Published : 28 Aug 2016 11:46 AM
Last Updated : 28 Aug 2016 11:46 AM
தீன்மூர்த்தி பவன் என்பது வெறும் கட்டிடமல்ல. இந்த நாட்டின் பொதுவாழ்வின் குணாதிசயங்களைச் செதுக்குவதில் பெரும் பங்காற்றிய முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் வசிப்பிடம். அந்த வளாகத்தில் என்எம்எம்எல் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இயங்கிவருகிறது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கம் ஒன்று அறிவுலகம் சார்ந்த பொதுநிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் வாடகைக்குத் தரப்படுகிறது. இதுவரை இந்த அரங்கத்தில் தமிழ் நூல்கள் எதுவும் வெளியிடப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. அதுவும் பெங்குவின் என்ற ஆங்கில மொழி நூல்களின் பதிப்பகம் ஒரு தமிழ் நூலின் வெளியீட்டு விழாவை நடத்துவதும் அபூர்வம்தான். இவையெல்லாம் ஆகஸ்ட் 22 அன்று மாலை நிகழக் காரணமாக இருந்தது அநீதி இழைக்கப்பட்ட ஒரு எழுத்தாளருக்குத் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் இயல்பாகவே எழுந்த தார்மீக ஆதரவுதான் எனலாம்.
அங்கு வெளியிடப்பட்ட தமிழ் நூலான “கோழையின் பாடல்கள்” என்ற பெருமாள்முருகனின் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பற்ற பல்மொழி சார்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் அந்த அரங்கில் கூடியிருந்தது இந்தத் தார்மீக ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவதாகவே இருந்தது. பெங்குவின் வெளியிட்ட அவரது நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அவரை வாசிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.
பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராக ஜனவரி 2015-ல் திருச்செங்கோட்டில் எதிர்ப்பு எழுந்ததும், நாவலாசிரியர் அச்சுறுத்தலுக்கு ஆளானதும் நினைவில் இருக்கலாம். இதையடுத்து கருத்துரிமை குறித்தோ, குடிமைச் சமூகத்தின் நீதிநெறி அடிப்படைகள் குறித்தோ பிரக்ஞையற்ற மாவட்ட நிர்வாகம் கலவரக்காரர்களுக்கும், பெருமாள்முருகனுக்கும் ‘சமரசம்’ செய்ய முற்பட்டு அவரை மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுக்க வைத்த அவலமும் நடந்தது. அதனால் மனதளவில் பெரும் பாதிப்படைந்த பெருமாள்முருகன் ஒரு எழுத்தாளனாகத் தான் மரணமடைந்துவிட்டதாகவும், தன் நூல்களை விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்வதாகவும் அறிவித்தார். இந்திய அளவிலும், உலகின் பிற பகுதிகளிலும் இத்தகவல் அறிந்த எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். பெருமாள்முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும், முற்போக்கு சக்திகளும் சென்னையிலும், பிற இடங்களிலும் பல்வேறு கூட்டங்களையும். போராட்டங்களையும் நிகழ்த்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிகழ்ந்த வழக்கில் சமீபத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் செயல்பட்ட விதத்தைக் கண்டித்த நீதிமன்றம் அவர்கள் செய்துவித்த ஒப்பந்தம் பெருமாள்முருகனைக் கட்டுப்படுத்தாது என்றும் உறுதி செய்தது. இதுபோன்ற பிரச்சினைகளில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் விதிமுறைகளை வகுக்குமாறு மாநில அரசுக்கும் அறிவுறுத்தியது. அதற்கெல்லாம் மேலாக, பெருமாள்முருகனைத் தொடர்ந்து எழுதுமாறு அந்தத் தீர்ப்பு காலத்தின் மனசாட்சியாக நின்று கோரியது. அதற்குச் செவிசாய்த்த பெருமாள்முருகன் இடைப்பட்ட காலத்தில் தான் எழுதிய கவிதைகளை வெளியிடுவதன் மூலம் எழுத்துலகில் மீண்டும் பிரவேசிக்க முடிவுசெய்தார்.
அந்த நிகழ்வின் முக்கியத்துவம் உணர்ந்த டெல்லி வாழ் பன்மொழி எழுத்தாளர்கள், அறிஞர்கள், மாணவர்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர். எளிமையாகவும், கண்ணியமாகவும், வெற்று ஆரவாரங்கள், புகழுரைகள், சூளுரைத்தல், அரசியல் சவடால்கள் போன்ற ஜோடனைகள் இன்றி அர்த்த கனம் பொருந்தியதாகவும், கருத்துச் சுதந்திரத்தின்பால் கொண்ட அக்கறையை மனத் திண்மையுடன் வெளியிடுவதாகவும் இந்த நிகழ்ச்சி நடந்தது பெரும் சிறப்பு. எளிமையான தோற்றமும், பூச்சுகளற்ற பேச்சுமாகப் பெருமாள்முருகன் இருந்தது வியத்தகு ஆகிருதியாக அவரை வெளிப்படுத்தியது.
நிகழ்வின் தொடக்கத்தில் இந்தியாவின் மூத்த கவிஞரும், இந்தியக் கலை இலக்கிய உலகின் மனசாட்சியாகவும் விளங்கும் அஷோக் வாஜ்பேயி காலச்சுவடு பதிப்பத்த பெருமாள்முருகனின் ‘கோழையின் பாடல்கள்’ நூலை வெளியிட்டார். பெருமாள்முருகன் அந்த நூலிலிருந்து இரண்டு கவிதைகளைப் படிக்க, அஷோக் வாஜ்பேயி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தார். ஆங்கில மொழிபெயர்ப்பு அரங்கத்தில் விநியோகிக்கப்பட்டிருந்தது. ‘கோழையின் பாடல்’ என்ற கவிதையும் அதில் ஒன்று. மிகுந்த அறத்துணிவுடன் எழுதப்பட்ட கவிதை அது என்று அஷோக் வாஜ்பேயி அழகாகக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து பெருமாள்முருகன் சிறியதோர் அறிக்கையை வாசித்தார். யாரையும் சாடாமலும், தன்னை நியாயப்படுத்துக்கொள்ளாமலும், தன்னுடைய மன உணர்வுகளை அவர் வெளிப்படுத்திய விதம் அவரை அதுவரை அறியாதவர்களும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்திருந்தது. தான் நாவல் எழுதத் தொடங்கும் முன்பிருந்தே கவிதைகள் எழுதிவந்திருப்பதையும், எழுத்திலிருந்து விலகி நடைப்பிணமாய் வாழ்ந்துவந்தபோது வளைக்குள் பதுங்கிய எலியாகத் தன்னை உணர்ந்தபோது தற்செயலான ஒரு கணத்தில் ஏற்பட்ட உடைப்பில் மீண்டும் கவிதை எழுதத் தொடங்கியதையும் குறிப்பிட்ட அவர், வளைக்குள் எத்தனையோ பாதைகள், அடைப்புகள் என்ற உருவகத்தை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கவிதை எழுதுவதே தன்னை அரவணைத்துப் பாதுகாத்ததாகக் கூறிய அவர், தனிமைப்பட்ட காலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்புதான் இந்நூல் என்றார். தான் எழுத்துலகுக்குத் திரும்பியிருந்தாலும், மவுனமாகவே ஒரு எழுத்தாளனாகச் செயல்பட விரும்புவதையும், படைப்புகள் மூலமே சமூகத்துடன் உரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார். தன்னை எந்தக் கூட்டத்துக்கும், விழாக்களுக்கும் அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவருடைய அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி படித்தார்.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியாக எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் நிலஞ்சனா ராய் பெருமாள்முருகனுடன் வேங்கடாசலபதியின் மொழிபெயர்ப்பின் உதவியுடன் உரை யாடினார். பெருமாள்முருகனின் வாழ்வும், எழுத்தும் சார்ந்த சில சுவாரசியமான பரிமாணங்களை அரங்கிலிருந்தோர் புரிந்துகொள்ள இந்த உரையாடல் வகை செய்தது. நிலஞ்சனா, பெருமாள்முருகன் இருவருமே சுருக்கமாகவும், பீடிகைகள் இன்றியும் பேசியதால் சுவாரசியமாகவும், தக்க கால அளவிலும் நிறைவுற்றது இந்த உரையாடல்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பெருமாள்முருகன் நூல்களில் கையெழுத்திடுவார் என்று அறிவிக்கப்பட்டது. பார்வையாளர்கள் வரிசையில் நின்று மேடைக்குச் சென்று அவரிடம் நூல்களில் கையெழுத்துப் பெற்றனர். என் முறை வந்தபோது, பெருமாள்முருகன் கைகளைப் பற்றிக்கொண்டு பார்த்தபோது அவர் கண்களில் தெரிந்த நட்பின் ஆழம் கடந்த ஆண்டுகளில் அவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்ததைப் போன்ற உணர்வையும் உத்வேகத்தையும் கொடுத்தது. அவர் விருப்பப்படியே அவரை மவுனமாக எழுத அனுமதிப்பதன் மூலம் தமிழ்ச் சமூகம் அவரிடமிருந்து பெறுவதற்கு நிறைய இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
ராஜன் குறை, எழுத்தாளர், தொடர்புக்கு: rajankurai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT