Published : 22 Jul 2017 08:42 AM
Last Updated : 22 Jul 2017 08:42 AM
இந்த நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதையின் வரிகள் இவை: “அவர்கள்/ திரிசூலங்களோடு பாய்ந்தார்கள்/ அந்த முதியவனை/ வீட்டுக்குள்ளிருந்து இழுத்து வந்தார்கள்/ நெஞ்சைப் பிளந்து/ இதயத்தைப் பிடுங்கியெடுத்துக் காட்டினார்கள்/ “இதோ இவன் மறைத்து வைத்திருந்த/ மாட்டிறைச்சி...” இந்த அரசியல் கவிதையோடு தொடங்கும் இந்த நூலில், மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட 2013-லிருந்து, ஆட்சியைக் கைப்பற்றி மூன்று ஆண்டுகள் முடிந்த 2017 வரை பாஜக ஆட்சியில் நடந்த சமூக நிகழ்வுகளின் மீது - குறிப்பாகத் தலித் மற்றும் சிறுபான்மையினரை நோக்கித் தொடுக்கப்பட்ட கொடூரங்களின் மேல் - தான் நிகழ்த்திய எதிர்வினைகளைத் தொகுத்து 44 கட்டுரைகளாகத் தந்துள்ளார் ரவிக்குமார்.
ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறந்த கட்டுரையாளர், சட்டம் பயின்றவர், பதிப்பாளர் என்றெல்லாம் பன்முகத் தளத்தில் இயங்குவதால், ரவிக்குமார் தான் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் எந்தவொரு நிகழ்வானாலும், அதில் மக்களுக்கு எதிரான ஆதிக்கக் குரலை அடையாளம் கண்டு, அதன் ஆழ, அகலங்களை மிகத் தெளிவான மொழியில் வெளிப்படுத்திவிடவும் முடிகிறது. அதே நேரத்தில் பாஜக அரசுக்கு எதிரான அரசியல் விவாதங்களை மொழியாடும்போது, வெறுப்பு அரசியல், வெறுப்புப் பேச்சு எதுவும் தனது மொழியில் கலந்துவிடாமல் சுயகண்காணிப்போடு தன் எழுத்தை நகர்த்துகிறார். இந்தப் பண்பு இந்த நூலின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டும்.
பாஜக அரசு தலித்துகளை நடத்தும் முறை குறித்த அவருடைய விவாதத்தை முதலில் சுட்டிக்காட்டவேண்டும். இந்திய மக்கள்தொகையில் 25% இருக்கும் தலித்துகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து அம்பேத்கரின் 125-வது ஆண்டுவிழா கொண்டாடுவது, அவர் உயிர் பிரிந்த வீட்டை எடுத்து மாநாட்டு அரங்கு அமைப்பது, மும்பையில் மண்டபம் கட்ட ஏற்பாடு செய்வது, “அடுத்து வரும் பத்து ஆண்டு காலமும் தலித்துகளின் காலமாக இருக்கும்” எனப் பொதுமேடைகளில் முழங்குவது, “பாத்திரம் கழுவிய தாய் ஒருத்தியின் பிள்ளை இந்த நாட்டின் பிரதமராக வர முடிந்ததென்றால், அந்தப் பெருமையெல்லாம் அம்பேத்கரையே சாரும்” என உருகுவது, - இப்படி ஒரு பக்கம் ஆசை வார்த்தை பேசுவது, மற்றொரு பக்கம் தலித்துகளின் வாழ்வுரிமைக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது.
தலித்துகளுக்கு எதிரான வன்முறை, அளவிலும் பண்பிலும் அடைந்துள்ள மாற்றத்தைப் பட்டியலிடும் நூலாசிரியர், பட்டியல் இனத்துக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுவந்த நிதியில் பாஜகவின் மூன்றாண்டு ஆட்சி, சுமார் 2 லட்சம் கோடியை ஒதுக்காமல் ஏழைத் தலித்துக்களை வஞ்சித்துள்ளது என்பதைப் புள்ளிவிவரத்தோடு நிறுவுகிறார்.
நூலாசிரியர், பாஜக முன்னெடுக்கும் இந்தித் திணிப்பு, கல்வியைக் காவிமயமாக்கும் தன்மை, சம்ஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சி, மதமாற்றத் தடைச்சட்டம், கல்வி வளாகங்களுக்குள் கருத்துரிமைகளைப் பறித்தெடுக்கும் கொடுமை, பணமதிப்பு நீக்க அறிவிப்பு செய்து மக்களை அலைக்கழித்து ஏறத்தாழ 100 பேர் மரணத்துக்குக் காரணமாக இருந்தது, உத்தர பிரதேசத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்காமலேயே அவர்களுடைய வாக்குகளை மதிப்பிழக்கச் செய்ய முடியும் என நிரூபித்ததன் மூலம் இந்துத்துவப் பெரும்பான்மைவாத ஆட்சியை நோக்கித் தேசத்தைத் தள்ளுவது, மரபணுமாற்றக் கடுகு, நெடுவாசல் போராட்டம், மெரீனாப் புரட்சி என ஒன்று விடாமல் மக்கள் பக்கம் நின்று பேசுகிறார். பசுப் பாதுகாப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பேரில் ஒரு கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்குவதைச் சுட்டிக்காட்டி ஜனநாயகத்திலிருந்து கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் சில காலம் கும்பலாட்சி நடக்கும் என்ற கிரேக்க அறிஞரின் கூற்றைச் சொல்லி எச்சரிக்கிறார்.
‘இரண்டு நாய்க்குட்டிகள்’ என்ற கட்டுரையைச் சொல்லியே ஆக வேண்டும். குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்து பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அப்போது முன்னிறுத்தப்பட்டிருந்த மோடியிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்லுகிறார்.
“நாம் காரின் பின்இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் போது காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி விழுந்து அடிபட்டுச் செத்துவிட்டால் நாம் வருத்தம் அடையவா செய்வோம்!” இந்த நிகழ்வை உலகப் புகழ் பெற்ற போராளி சேகுவேராவுக்கு ஒரு நாய்க்குட்டியோடு ஏற்பட்ட அனுபவத்தோடு ரவிக்குமார் இணைக்கிறார்; “ஒரு நாய்க்குட்டியின் மரணத்தை மனிதர்களின் சாவைக் காட்டிலும் பெரிதாக நினைத்த சேகுவேரா எங்கே, ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலையை ஒரு நாய்க் குட்டியின் சாவுடன் ஒப்பிட்ட மோடி எங்கே?” என்று எழுதிவிட்டு, இத்தகைய ஒருவரை நமது இளைஞர்கள் மாற்றத்தின் குறியீடாகப் பார்த்துக் கொண்டாடுகிறார்களே என்று வருத்தப்பட்டு, “இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது” என முடிக்கிறார்.
காலத்தின் தேவையறிந்து வெளிவந்துள்ள இந்த நூலை வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான அனைத்துத் தரப்பினரும் வாசித்தால் எதிர்ப்பின் வேகமும் தரமும் கூடும் என உறுதியாக நம்பலாம்.
- க. பஞ்சாங்கம், பேராசிரியர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT