Published : 08 Jul 2017 10:09 AM
Last Updated : 08 Jul 2017 10:09 AM
பல ஆண்டுகளாகத் தமிழிசை ஆய்வில் ஈடுபட்டு அரிய தரவுகளைத் தந்துவரும் இசையியல் அறிஞர் நா. மம்மதுவின் தமிழிசை பற்றிய 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ‘என்றும் தமிழிசை’. இது இவரது எட்டாவது ஆய்வு நூல். இவர், தமிழிசையின் ஆய்வு முன்னோடிகளில் ஒருவராகவும் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவருமான வீ.ப.கா. சுந்தரத்திடம் நேரிடையாகப் பயின்ற மாணவர். தமிழிசையே நம் ஆதி இசை. அதிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமே இன்றைய கர்நாடக இசை என்பதை, தொன்மை நிறைந்த நம் தமிழ் மொழியின் இலக்கியங்களில், இலக்கணங்களில் எங்கெல்லாம் இசை பற்றிய பதிவுகள் காணக்கிடைக்கின்றன என்பதைத் தேடி எடுத்து ஆதாரத்தோடு எடுத்துக்காட்டி நிறுவுகின்றன இந்தக் கட்டுரைகள். கூடவே, பாரதி, பாரதிதாசன் பாடல்களில் இசை குறித்து மூன்று கட்டுரைகளும் ’அலிபாதுசா நாடகத்தில் இசை’, ‘தமிழரின் ஆடலான சதிர் எனும் பரத நாட்டியம்’ என்ற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
கணிதம், வேதியியல், இயற்பியல், பயிரியல், மெய்யியல், உயிரியல், உளவியல் போன்றவற்றோடு இசைக்கு உள்ள தொடர்பு குறித்து பேசும் கட்டுரைகள் - இப்படியெல்லாம் தமிழிசையை ஒப்பிட்டுப் பேச முடியுமா என்று வியப்பு மேலிட வைக்கின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற பல தமிழ் இலக்கியப் பனுவல்களோடு அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த உறவும் தமிழிசை மீது கொண்ட தளராத பற்றும் அவரை இப்படியெல்லாம் சிந்தித்து எழுத வைக்கிறது என்பதற்குக் கட்டுரைகளில் அவர் தரும் சான்றுகளே ஆதாரம்.
மொழி அரசியல்
இது கர்நாடக சங்கீதத்துக்கு எதிரான நூல் அல்ல. ஆனால், அது எப்படித் தமிழிசையின் வழியே வந்தது என்பதை ஆய்வுகளோடு முன்வைக்கும் நூல். எதிர் கருத்துள்ளவர்கள் இது குறித்துப் பரிசீலிக்கலாம்; விவாதிக்கலாம். “ஸ்ருதி என்று இன்று நாம் அழைக்கும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உள்ளன. ஆனால், அத்தனையையும் வீழ்த்தி ‘ஸ்ருதி’ என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளதே! தமிழன் எவ்வளவு ஏமாந்த சோணகிரி” என்று விசனத்தோடு அவர் சொல்லும்போது அது குறித்தும், அதன் பின்னுள்ள மொழி அரசியல் குறித்தும் நாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நவீன மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக்கொண்டு வளர்ந்துகொண்டிருக்கும் மொழி என்று ஒரு பக்கம் நாம் பெருமை பேசினாலும் இழந்தவை இது போன்று எவ்வளவோ.
“கூத்து என்ற சொல் தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியத்திலோ (கலித்தொகை தவிர) எங்கும் இடம்பெறவில்லை. சங்க காலத்தையொட்டிய நாடக நூல் ஒன்றுகூட கிடைக்கவில்லை. ஆனால், நாடகத்தைக் குறிக்க 22 சொற்கள் உண்டு என்பது என்னே முரண்! 2,000 ஆண்டுகளுக்கு முன்பான, வளமையான அக இலக்கியங்களும், புற இலக்கியங்களும், காப்பியங்களும் கிடைத்திருக்கும்போது, தமிழ் நாடகங்கள் ஏன் கிடைக்கவில்லை. தமிழ்ப் புலமைக் களத்தாலும் ஆய்வுத்தளத்தாலும் இன்றும் இந்தப் புதிருக்கு விடைகாண முடியவில்லை. நான் தூங்காத பல இரவுகளுக்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார் மம்மது.
திணைகளும் பண்களும்
‘இசையும் பயிரியலும்’ என்ற கட்டுரையில் ஐந்து திணைகளுக்கும் உரிய பண்களை தன் ஆய்வின் வழி வெளிப்படுத்துவதோடு இன்றைய சங்கீத உலகில் அவை என்னென்ன ராகங்களாக வழங்கப்படுகின்றன என்பதையும் விரிவாக விளக்குகிறார். 2000 ஆண்டுகள் தொடர் பதிவுகளின் மூலம் தமிழிசைக்கு தொடர்ச்சியான மரபு உண்டு என்பதை ‘கருநாடக சங்கீதம் அயல் வழக்கா’ என்ற கட்டுரை மூலம் சொல்கிறார்.
தமிழிசை மட்டுமின்றி பரத நாட்டியத்துக்குத் தமிழர் நாட்டியமான ‘சதிர்’ எவ்வளவு முன்னோடியானது என்பதையும் ஒரு கட்டுரையில் விவரிக்கிறார். சங்கத் தமிழில் வரும் விறலியையும் சம்பந்தர் பதிகம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் ஆதாரங்களையும் சின்னய்யா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்கிற தஞ்சை நால்வர் வகுத்த பரத நாட்டிய ஆடல் வரிசை முறையே இன்றும் வழக்கத்தில் உள்ளதையும் வைத்து அதைப் பேசுகிறார்.
தமிழிசை குறித்த ஆய்வு நூல்களின் எண்ணிக்கை இன்றும் தமிழில் குறைவுதான். இப்படிப்பட்ட சூழலில் மம்மது போன்றவர்களின் எழுத்தும் செயல்பாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் மொழி மேல் உள்ள பற்றால் ஆவேசம் கொண்டு உணர்ச்சித் தளத்தில் கருத்துக்களை உதிர்ப்பது வேறு; தக்க சான்றுகளோடு தம் கருத்தை வலுவாக நிறுவுவது வேறு.
இதற்குப் பல துறைகள் சார்ந்த ஏராளமான வாசிப்பும் ஆய்வு நோக்கும் இசைபற்றிய நுண்ணறிவும் தேவைப்படுகிறது. மம்மது இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் என்பதை அவரின் இந்த புத்தகமும் நிறுவுகிறது.
- ரவிசுப்பிரமணியன்,
‘விதானத்துச் சித்திரம்’ உள்ளிட்ட
கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்,
தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT