Last Updated : 23 Sep, 2013 07:25 PM

 

Published : 23 Sep 2013 07:25 PM
Last Updated : 23 Sep 2013 07:25 PM

மக்கள் கவிஞர் பாப்லோ நெரூதா!

பாப்லோ நெரூதாவின் நினைவு தினம் இன்று. காதல் கவிதைகளும், சமத்துவம் நிறைந்த உலகத்தையும் தன்னுடைய கவிதைகளில் வார்த்த பெருங்கவிஞர் இவர். சிலி நாட்டில் தோன்றிய நெரூதா எழுதியது ஸ்பானிய மொழியில். அப்பா ரயில்வே ஊழியர் இளம் வயதிலேயே அவர் தவறிவிட குடும்பத்தை காப்பான் பையன் என்று எதிர்பார்த்தார்கள். இவர் பிரெஞ்சு படித்துவிட்டு ஆசிரியர் ஆகலாம் என்று முயன்றார். ஆனால், மிஸ்ட்ரலின் பழக்கம் அவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. இவர் கவிதை எழுத வீட்டில் கடும் எதிர்ப்பு. செக் நாட்டைசேர்ந்த கவிஞரின் பெயரை புனைப்பெயராக்கி நெரூதா என்கிற பெயரில் குடும்பத்துக்கு தெரியாமல் கவிதை எழுத வந்தார். அதுவே பின்னர் வாழ்வாகிப்போனது.

அவரின் கவிதைகளில் காதலும்,சோகமும்,எளிய மக்களின் வாழ்க்கையை பாடும் வரிகளும் நிற்பி வழிந்தன. எண்ணற்ற நாடுகளில் தூதுவராக பணியாற்ற அனுப்பிய அக்காலத்தில் வறுமை அவரை துரத்தவே செய்தது. அங்கெல்லாம் தன்னின் சோகங்களை தாண்டி அற்புதமான கவிதைகளை எழுதினார் அவர். இந்தோனேசியா நாட்டில் தனிமையில் வாடிக்கொண்டு இருந்த பொழுது சந்தித்த பெண்ணுடன் காதல் பூண்டு

அவரையே திருமணம் செய்துகொண்டார். 'கவிதை எழுதுபவனும், ரொட்டிக்காரனும் ஒன்றே. இருவரும் வேற்றுமைகள் பார்க்க கூடாது !' என்று எழுதிய அவர் அப்படியே இருந்தார். உலகம் முழுவதும் ஒரே தோலின் நிறம் தான் என்று எழுதினார் அவர்.

மக்களை ஒடுக்கிய அரசாங்கங்களை எதிர்த்து குரல் கொடுத்து அடிக்கடி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழலும் அவருக்கு உண்டானது. அவரின் கவிதைகள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக பாட்டாளிகளை ஒன்று திரட்டியது . ஒரு முறை விடேலா எனும் சர்வாதிகாரிக்கு எதிராக தயாரித்த உரையில் சித்திரவதை முகாமில் எத்தனை நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள் என்று பெயர் பட்டியலை வாசித்தார் மனிதர். சீக்கிரமே விடேலாவின் ஆட்சி கவிழ்ந்தது.

எத்தனையோ துன்பங்கள்,தொடர்ந்து துரத்திய அரசாங்கங்கள் எல்லாமும் அவரை வாட்டிக்கொண்டு இருந்த பொழுதும் மனித குலம் ஒன்று சேரும். போர்கள் நீங்கி உழைப்பாளிகள் உயர்வார்கள் என்று நம்பினார் அவர். அதனால் நம்பிக்கையின் நிறமான பச்சை நிறத்தில் தான் அவர் எப்பொழுதும் எழுதினார். சார்த்தருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பொழுது இதை முதலில் நெரூதாவுக்கு அல்லவா கொடுத்து இருக்க வேண்டும் என்று அப்பரிசை ஏற்க மறுத்தார் அவர்.

நெரூதாவுக்கு 1971 இல் இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது. அறுபது வருடங்களுக்கு முன் ஒரு லட்சம் தோழர்கள் முன் கரகரத்த கவிதை வாசித்த புரட்சிக்காரர் அவர். பல வருடம் காத்திருப்புக்கு பின் அலண்டே காலத்தில் நாடு திரும்பி எழுபதாயிரம் மக்கள் முன் கவிதையை வாசித்தார் என்றால் அவர் மீது மக்களுக்கு எத்தகு பற்று இருந்தது என உணரலாம்.

புற்றுநோயால் இறந்து போன இவரின் மரணத்தின் பொழுது மக்கள் வந்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனும் பினோசெட் எனும் சர்வாதிகாரியின் உத்தரவை மீறி லட்சகணக்கான மக்கள்,ஊரடங்கை உடைத்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கவிதை வெறுமனே கவர்வதற்கு மட்டும் இல்லை, கட்டுப்பாடுகளை உடைப்பதற்கும் தான் என பாடிய இவர் வாழ்ந்த மண்ணை தொட்டு முத்தம் கொடுக்க வேண்டும் அவரின்

'உங்களுக்கு சில சங்கதிகள் சொல்ல வேண்டும்' கவிதையின் வரிகள் இவை:

துரோகத்தை தந்த தளபதிகளே

என் இறந்த வீட்டை பாருங்கள்

என் உடைந்த தேசத்தை

பாருங்கள்

மலர்களுக்கு பதிலாக

நீங்கள் மூட்டிய தீயால் தகிக்கும் உலோகம்

வழியும் வீடுகளை பாருங்கள்

இறந்த எம் குழந்தைகளின்

நெஞ்சத்தில் இருந்து துப்பாக்கிகள்

துடித்து எழும்

உங்கள் பாவங்களில் இருந்து பட்டு தெறிக்கும் குண்டுகள்

பிறக்கும்

உங்கள் நெஞ்சில் அவை தைக்கும்

நீங்கள் கேட்பீர்கள்

என் நாட்டின் பெருங்கனவுகளையும்,பெரிய எரிமலைகளையும்

இலைகளையும் பாட மாட்டாயா என்று

உங்களுக்கு சொல்வேன்

ரத்தம் வழியும்

என் நாட்டின் தெருக்களை வந்து பாருங்கள்

ரத்தம் பாயும் என் தெருக்களை வந்து பாருங்கள் -இப்படி எழுதும் நெரூதா

கீழே இப்படியும் எழுதுவார்

நிழலுக்கும் ஆன்மாவுக்கும்

இடையே ரகசியமாக உன்னை

இருட்டின் சங்கதிகளை

விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன்

பூவாத மலரை நேசிப்பதை போல

உன் மீது ப்ரியம் கொள்கிறேன்

மலராத மலரின் கசியாத வெளிச்சமாகிய உன் பிரியத்தை சேமிக்கிறேன்

சிக்கல்களோ பெருமையோ இல்லாமல் உன்னை காதலிக்கிறேன்

உன்னையன்றி வேறெதையும் எனக்கு காதலிக்க வழி புலப்படவில்லை

என் இதயத்தின் மீது நீ வைக்கும் உன் கரமே என் கரம்

நீ கண்மூடினால் நான் யாவையும் மறந்து சொக்கிப்போவேன்.

(செப்.23 - பாப்லோ நெரூதாவின் நினைவு தினம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x