Last Updated : 25 Feb, 2017 10:17 AM

 

Published : 25 Feb 2017 10:17 AM
Last Updated : 25 Feb 2017 10:17 AM

என் நூல்கள்: சாரு நிவேதிதா

நான் பிறந்து வளர்ந்த ஊர் நாகூர். அது ஒரு சிற்றூர். ஒரு பறவைக்கோ, முற்றும் துறந்த முனிவனுக்கோ தேச, இன, மத அடையாளங்கள் இருக்க முடியுமா என்ன? என் எழுத்திலோ சிந்தனையிலோ இந்த அடையாளங்கள் எதுவும் இருக்காது. மனித வரலாற்றில் இந்த அடையாளங்களை முன்னிட்டே பேரழிவுகளும் பெரும் போர்களும் நிகழ்ந்தன. எனவே ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் மனித இனத்தின் விடுதலைக்கான கோட்பாடு என இளம் வயதிலேயே எனக்குப் புரிய வைத்தது நாகூர்.

மூன்று வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் அங்கே வாழ்ந்தார்கள். ஊரின் கிழக்கே இஸ்லாமியர்; மேற்கே - அதாவது ஊருக்கு வெளியே – தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள்; நடுவே பெருமாள் கோயில், சிவன் கோயிலைச் சுற்றி இந்துக்கள். எங்கள் வீடு தாழ்த்தப்பட்ட மக்களின் குடிலுக்கு அருகே இருந்தது. வீட்டுக்கு ஒரு பக்கம் இடுகாடு, மற்றொரு பக்கம் சுடுகாடு.

ஊர் எனக்குள் இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒன்று, ஒரு சமூகத்தில் தடை என்று விலக்கப்பட்டிருக்கும் விஷயம் மற்றொரு சமூகத்தில் சகஜமாக இருந்தது. மண உறவுகளில் இதை நான் அதிகம் கண்டேன். கலாச்சார அடையாளங்கள் இடம், காலம், மதம் போன்ற பல்வேறு காரணிகளால் கட்டமைக்கப்படுவது அந்த வயதிலேயே எனக்குப் புரிந்தது. எக்காலத்திலும் இந்தத் தளைகளில் மாட்டலாகாது என்று முடிவு செய்தேன்.

இரண்டாவது, எங்கள் வீடு இருந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பன்றி வளர்த்தார்கள். உடும்பு தின்றார்கள். (இருபது வயது வரை உடும்புக் கறி சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அது பாதுகாக்கப்படும் உயிரினம் என்று தெரியாது.) எங்கள் பெண்கள் ஊர் பூராவும் சென்று ஓட்டு வீடுகளில் இருந்த தண்ணீர் இல்லாத கழிப்பறைகளில் மலம் அள்ளினார்கள். ஆண்களும் மலம் அள்ளினார்கள். ஆனால், அது பன்றிக் கழிவு. பிரம்புக் கூடை இடுப்பில் இருக்கும். வலது கையில் உள்ள ‘தொரட்டி’யைப் பன்றிக் கழிவில் வைத்து இடது காலால் அதைத் ‘தொரட்டி’யில் தள்ளுவார்கள். பிறகு, அது ‘தொறட்டி’யிலிருந்து கூடைக்கு இடம்பெயரும். இதுபோல் சேகரிக்கப்பட்ட பன்றிக் கழிவு பல இடங்களில் வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கும்.

அந்த வயதில் தெரியவில்லை; ஆனால், இப்போது இரவுகளில் நரகல் நரகலாகக் கொடுங்கனா கண்டு எழுந்து வாந்தி எடுக்கிறேன். என்ன முயன்றும் இளம் வயதுச் சூழல் மனதிலிருந்து அகலவே மறுக்கிறது. என் நாசிக்கு துர்நாற்றமோ மணமோ தெரிவதில்லை. காரணம், சுடுகாட்டிலிருந்து வரும் நாற்றத்தை முகர்ந்து முகர்ந்து நாசி, மணம் முகரும் தன்மையை இழந்து சுவாசத்துக்கு மட்டுமே உபயோகப்படும் உறுப்பாகிவிட்டது.

