Last Updated : 30 Jul, 2017 10:38 AM

 

Published : 30 Jul 2017 10:38 AM
Last Updated : 30 Jul 2017 10:38 AM

கலை, கலைக்காகவும்தான் மக்களுக்காகவும்தான்! ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற சித்ரவீணை ரவிகிரண் நேர்காணல்

சித்ரவீணை ரவிகிரண்! இரண்டு வயதிலேயே 325 வகை ராகங்களையும் 175 வகை தாளங்களையும் இனம்கண்டு சொல்லும் வல்லமை பெற்றிருந்தார். இரண்டு வயதில் வாய்ப்பாட்டு இசைக் கலைஞராக தம் இசைப் பயணத்தைத் தொடங்கிய ரவிகிரண், 12 வயதில் 21 தந்திகளுடன் கூடிய சித்ரவீணையை இசைக்கத் தொடங்கிட்டார். 18 வயதில் 24 மணிநேரம் தொடர்ந்து சித்ர வீணையை இசைத்து சாதனை செய்தார். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட இசை வடிவங்களை உருவாக்கியிருக்கும் ரவிகிரணின் இசைப் பங்களிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக, மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி விருது’க்கு இந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஓர் அந்திப் பொழுதில் பின்னணியில் வயலின் ஒலிக்க, சித்ரவீணை ரவிகிரணுடன் நடத்திய உரையாடலிலிருந்து…

இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போது உங்களின் திறமைக்கு மியூசிக் அகாடமியின் ‘ஸ்காலர்ஷிப்’ஐ நீங்கள் பெற்றது முதல் தற்போது மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரையிலான பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய தந்தையும் குருவுமான சித்ரவீணை நரசிம்மன் பெரிய வித்வான். தாத்தா கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்கார் பெரிய இசை மேதை. எங்கப்பா செய்த சாதனை இரண்டு வயதில் என்னை மேடையேற்றியது. இது பலருக்கும் அந்தக் காலத்தில் சிறிய வயதிலேயே அவர்களின் குழந்தைகளுக்கு சங்கீதத்தைப் பயிற்சியளிக்க ஒரு முன்னுதாரணமாக இருந்தது.

இரண்டு வயதில் மியூசிக் அகாடமி ஸ்காலர்ஷிப் வழங்கி ஊக்கப்படுத்தியது. இப்போதும் இன்னும் இசை தொடர்பான பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் உத்வேகத்தை மியூசிக் அகாமியின் விருது அறிவிப்பு எனக்கு அளித்திருக்கிறது. அடுத்து வித்வான்களே சென்று கற்றுக்கொள்ளும் மரபில் வந்த சங்கீத கலாநிதி டி.பிருந்தாவிடம் பத்து ஆண்டுகள் கற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மூத்த வித்வான்களான செம்மங்குடி, புல்லாங்குழல் மாலி, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற எண்ணற்ற கலைஞர்களின் அன்புக்கு உரியவனாக நான் இருந்தது; இப்போதும் சக கலைஞர்கள் என்மீது அன்பாக இருப்பது இவை எல்லாமே முக்கியமான தருணங்கள்தான். தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஊத்துக்காடு வெங்கடகவி, கோபாலகிருஷ்ண பாரதி என கர்னாடக இசைக்கு பெருமை சேர்த்திருக்கும் ஆளுமைகளை மேற்குலகத்துக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியை மெல்ஹார்மனியின் மூலமாக செய்துவருகிறேன். இசைக்கு பீத்தோவன், மொஸார்ட்டின் பங்களிப்பை உணர்ந்தவர்கள், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதரின் பங்களிப்பையும் கண்டு வியக்கிறார்கள்.

சித்ரவீணை வாத்தியத்தில் ஏதேனும் நீங்கள் மாற்றம் செய்திருக்கிறீர்களா?

கோட்டுவாத்தியத்தின் பழமையான பெயர் சித்ரவீணை. இதில் 21 தந்திகள் இருக்கும். பயணங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் சிறிய மாற்றங்களுடன் 20 தந்திகளுடன் நவசித்ர வீணை என்பதை வடிவமைத்தேன். சிதார், சந்தூர் போன்ற வாத்தியங்களோடு சேர்ந்து வாசிப்பதற்கு உகந்த ஸ்ருதியோடு இது இருக்கும். அதோடு மேற்குலக வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து ப்யூஷன் வாசிப்பதற்கும் சவுகரியமான வடிவமைப்போடு இந்த நவசித்ர வீணை இருக்கும்.

தொடக்கத்தில் கோட்டுவாத்தியம் காட்டெருமை கொம்பால் வாசிக்கப்பட்டது. அதன்பின் புளியமரத் துண்டைதான் பயன்படுத்தினார்கள். நானும் அதில்தான் வாசித்துவந்தேன். அமெரிக்காவில் இருக்கும் ஒரு விஞ்ஞானி எனக்கு டஃப்லான் என்னும் சிந்தடிக் பொருளை அறிமுகப்படுத்தினார். தற்போது அதைப் பயன்படுத்திதான் வாசித்துவருகிறேன்.

கலை கலைக்கே, மக்களின் ரசனைக்கே என்ற இரு கருத்துகளையும் எப்படி ஒன்றுபடுத்துவது?

நம் நாட்டில் திறமையான மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல இசையை மகிழ்ந்து ரசிக்க, பாட மற்றும் இசைக்க வாய்ப்புகள் தரப்பட்டால் அவர்களும் தலைசிறந்த இசைக் கலைஞர்களாகவோ, இசை ஆசிரியர்களாகவோ, இசையின் அழகைப் பாராட்டும் ரசிகர்களாகவோ கூட கொண்டுவர இயலும். இதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

தமிழகத்தில் இப்படியொரு முயற்சி 2006-லேயே அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலமாக எடுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் இசையை அறிமுகப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டன. இசையை அறிமுகப்படுத்தும் `இணையற்ற இன்னிசை’ என்னும் கையேடையும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகளையும் அளித்தோம். திறமையான பல மாணவர்களை அந்த முகாம்களில் சந்தித்தேன். இதுபோன்ற முயற்சிகள் தொடரும்போது, கலை, கலைக்காகவும் இருக்கும். மக்களின் ரசனைக்காகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் கலையையும் ரசனையையும் இணைக்கும் பாலம்.

பொதுவாகவே கலப்பிசை (Fusion) என்றாலே குழப்பமான (Confusion) இசை என்று பலரும் சொல்வார்கள். ஆனால் உங்களின் முக்கியமான இசைப் பணி மெல்ஹார்மனி. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

இந்திய செவ்வியல் இசையில் சில அடிப்படை விதிகள் உண்டு. மேற்கத்திய செவ்வியல் இசையில் சில அடிப்படை விதிகள் உண்டு. இதை சரியாக உணர்ந்து வாசிக்கும்போதுதான் ஓர் உன்னதமான இசை வடிவம் கிடைக்கும். இதற்கு இரண்டு தரப்பில் இருப்பவர்களுக்கும் இரண்டு வகையான இசையும் தெரிந்திருக்க வேண்டும். ‘கீழைநாடுகளின் இன்னிசை’ (மெலடி ஆப் தி ஈஸ்ட்); ‘மேலைநாடுகளின் ஒத்திசைவு’ (ஹார்மனி ஆப் தி வெஸ்டர்ன் மியூசிக்). இதில் பாப், ஜாஸ் என எல்லா வகையும் இருக்கும். இதைச் சேர்த்து நான் உருவாக்கியதுதான் மெல்ஹார்மனி.

இதன் தொடக்கப் புள்ளி எது?

2000-வது ஆண்டில் மிலினியம் ஃபெஸ்டிவல் இங்கிலாந்தில் நடந்தது. அதில் என்னை `கலாசங்கம்’ என்னும் அமைப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அழைத்தது. அப்போதுதான் வழக்கமாக ஒரு ப்யூஷன் நிகழ்ச்சி செய்வதற்குப் பதில், புதிதாக வேறு ஒரு முறையில் செய்யலாமே என்று யோசித்து நான் செய்ததுதான் மெல்ஹார்மனி. பிபிசி இதைப் பாராட்டி பெரிய அளவில் கவனப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, நியூஸிலாந்து என உலகின் பல நாடுகளிலிருந்து மெல்ஹார்மனி முறையில் நிகழ்ச்சிகளை செய்வதற்கு எங்களை அழைத்தனர். மெல்ஹார்மனியை சாஸ்திரிய இசைரீதியிலும் செய்கிறேன். ஜாக், ராக், ஜாஸ் கலைஞர்களுடன் சேர்ந்தும் செய்கிறேன்.

மேற்கில் இருப்பவர்கள் நம்முடைய இசையை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்?

சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து மெல்ஹார்மனி நிகழ்ச்சியை நடத்தினேன். முத்துசாமி தீட்சிதர், பீத்தோவன், மொசார்ட் ஆகியோரின் படைப்புகளைத்தான் அன்றைக்கு வாசித்தோம். மேற்குலக இசை மேதைகளான பீத்தோவன், மொஸார்ட் ஆகியோரின் இசைப் பங்களிப்புக்கு வழங்கிய அதே உற்சாகமும் மரியாதையையும் முத்துசாமி தீட்சிதரின் கம்போஸிங்குக்கும் அளித்தனர் அங்கு கூடியிருந்த 45 ஆயிரம் ரசிகர்கள்.

- வா. ரவிக்குமார்,

தொடர்புக்கு:

ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x