Published : 11 Jul 2017 10:00 AM
Last Updated : 11 Jul 2017 10:00 AM
நம் காலத்தின் நெருக்கடிகளில் ஒன்று, நல்லவனாக இருப்பது. யார் நல்லவர், யார் கெட்டவர்? எனப் பகுத்தறிவது எளிதாக இல்லை. ‘நல்லவன்’ என்ற சொல்லை இன்று பயன்படும் பொருளில் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்தவில்லை. நாம் இன்று பயன்படுத்தும் நிறைய சொற்கள், கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அர்த்தத்தில் இருந்து வெகுவாக மாறியுள்ளன.
‘நல்லவன்’ என்ற சொல்லே இன்று கேலிக்குரியதாகிவிட்டது. திரையில் எல்லா கதாநாயகர்களும் கெட்டவர்களாக நடிக்கவே ஆசைப்படுகிறார்கள். பொது வாழ்க்கையிலோ குற்றவாளிகள், மோசடிப் பேர்வழிகள், கெடுசெயல் செய்தவர்கள் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், அதிகாரத்தை ருசிக்கிறார்கள். நல்லவர்களோ நிழல்களைப் போல அடையாளமே இல்லாமல் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கெட்டவர்கள் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து போகிறவர்கள் இல்லை. நம்மில் ஒருவரே கெட்டவர். எவர் முகமும் அந்த உருவத்துக்குப் பொருந்தக்கூடியதே.
நல்லவை குறித்து பேசுவதும், விவாதிப்பதும், கற்றுத் தருவதுமே பண்பாட்டின் ஆதாரச் செயல்கள். வீடும், ஊரும், சமூகமும் நன்மையின் விளைநிலங்களாகக் கருதப்பட்டன. இன்று, நிலைமை மாறிவிட்டது. எனக்கு எது நல்லதோ, அதுவே போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.
சுயநலம், பொதுநலம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் முறையாக அறிந்திருக்கிறோமா என சந்தேகமாகவே உள்ளது. உண்மையில், சுயநலம் என்பது விரிந்துகொண்டே போகிறது. பொதுநலம் என்பது சுருங்கிக்கொண்டே வருகிறது.
காலம் காலமாக நற்செயல்களே நல்லவனின் அடையாளமாகக் கருதப்பட்டன. ஆனால், இன்று கல்வி உதவிகள் தருவது, அன்னதானம் செய்வது, புனிதப் பயணங்களுக்கு உதவுவது, இலவச மருத்துவ வசதிகள் செய்து தருவது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களில் பாதிக்கு மேல் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள். தவறான வழிகளில் பொருள் ஈட்டியவர்கள். அவர்களின் செயல்கள் நன்மை தருவதால் அவர்களே நல்லவர்களாக அறியப்படுகிறார்கள். உலகை ஏமாற்றுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள்!
தீமையின் வசீகரம் எப்போதுமே ஈர்ப்புடையது என்பார்கள். எந்த ஒரு குற்றச்செயலைப் பற்றி வாசித்தாலும், கேள்விப்பட்டாலும் மனது உடனடியாக அதில் நாமும் ஈடுபட்டிருக்கலாமோ என ரகசியமாக யோசிக்கவே செய்யும். கடவுள் என்ற ஒருவர் இல்லாமல் போயிருந்தால் எல்லாக் குற்றங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கும் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் வரியே நினைவுக்கு வருகிறது.
நல்லது எது, தீயது எது? என்பதை பண்பாடே தீர்மானிக்கிறது. மதமும், சட்டமும் அதை வரையறை செய்யவும், நெறிப்படுத்தவும் முயற்சிக்கின்றன. சாமானிய மனிதன் நல்லது செய்வதை மாபெரும் விஷயமாகக் கருதுவதில்லை. தன் உடல், மனம், செயல் களால் எந்த ஒருவருக்கும் தீங்கு இழைக்காமல் இருந்தால் போதும், அதுவே நல்லவனின் அடையாளம் என நினைக்கிறார்கள்.
சாமானிய மக்கள் தங்களால் முடிந்த நன்மைகளை உலகுக்குச் செய்யவே முயற் சிக்கிறார்கள். அதை வெளிச்சமிட்டுக் காட்டிக்கொள்வதில்லை, அவ்வளவுதான்.
நண்பர் வீட்டுக்குப் போயிருந்தபோது, டிவியில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது 12 வயது மகன் கேட்டான்: ‘‘வில்லன்கள் எல்லாமே எப்படிப்பா ரிச்சா இருக்காங்க? ஹீரோவா இருந்தா ரொம்ப கஷ்டப்படணும், அடிபடணுமா? வில்லன்கிட்ட இருக்கிற கார், பங்களா எதுவும் ஹீரோகிட்ட இல்லையே, ஏன்பா?’’
‘‘அது சினிமா! அப்படித்தான் இருக்கும்’’ என்றார் நண்பர்.
நான் குறுக்கிட்டு, ‘‘சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தானே இருக்கிறது’’ என்றேன்.
‘‘நான் பெரிய ஆளா வளர்ந்து, பெரிய வில்லனா ஆகிடுவேன்..’’ என்று உற்சாகமாகச் சொன்னான் அந்தப் பையன்.
இந்த விதை எண்ணிக்கையற்ற சிறார் மனதில் அன்றாடம் ஊன்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதுதான் அபாயம்!
இது வெறும் சினிமா பற்றிய விஷயமில்லை. தன் வாழ் நாள் முழுவதும் சமூகப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற ஆளுமைகள் டவுன்பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கள்ளச் சாராயம் விற்றவர் களோ சொகுசான ஆடி காரில் போகிறார்கள்.
நல்லவை எவை? நல்லவை நாட என்ன செய்ய வேண்டும்? என்பதையே இலக்கியங்கள் திரும்பத் திரும்பப் பேசுகின்றன. நன்மையின் வெளிச்சத்தை உயர்த்திப் பிடிக்கவே முற்படுகின்றன.
புத்த ஜாதகக் கதை ஒன்று. போதிசத்துவர் காட்டில் வாழும் ஒரு வெள்ளை யானையாகப் பிறக்கிறார். ஒருநாள் காட்டில் வழிதவறிய மனிதனின் குரல் கேட்டு உதவி செய்ய முன்வருகிறார். வெள்ளை யானையைப் பார்த்த மனிதன் பயந்து பின்னோடினான்.
‘உதவி செய்யத்தானே வருகிறேன், ஏன் பயப்படுகிறான்?’ என யோசித்த வெள்ளை யானை அவன் முன்னால் மண்டியிட்டது. தன்னைத் துரத்திவரும் யானையால் ஆபத்து எதுவும் உருவாகாது என உணர்ந்த பிறகு, அவன் நெருங்கிப் போனான். அது மனிதர்களைப் போலவே பேசியது வியப்பாக இருந்தது.
‘‘நான் காட்டில் வழிதவறிவிட்டேன். வெளியேற உதவி செய்வாயா?’’ என அந்த யானையிடம் கேட்டான் மனிதன். அவனை தன்மேல் ஏற்றிக்கொண்டு காட்டில் நடந்தது யானை. வழியில் பழங்களைப் பறித்து சாப்பிடத் தந்தது. ஆற்றைக் கடந்து வாரணாசி நோக்கிச் செல்லும் பாதையைக் காட்டி, ‘‘அதோ நகரம், இனி நீ போகலாம்!’’ என விடை கொடுத்தது.
வாரணாசியில் தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தவன் நடந்தவற்றை எல்லாம் தனது நண்பனிடம் சொன்னான்.
அதைக் கேட்ட நண்பன், ‘‘நீ அந்த வெள்ளை யானையின் தந்தங்களைக் கொண்டுவந்திருந்தால், விற்று நிறைய பணம் சம்பாதித்திருக்கலாம்’’ என்று தூண்டிவிட்டான்.
பேராசை கொண்ட மனிதன் மறுபடியும் காட்டுக்குப் போய், யானையைத் தேடிக் கண்டுபிடித்தான். அந்த யானையிடம், ‘‘உன் தந்தங்களில் ஒன்றைத் தந்தால் என் வறுமை தீரும். கடன்களை அடைத்துவிடுவேன். தருவாயா?’’ என்று கேட்டான்.
வெள்ளை யானை மறுப்பு எதுவும் சொல்லவில்லை. ‘‘சரி, என் தந்தத்தை வெட்டி எடுத்துக்கொள்’’ என்றது.
ஒரு தந்தத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வாரணாசிக்குப் போய் விற்றான். நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்தான். சில மாதங்களில் கைப்பணம் செலவாகிவிடவே, திரும்பவும் வெள்ளை யானையைத் தேடிப் போனான்.
‘‘இன்னொரு தந்தமும் வேண்டும். அப்போதுதான் என் குடும்ப கஷ்டம் எல்லாம் தீரும்’’ என்றான்.
‘‘இரண்டு தந்தங்களையும் இழந்துவிட்டால் என்னால் வாழ முடியாது’’ என்றது யானை.
‘‘இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’’ என்று அவன் கண்ணீர்விட்டு அழுதான்.
‘‘உனக்காக என் இரண்டாவது தந்தத்தையும் தருகிறேன், எடுத்துக்கொள்’’ என்றது வெள்ளை யானை.
தந்தத்தைத் துண்டித்தான். அப்போது யானை வலியில் அலறியது. ரத்தம் பீறிட்டு ஓடியது. அவன் அதைப் பற்றி கவலையின்றி தந்தத்தை எடுத்துக்கொண்டு காட்டை விட்டு வெளியேறி நடந்தான். காட்டினுள்ளே அந்த வெள்ளை யானை வலி தாங்கமுடியாமல் பிளிறி செத்துப் போனது.
தந்தத்தை அதிக விலைக்கு விற்று வசதியாக வாழலாம் எனக் கற்பனை செய்தபடியே நடந்தான். திடீரென காட்டில் பெருமழை தொடங்கியது. காட்டாறு பெருகியது. தந்தத்தைத் தூக்கிக்கொண்டு அவனால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. வெள்ளம் பெருகியோடியது. நன்றி மறந்த அந்த மனிதன் பேராசையுடன் ஆற்றில் இறங்கி நடந்தான். வெள்ளம் இழுத்துக்கொண்டு போகவே, தண்ணீரில் மூழ்கி செத்துப்போனான் என அந்தக் கதை முடிகிறது.
தனக்கு உதவி செய்தவர்களிடம் நன்றியில்லாமல் அவர்களை ஏமாற்றுவதும், தன்னையே கொடுக்க முன்வந்த நிலையில்கூட அவர்களது வலியை, வேதனையைப் புரிந்துகொள்ளாமல் சுயநலத்துடன் நடந்துகொள்வதும் மனிதர்கள் செய்யும் தவறு. அதை சுட்டிக்காட்டவும், திருத்தவுமே ஜாதகக் கதை முற்படுகிறது.
திருத்திக்கொள்ள வேண்டியது நமது கடமை இல்லையா?
இணைய வாசல்: புத்த ஜாதகக் கதைகளை அறிந்துகொள்ள: >http://www.pitt.edu/~dash/jataka.html
- கதைகள் பேசும்... | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT