Published : 09 Nov 2014 11:39 AM
Last Updated : 09 Nov 2014 11:39 AM

இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்

தமிழகத்தின் வறண்ட பகுதியான சிவகங்கையில் உள்ள மதகுப்பட்டி எனும் சிற்றூரில் பிறந்தவர் கண.முத்தையா. சக்கந்தி ஜமீன் எனும் வணிகக் குடும்பத்தின் செல்லப் பிள்ளை. தந்தையின் மரணத்துக்குப் பின்னர் நஷ்டத்தில் இருந்த வியாபாரத்தையும் பெரிய குடும்பத்தையும் தம் 17 வயதில் தாங்கத் தொடங்கினார்.

நண்பர்களின் உதவியாலும் தன் கடுமையான உழைப்பாலும் வியாபாரம் சீர்செய்யப் பெற்றுக் குடும்பப் பிரச்சினையும் ஒழுங்கு செய்யப்பட்டது. அப்போதே தமிழகத்தில் 1932 முதல்

36-வரை இந்திய விடுதலைப் போரில் பங்குபெற்றார். ஆர்.வி.சாமிநாதன், மதுரை சிதம்பர பாரதி, மங்கல் தியாகராஜ சிவம், வில்லிபுத்தூர் கிருஷ்ணசாமி நாயுடு போன்றவர்களின் தோழமையும் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜர் இவர்களின் தொடர்பும் கண.முத்தையாவைப் பொதுவாழ்வுப் பயணத்தில் ஈடுபடவைத்தது .

பர்மாவில் பத்திரிகைப் பணி

1936-ம் ஆண்டு இறுதியில் பர்மாவுக்குப் பயணமானார். அங்கே ஏ.கே. செட்டியாரின் ‘தன வணிகன்’ இதழில் கண.முத்தையாவும் காரைக்குடி சா.கணேசனும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினர். இதற்கென ஊதியம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் நட்பும் கிட்டி, அவர் தொடங்கிய ‘ஜோதி’ மாத இதழுக்குப் பங்குப் பணம் கொடுத்ததோடு அவ்விதழின் இறுதிக் காலத்தில் அதன் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றார் கண.முத்தையா

ரங்கூன் நகரின் புறநகரான கம்பையில் அமைந்த செட்டியார்கள் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பணியில் நான்காண்டுகள் பங்களிப்புச் செய்தார். மகாத்மாவால் திறந்துவைக்கப் பெற்ற அந்த ‘பர்மாவின் சாந்திநிகேதன்’ பள்ளியோடு தொடர்புகொண்டிருந்த காலத்தை அவரது மகிழ்ச்சியான காலம் என்று சொல்ல முடியும். அதன் பின் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து யுத்தக் கைதியாகவும் பல அனுபவங்களை பெற்றிருக்கிறார்.

இந்திய தேசிய ராணுவத்தில்

கண. முத்தையா, இந்திய தேசிய ராணுவத்தில் ராணி ஜான்சி ரெஜிமெண்டின் ‘லயசன் ஆபீஸர்’ பொறுப்பில் பணியாற்றியவர். நேதாஜியுடன் அருகிருந்து பழகிய அனுபவம் பெற்றவர். நேதாஜியின் மேடைப் பேச்சுக்களை இவர் மொழிபெயர்த்திருக்கிறார். 1943 முதல் 1945-வரை பல நிலைகளில் ஐ.என்.ஏ.வில் பணியாற்றியவர். ஏப்ரலில் நிலைமை மோசமாகி, இந்தியாவுக்குப் போக வேண்டிய படை வீரர்களும் ஆபீஸர்களும் ஜெனரல் லோகநாதன் தலைமையில் சரணடைய முடிவுசெய்யப்பட்டது. படையினர் அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். கடைசியாக கேப்டன் ஜானகித் தேவரும் ஆபீஸர் சரஸ்வதி பாயும் மலேயாவுக்குப் போகத் தயாரானார்கள். அந்த இரு பெண்களையும் கூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு, ரங்கூன் நகரிலிருந்து ஒன்பது மைல் அளவில் உள்ள விளக்கு ரோட்டில் வந்து காத்திருக்கும்படி செய்தி வந்தது. கண.முத்தையாவும் அப்படியே செய்தார். அங்கு, மேஜர் மகபூப் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து நின்றது. ஜெனரல் போன்சலே சிம்மம் போல இறங்கினார். சிறிது நேரத்தில் மற்றொரு கார் வந்தது. அதிலிருந்து நேதாஜி இறங்கினார். வாய் நிறைய வெற்றிலை போட்டு, சிகரெட்டையும் புகைத்தபடி சிரித்த முகத்தோடு, “ நம் வேலை நல்ல முறையில் முடிந்துவிட்டது. நீங்கள் யுத்த களத்தில் ‘பொசிஷன்’ மாற்று வதில்லையா? அதுதான் இதுவும். இந்தியா நிச்சயம் விடுதலை பெறும். வாழ்த்துகள்” என்று கூறினார். இதுவே நேதாஜியைக் கண.முத்தையா இறுதியாகக் கண்ட நிகழ்வு.

சிறையில் மொழிபெயர்ப்பு

வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்ட முத்தையா, ராகுல சங்கிருத்தியாயன் இந்தியில் எழுதிய ‘பொதுவுடமைதான் என்ன?’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னும் நூல்களை, பர்மா சிறையில் யுத்தக் கைதியாக இருந்தபோது தமிழில் மொழிபெயர்த்தார். அந்தக் கையெழுத்துப் பிரதியை மட்டுமே தம் உடைமையாகப் பாதுகாத்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தம் தமிழ்ப் புத்தகாலயத்தின் மூலம் பதிப்பித்தார். தமிழ்ப் புத்தகாலயத்தை 1946-ல் தொடங்கினார்.

சென்னை மாகாணத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்தபோது ‘பொதுவுடமைதான் என்ன?’ நூலைப் பதிப்பித்த கண.முத்தையாவுக்கு நெருக்கடி தர சட்டசபையில் அப்போது கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதில் சொன்ன கல்வி அமைச்சர் டாக்டர் சுப்பராயன் (மோகன் குமாரமங்கலத்தின் தந்தை), “அந்த நூல் வெளிவந்ததுமே நான் வாங்கிப் படித்துவிட்டேன். அது கட்சிப் பிரசார நூல் அல்ல; ஒரு நல்ல தத்துவ விளக்க நூல். தத்துவ விளக்கங்களைத் தடைசெய்யக் கூடாது” என்றார்.

வால்கா முதல் கங்கை வரை

அறிஞர் அண்ணா, ‘வால்கா விலிருந்து கங்கை வரை’ வெளி வந்த சில தினங்களுக்குப் பின் அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமொன்றில், அந்நூலைப் பாராட்டி “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்; நல்ல தமிழில் எழுதப்பட்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார். அன்று அரசும், அமைச்சரும் அரசியல் தேர்ந்தோரும் சிந்தனைச் செல்வமான புத்தகங்களை எப்படிப் போற்றினர் என்பது இச்சம்பவங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.

தேர்ந்த பதிப்பாளர்

புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் முத்தையா. கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற சிறந்த படைப்பாளிகளின் நூல்களையும், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, சாமி சிதம்பரனார், கோவைக் கம்பர் பி.ஜி.கருத்திருமன் போன்ற ஆய்வறிஞர்களின் நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டார். இந்திரா பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் எனப் பல படைப்பாளிகளின் கனமான படைப்புகளையும் தமிழுக்குத் தொடர்ந்து பதிப்பித்துப் பரப்பினார். அகிலனும், நா.பார்த்தசாரதியும் வேறு பதிப்பாளர்களிடமிருந்து விலகி வந்த பின்பு இறுதிவரை கண. முத்தையாவிடம் இணை பிரியா நட்புறவோடு இருந்தனர்.

கண.முத்தையா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும், பதிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தீவிர காந்தியச் சிந்தனை கொண்டவராயினும் மாற்றுச் சிந்தனையும் இங்கே வளர்ந்தால்தான் நாடு உருப்படும் என நம்பிச் செயல்பட்டார். மாக்ஸிம் கார்க்கியின் பல நூல்களையும், ஜூலிஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பையும் மாசேதுங்கின் கலையும் இலக்கியமும் நூலையும் ஸ்டாலின் எழுதிய மொழிவாரிப் பிரச்சினை பற்றிய ஒரு நூலையும் தமிழகத்தில் அன்றே சிவப்புக் கம்பளம் விரித்துப் பரப்பினார்.

பின்னாட்களில் அமெரிக்கா, தனது நாட்டில் நூல்கள் பலவற்றைக் குறிப்பிட்டு அவற்றை இந்தியப் பதிப்பாளர்கள் தம் தாய் மொழியில் வெளியிட விரும்பினால் அப்புத்தகத் தயாரிப்புக்கான செலவில் பெரும் பகுதியை மானியமாக அளிக்கத் தயார் எனக் கூறித் தமிழகத்திலும் வலை விரித்தது. ரஷ்ய நிறுவனம் ஒன்றும் மானியம் தர முன்வந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் இசைவு தந்துவிட்டனர். ஆனால், தமிழ்ப் புத்தகாலய நிறுவனர் கண.முத்தையாவும் பாரி நிலையம் க.செல்லப்பனும் தாம் இப்படி வெளியிட விரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டனர். “நீங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு நாங்கள் நூல்களை வெளியிடும்போது எங்களுடைய நல்லெண்ணமும் நாட்டுப் பற்றும் குறைந்துவிடுவதுபோல் எனக்குத் தோன்றியது. அதனால்தான் நான் அந்தத் திட்டத்தில் சேரவில்லை” என்று கண.முத்தையா தம் ‘முடிவுகளே தொடக்கமாய்’ நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

இப்படியும் ஒரு தமிழ்ப் பதிப்பாளர் இந்தத் தமிழ்நாட்டில் 1997 வரை வாழ்ந்திருக்கிறார்.

அகிலன் கண்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: akilankannan51@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x