Last Updated : 03 Jan, 2016 01:23 PM

 

Published : 03 Jan 2016 01:23 PM
Last Updated : 03 Jan 2016 01:23 PM

ஓவியர் பெருமாள் நூற்றாண்டு: பெருவெளியில் பறந்த சிறு பறவை

‘பெருமாள் ஐயா’என்றும், ‘பெருமாள்தா’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் ஓவியரும் சிற்பியுமான பெருமாளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் அண்மையில் மதுரையில் நடந்து முடிந்தது. மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாகப் பெருமாள் ஐயாவின் ஓவியங்களும் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தின் அருகிலுள்ள அம்மாபட்டியில் 1915-ம் ஆண்டு பிறந்த பெருமாள் ஐயா உத்தமபாளையத்தில் பள்ளிக் கல்வி பயிலும்போதே ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

விடுதலைப் போராட்டவீரரும் ‘பாரதி’என்ற இதழை நடத்தியவருமான நாராயணசாமியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. நாராயணசாமி ஒருமுறை சிறைப்பட்டபோது அவருடன் இருந்த ஜி.ராமச்சந்திரன் சாந்திநிகேதனைப் பற்றி அவரிடம் கூறினார். சாந்திநிகேதனில் பயின்ற இந்த ஜி.ராமச்சந்திரனே பின்னாளில் காந்தி கிராமத்தை நிறுவியவர். சாந்திநிகேதனில் பணியாற்றிய நந்தலால் போஸ் போன்ற ஆசிரியர்களின் பெருமைகளைக் கூறி அங்கு நல்ல மாணவர்களை அனுப்பிவைக்கச் சொன்னார் ராமச்சந்திரன்.

சிறையிலிருந்து வெளிவந்த நாராயணசாமி 1933-ம் ஆண்டு மே மாதம் பெருமாளை சாந்திநிகேதனுக்கு அனுப்பிவைத்தார். அப்போது கோடை விடுமுறை. என்றாலும், பெருமாள் அங்கேயே தங்கியிருந்து விடுமுறைக்குப் பின் சாந்திநிகேதனில் உள்ள கலாபவனில் மாணவராகச் சேர்ந்தார்.

1933-லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் நந்தலால் போஸ், சுரேந்திரநாத் கர், வினோத் பிகாரி முகர்ஜி, வினாயக் சிவராம் மசோஜி, ராம் கிங்கர் பைஜ் போன்ற பெரும் கலைஞர்களிடம் ஓவியமும் சிற்பமும் பயின்றார். 1936-லும் 1937-லும் ஃபைஸ்பூர், ஹரிபுரா ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டுப் பந்தல்களை வடிவமைப்பதில் தன் குரு நந்தலால் போஸுக்குத் துணைபுரிந்தார். அதேபோல், பரோடாவிலுள்ள கீர்த்தி மந்திரில் நந்தலால் போஸ் சுவரோவியங்கள் வரைந்தபோது அவருடைய உதவியாளராகச் செயல்பட்டார்.

உலகளாவியப் பயணம்

சிறு கிராமத்திலிருந்து புறப்பட்ட ஓர் இளைஞன் இவ்வாறு தேசமென்கிற பெருவழியில் மேற்கொண்ட பயணமானது அன்று அநேகர் செய்யத் துணிந்திராத அரிய செயலாகும். ஆங்கிலம் தவிர, வங்காளி, இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி ஆகியவற்றையும் பெருமாள் ஐயா அறிந்திருந்தார். 1976வரை சாந்திநிகேதனில் பணியாற்றிய அவர், அக்காலகட்டத்தில், தேச அளவிலும் உலக அளவிலும் பல்வேறு கலைஞர்கள், கலை விமர்சகர்கள், கலை வரலாற்றாசிரியர்கள் ஆகியோருடன் உறவாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். 1971-ல் ஜப்பானுக்குச் சென்ற அவர், பல இடங்களில் தனிநபர் கண்காட்சிகளை நடத்தினார்.

ஓவியராகவும் சிற்பியாகவும் விளங்கிய பெருமாள் ஐயா, சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றிய நீண்ட காலகட்டத்தில் தன் சொந்தக் கண்காட்சிகளை நடத்துவது, கலைப் படைப்புகளை விற்பது ஆகியவற்றில் ஈடுபாடு காட்டவில்லை. மாறாக, சந்தால் பழங்குடி மக்களின் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்களைத் தீட்டுவதில் ஆர்வம் காட்டினார். வணிக முக்கியத்துவமோ, நிரந்தரத்தன்மையோ இல்லாத இவ்வகைக் கலையை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவராகப் பெருமாள் ஐயா விளங்குகிறார்.

பெருமாளின் கலை நோக்கு

பெருமாள் ஐயாவின் ஓவியப் பாணியில் சீன-ஜப்பானிய நீர்வண்ண ஓவியங்களின் தாக்கம் பெரிதும் காணப்படுகிறது. இது ஒரு வகையில் அன்று சாந்திநிகேதனில் கீழைத் தேயக் கலை மரபுகளுக்குத் தரப்பட்ட அழுத்தத்தின் விளைவு என்றபோதிலும், பெருமாள் ஐயாவைப் பொறுத்தவரையில் இது அவரது கலைத்தத்துவத்தின் பிரதானக் கூறுகளில் ஒன்றாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

உண்மையில், பெருமாள் ஐயா ஜப்பானியத் தேநீர்க் கலை பற்றிய ஒரு நூலையும், சீன - ஜப்பானிய ஓவியக் கலைத் தத்துவத்தைப் பற்றிய ஒரு நூலையும் தமிழில் பெயர்த்தார் (நந்தலால் போசின் சில்பகதா என்ற நூலையும், தாகூரின் நாடகம் ஒன்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்). சீன -ஜப்பானிய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணப்படும் டிராகனை ‘யாளி’ என்றே அவர் தமிழ்ப்படுத்துகிறார்.

பெருமாள் ஐயாவின் ஓவியங்களில் மனித உருவங்களும் இயற்கையுமே பெரும்பங்கு வகிக்கின்றன. விமர்சகர்கள் குறிப்பிடுவதுபோல, அவரது படைப்புகளில் புராணிகக் கதைக் கூறுகளும் அடிக்கருத்துகளும் காணப்படவில்லை. நந்தலால் போஸ் உள்ளிட்ட வங்காளத்துக் கலைப் பள்ளியினின்றும் பெருமாள் ஐயாவின் கலைத்தத்துவம் விலகுகிற இடம் இது. இயற்கையைச் சித்திரிக்கும்போது பெருமாள் ஐயாவுக்குச் சில எண்ணப் பிடிப்புகள் இருந்ததாகத் தோன்றுகிறது. குறிப்பாக, அவர் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களை வரையும்போது அவற்றைக் குடும்பமாகவோ, கூட்டங் கூட்டமாகவோ சித்திரிக்கிறார்.

இத்தகைய ஓவியங்களைக் கொண்டு அவரை ஒரு பிரதிபலிப்பு ஓவியர் என வகைப்படுத்துகின்றனர். அவரது படைப்புகளில் மிகச் சிறிய ஒரு பகுதியே நமக்குக் கிடைத்திருக்கும் நிலையில் இத்தகைய முடிவுக்குவருவது பொருத்தமற்றதாய்த் தோன்றுகிறது. மேலும், கிடைத்திருக்கிற சில ஓவியங்களிலேயே யதார்த்தச் சித்திரிப்பைக் கடந்த நிலையைப் பல இடங்களில் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, ஓர் ஓவியத்தில், இரண்டு பாம்புகள் படுத்திருக்க, அவற்றின்மீதும், அவற்றைச் சூழ்ந்தும் ஒரு தவளைக் கூட்டம் இயல்பாகத் தங்கியிருப்பதைப் பார்க்கிறோம். அவரது சிற்பங்கள் பெரிதும் கிடைக்காத நிலையில் அத்துறையிலும் அவரது பங்களிப்பை மதிப்பிட இயலவில்லை.

இயற்கையைப் பெரிதும் நேசித்த பெருமாள் ஐயா பறவைகளைக் கவனிப்பதிலும், தேனீ வளர்ப்பதிலும், இயற்கையைப் படம்பிடிப்பதிலும் ஆர்வம் உடையவராக இருந்தார். மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக விளங்கினார். சிந்தனை மலர்கள், சிந்தனைக் கதிர்கள், சிந்தனைச் சுடர்கள் என்கிற அவரது மூன்று நூல்கள் வாழ்க்கை பற்றிய தத்துவப் பிரச்சினைகளை எளிமையான முறையில் எடுத்துரைக்கின்றன.

கிராமத்து ஒற்றையடிப் பாதைகளிலிருந்து இந்தியக் கலைத் தத்துவம்வரை பல்வேறு விஷயங்களை இவற்றில் அவர் எடுத்துரைக்கிறார். “நேர் பாதையைத் தவறவிட்ட அபூர்வ மனிதர்கள்” என்ற கட்டுரையில் காந்தியடிகள் இங்கிலாந்தில் படிப்பை முடித்து இந்தியா திரும்பியபின் மும்பையில் ஒரு பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்ததைக் குறிப்பிடுகிறார். அதற்குரிய தகுதி இல்லாததால் அன்று அந்த வாய்ப்பை இழந்த காந்தி நேர் பாதையைத் தவறவிட்டது அவருக்கும், நாட்டுக்கும், மனிதகுலத்துக்கும் பெரும் பேறாக அமைந்தது என்று பெருமாள் ஐயா எழுதுகிறார்.

இவ்வாறு நேர் பாதையைத் தவறவிட்ட அபூர்வ மனிதர்களில் ஒருவராகவே பெருமாள் ஐயாவும் விளங்குகிறார். அம்மாபட்டியில் பிறந்து, தேசம், சர்வதேசம் என்கிற பெருவெளிகளில் பயணித்த இந்த அபூர்வ மனிதரின் வாழ்க்கை இன்றும் நமக்கு ஆதர்சமானதாகவே உள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x