என் தந்தை ஒன்றாம் வகுப்பு ஆசிரியர். என்றாலும் ஆறு குழந்தைகள் என்பதால் அம்மா ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுத்து நான் கண்டதில்லை. சாணி சேகரித்து ராட்டி தட்டிக் காய வைத்து விற்பது, கருவேல மரங்களை வெட்டி விறகு தயாரிப்பது, வயலில் கூலி வேலை பார்ப்பவர்களுக்கு இட்லி சுட்டு விற்பது, நெல்லை வாங்கி அவித்து, தெருவில் நெல்பாயில் காய வைத்து மிஷினில் கொண்டுபோய் அரைத்து அரிசியாக்குவது, ஆறு குழந்தைகளின் துணி துவைப்பது, சமைப்பது என்று அது ஒரு தனிக் கதை.

அப்போதெல்லாம் எங்களின் அதிக பட்சக் கனவு, சிங்கப்பூருக்குக் குருவியாகச் செல்வது. (கள்ளக் கடத்தலில் ஈடுபடும் ’கொரியர்’ பையன்களின் பெயர், குருவி.) மாட்டினால் கலால்துறையினர் பின்னியெடுத்துவிடுவார்கள். அது என்னால் முடியாது. என் தாய்மாமன்கள் ரெண்டு பேர் ஊரில் பிரபல ரவுடிகளாக இருந்தார்கள். அது எனக்குக் கவர்ச்சிகரமாகத் தோன்றவே அப்படியே ஆகிவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், ஒருமுறை சண்முகம் மாமா உடம்பு பூராவும் அரிவாள் வெட்டுடன் வந்து விழுந்ததைப் பார்த்ததும் அங்கிருந்து வெளியேற ஒரே வழிதான் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு புத்தகங்களில் தஞ்சமடைந்தேன். அது என்னை எழுத்தின் பக்கம் கொண்டுவந்தது.

இளம் வயதில் எனக்கு அறிமுகமான ஆஸ்கார் ஒயில்டும், ஜான் ஜெனேவும் அசோகமித்திரனும் தங்களுடைய வாழ்க்கையையே புனைவாக எழுதியிருந்ததால் நானும் என் வாழ்க்கையைப் புனைவாக எழுதத் துவங்கின. ஒரு சிற்றூரில் வாழ்ந்த 25 வயது இளைஞனுக்கு என்ன வாழ்க்கை இருந்துவிட முடியும்? நான் எழுதியதெல்லாம் சிறுவயதிலிருந்து நான் கேட்ட கதை, பார்த்த கதை.

இதுவரை ஆறு நாவல்கள் எழுதியிருக்கிறேன். அவை அனைத்துமே ஆட்டோஃபிக்ஷன் என்ற வகைமையைச் சேர்ந்தவையாக இருப்பதற்கு இதுதான் காரணம். பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்ற பிறகுதான் நவீனத் தமிழ் இலக்கியத்தை முறையாக வாசித்தேன். அப்போது நான் படித்த சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., தி. ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ் அனைவருமே சுயசரிதத்தன்மையோடுதான் தங்கள் புனைவிலக்கியத்தை உருவாக்கியிருப்பதை உணர்ந்தேன்.

அது எனக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது. இப்போதுதான் முதன்முதலாக எனக்கு நேரடி அனுபவம் இல்லாத கதைக் களன்களைத் தேர்ந்தெடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற நாவலும், 1857 சிப்பாய்க் கலகத்தின்போது கான்பூரில் நடந்த ஒரு படுகொலையை அடிப்படையாக வைத்து எழுதும் நாவலும் என் அடுத்த நாவல்களாக இருக்கும்.

(தொடரும்)
- சாரு நிவேதிதா, ‘ஸீரோ டிகிரி’, ‘எக்ஸைல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x