Published : 13 May 2017 09:54 AM
Last Updated : 13 May 2017 09:54 AM
வறட்சியில் சாகும் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு மாதத்துக்கு மேல் டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை சம்பிரதாயத்துக்காகக்கூட மோடி அழைத்துப் பேசவில்லை. மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசி, விவாதித்து தீர்வு காண வேண்டிய நாடாளுமன்றத்துக்குத் தொடர்ச்சியாக வரத் தயங்குகிறார். மற்றொருபுறம் பெருநிறுவன அதிபர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் நேரம் ஒதுக்கிப் பேசுகிறார்.
இதன் அடிப்படை என்ன என்ற கேள்வி அனைவருக்கும் இயல்பாக எழும். இதுபோல மக்கள் மனதில் தொடர்ச்சியாக எழுந்து, வெளியே சத்தமாகக் கேட்கப்படாத கேள்விகள், மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் நேற்றைக்கும் இன்றைக்கும் மாறி மாறிப் பேசும் பேச்சுகள், எந்தக் காலத்திலும் நிறைவேற்றப்படாத போலி வாக்குறுதிகள் என அனைத்தையும் ஆதாரங்களுடன் போட்டு உடைத்திருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெயேஷ்.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் 'நல்ல நாள் வரும், நல்ல நாள் வரும்' என்று இன்றுவரை மோடி திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார். அவர் வாக்குறுதி அளித்ததுபோல வறுமையோ ஊழலோ இந்த நாட்டில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது?
சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்றார். ஆனால், நிஜத்தில் சொந்த வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையே மூன்று மாதங்களுக்கு எடுத்துப் பயன்படுத்த முடியாத நிலையே இருந்தது. பெட்ரோல் விலை ஏற்றம் இன்றைக்கு தினசரி வழக்காகிவிட்டது. ஆனால், உலகச் சந்தைக்கு ஏற்ப விலையை மாற்றுவதை மோடி முன்னர் விமர்சனம் செய்திருந்தார். பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் கட்டணம் ஏற்றப்படுகிறது என்று காங்கிரஸை விமர்சித்த மோடி, தன்னுடைய ஆட்சியில் அதையே எந்தக் கூச்சமும் இல்லாமல் மிகப் பெரிய அளவில் செய்தார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை கைக்கு எட்டாத தொலைவுக்குப் போய்விட்டது.
வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று எதிர்க் கட்சியாக இருந்தபோது சொன்ன பா.ஜ.க., கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 2.5 லட்சத்திலிருந்து வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்கவே இல்லை.
நேரடி அந்நிய முதலீட்டு உச்ச வரம்பு மீறப்படுவதாக முன்பு எதிர்ப்பு தெரிவித்த மோடி, அதே வரம்பு மீறிய முதலீட்டை இப்போது ஆரவாரமாக வரவேற்கிறார். காங்கிரஸின் ஊழலை விமர்சித்து மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., இன்றைக்குத் தாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதற்கு அத்தாட்சியாக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் எத்தகைய அம்சங்களை உருவாக்கியிருக்கிறது? ஊழலுக்கு எதிரான திட்டவட்டமான எந்த நடவடிக்கையும் லோக்பால் மசோதாவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இப்படி பாஜகவும் மோடியும் அன்றைக்குப் பேசியதை, இன்று தலைகீழாக மாற்றிப் பேசுவதன் மூலம் தங்களைத் தாங்களே கேலிக்கூத்தாக்கிக்கொள்வதை ஆதாரங்களுடன் சொல்கிறது இந்த நூல். இந்த அம்சங்களில் சிலவற்றை அவ்வப்போது வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நம் கவனத்திலிருந்து தப்பிய முக்கிய விமர்சனங்களை இந்த நூல் தொகுத்துத் தந்திருக்கிறது.
பொய் வேடங்களில் மன்னன்
ஜெயேஷ்
தமிழில்: ஆனந்த்ராஜ்
விலை: ரூ. 100
வெளியீடு: சிலம்பு பதிப்பகம்,சென்னை-90.
044-4323 3455
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT