Last Updated : 15 Mar, 2014 03:02 PM

 

Published : 15 Mar 2014 03:02 PM
Last Updated : 15 Mar 2014 03:02 PM

குழந்தையின் குரல்

அரசன் ஒருவனின் தலையில் நரை தோன்றத் தொடங்குகிறது. அதுகுறித்து கவலைப்படும் அரசனுக்கும், அரண்மனைக் கவிஞனுக்கும் இடையிலான உரையாடல் இது. தாகூரின் ‘The Cycle of Spring’ என்ற நாடகத்தில் வரும் ஒரு பகுதி இது.

அரசன்: கவியே, என்னிடம் அவகாசம் கேட்காதீர்கள். ஏதாவது செய்யுங்கள். ஏதாவது செய்யுங்கள். உங்கள் கையில் தயாராக ஏதாவது இருக்கிறதா? ஏதாவது நாடகம்? ஏதாவது கவிதை? ஏதாவது கதை?

கவிஞன்: ஆம் அரசே அதுதான். ஆனால் அது நாடகமா, கவிதையா, கதையா என்பதை என்னால் சொல்ல முடியாது.

அரசன்: நீங்கள் எழுதியதின் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும் இல்லையா?

கவிஞன்: இல்லை அரசே. ஒரு கவிஞன் எழுதுவதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அரசன்: பின் என்ன இருக்க வேண்டும்?

கவிஞன்: ஓசை இருந்தால் போதும்.

அரசன் : நீ என்ன சொல்கிறாய்? அதில் தத்துவம் இல்லையா?

கவிஞன்: நல்ல வேளை, அப்படி ஒன்றும் இல்லை.

அரசன்: பிறகு அது என்னதான் சொல்கிறது?

கவிஞன்: அரசே, அது சொல்கிறது ‘நான் இருக்கிறேன்’. ஒரு பிறந்த குழந்தையின் முதல் அழுகையின் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? குழந்தை பிறந்தவுடன் தன்னைச் சுற்றியுள்ள நிலம், நீர், ஆகாயம் இவற்றின் இரைச்சலைக் கேட்கிறது. அவை எல்லாம் ‘நாங்கள் இருக்கின்றோம்’ என்று சொல்கின்றன. அந்தச் சிறிய பிஞ்சும் பதில் அளிக்கிறது ‘நான் இருக்கிறேன்’. என்னுடைய கவிதையும் பிறந்த குழந்தையின் அலறலைப் போன்றது. இந்தப் பிரபஞ்சத்தின் அலறலுக்கு ஓர் எதிர்வினை.

அரசன்: அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லையா கவியே?

கவிஞன்: இல்லை. வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய பாட்டில் உயிர் இருக்கிறது. அது சப்தமிடுகிறது. ‘மகிழ்ச்சியிலும் துன்பத்திலும், இயக்கத்திலும் ஒய்விலும், வாழ்விலும், மரணத்திலும், வெற்றியிலும், தோல்வியிலும், இந்த உலகத்திலும், அடுத்த உலகத்திலும், துணையாக ‘நான் இருக்கிறேன்’ என்று.

அரசன்: கவியே நல்லது. ஆனால் உங்கள் நாடகத்தில் தத்துவம் இல்லை என்றால் அது இப்போதெல்லாம் செல்லுபடியாகாது.

கவிஞன்: உண்மைதான் அரசே. இப்போதைய இளம் பருவத்தினர்; எல்லாவற்றையும் சேகரிக்கத்தான் விரும்புகிறார்கள். உணர்வதை அல்ல.

அரசன்: பின் கேட்பவர்கள் என்று நான் யாரைக் கொள்வது?

கவிஞன்: யாருடைய தலை நரைக்க ஆரம்பித்திருக்கிறதோ அவர்களைக் கேளுங்கள்.

தமிழில்: வெளி ரங்கராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x