்ணை அடைய முடியும் என்கிற நிலை. நண்பன் துரோகியாக மாறுகிறான். கதாநாயகனைக் கொன்றுவிட்டு வலைக்குள் நுழையும் சமயம், நண்பன் உயிரை விடுகிறான். கிளைமாக்ஸில் கதாநாயகன் vs வில்லன்! கதையின் இலக்கணப்படி வில்லன் சாய்ந்துவிட, பெண்ணை அடைகிறான் ஹீரோ.
சற்று உள்ளார்ந்துப் பார்த்தால், இந்த நாடகம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் என்பதை புரிந்துகொள்ள முடியும். அடிமைகள் ஆணின் விந்தணுக்கள்.. பெண்ணின் சினை முட்டைகளாக உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘அதாவது, பலகோடி விந்தணுக்கள் அண்டவழிப் பாதையில் பயணித்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து மனிதக் கருவாக உருவாகும் நிகழ்வே இந்தப் பயணம் எனும் அறிவியல் புனைவு நாடகம்…’ என்று தனிப்பட்ட முறையில் எனக்குப் புரியவைத்த டைரக்டருக்கு நன்றி!
நாடகத்தில் எவருக்கும் பாத்திரப் பெயர் கிடையாது. ஓடிக்கொண்டே நடிக்க வேண்டும். மூச்சு வாங்கப் பேச வேண்டும். வியர்வை ஈரத்துடன் சண்டையிட வேண்டும். நட்பு, துரோ கம் கோபம் போன்ற நாலாவித உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். மேடை, செட், படுதா என்று எதுவும் கிடையாது. பயணத்தில் பார்வையாளர்களையும் சக பயணிகளாக மாற்றி உடன் அழைத்துச் சென்ற ஐகார் வீஇ உள்ளிட்ட நால்வருக்கும் நடிப்பாற்றல் அசாத்தியம்!
கர்ணன்
பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், கடல்புறா என்று சரித்திர - இதிகாச - புராண நாடகங்கள் சபா மேடைகளில் பவனி வரும் சீஸன் இது. மகாபாரத கர்ணன் புதுவரவு!
இது மாதிரியான நாடகங்களுக்குத் தயாரிப்பு செலவு அதிகம். மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் செட் போட்டு கண்முன் நிறுத்த வேண்டும். தீபாவளிக்குப் புதுத் துணி வாங்கிக் கொடுப்பது மாதிரி, ஏராளமான பாத்திரங்களுக்கு கண் கவர் புராண டிரெஸ் தைத்துத் தர வேண்டும். இவை தவிர, கிரீடங்கள், தனுசுகள், அம்புகள் இத்யாதி... கர்ணன் தயாரிப்பாளர் கூல் ஈவன்ட்ஸ் குமாருக்கு செலவு பழுத்திருக்கும்!
நட்புக்கு இலக்கணமான கர்ணன், தனக்கு வாழ்வும் அங்கீகாரமும் அளித்த துரியோதனனுக்காக உயிரைவிடும் கதை ஊர் அறிந்தது. கர்ணன் என்றவுடனேயே இன்று வரை காதுகளை வருடிவிடும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ஆஹிர் பைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை இந்த நாடகத்தின் முடிவில் கேட்டு மகிழலாம்!
நாடகத்தில் எந்த கேரக்டரும் தமிழைக் கொலை செய்யவில்லை. தெளிவான உச்சரிப்பு,தேவையான ஏற்ற இறக்கம், வசனங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள். வசனம் எழுதிய பூவை தயா நாட்டு நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வருபவர் போல! கைத் தட்டலுக்கு ஆசைப்பட்டு, சசிகலா முதல் நிறைய லேட்டஸ்ட் அரசியலை நுழைத்திருக்கிறார். தவிர்த்திருக்கலாம் அல்லது டைரக்டர் மல்லிக்ராஜ் தடுத்திருக்கலாம்!
கர்ணனாக பிரகாஷ்குட்டி துரியோதனனுடனான நட்பை ஆழமாக வெளிப்படுத்துகிறார். கிட்டத்தட்ட 100 பெண்களின் பெயர்களை வரிசையாக ஒப்புவிக்கும்போது இவரின் நினைவாற்றல் பளிச்! கபடி விளையாடுவது மாதிரி, ஒவ்வொரு முறை பேசும்போதும் இரண்டு அடி பின்னால் நகர்வது எதற்கு?
கர்ணனின் மனைவி சுபாங்கியாக வரும் யோகேஸ்வரிக்கு முழு மதிப்பெண்கள். கிருஷ்ணனாக ராகவனும், குந்திதேவியாக பரிமளமும் நன்றாக பரிமளிக்கிறார்கள். முக்கியமாக, விஷமக்கார கண்ணனின் விளையாட்டுகளை ராகவன் அலட்டாமல் வெளிப்படுத்துகிறார். அட, கோபாலகிருஷ்ணனை சகுனியாக ‘நடிக்க’ வைத்திருப்பதில் முழு வெற்றி டைரக்டருக்கு. அதுவும் நடுநடுவே தாடியை நீவி விட்டுக் கொள்ளும் சகுனியின் மேனரிஸம் ஜோர்!
ஆர்.எஸ்.மனோகர் காலத்து புராண நாடகங்களை மறந்துவிட்டு கர்ணனைக் கண்டுகளிக்க வேண்டும். அந்தப் பிரம்மாண்டமும், பொலிவும், வேகமும் நாடகக் காவலருக்கு மட்டுமே உரித்தானது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT