Published : 27 May 2017 09:09 AM
Last Updated : 27 May 2017 09:09 AM
ஐயன் கடைத் தெரு விழித்துக்கொண்டிருந்தது. கடைகளின் ஒட்டுக் கதவுகள் பெயர்க்கப்படும் சப்தம். சங்கரய்யர் கடையிலிருந்து வடை வாசம் கமழ்ந்தது. நான், நாளின் முதல் டிகிரி காபிக்கு மாடி அறைக் கதவைத் திறந்தேன். எதிரில் ஒருவர். தோளில் ஒரு பெரிய பை.
“நான் இருளாண்டி. சின்னமனூர்” என்றார் அவர்.
எனக்குப் புரிந்தது. எங்கள் கல்லூரியில் சேர வந்திருப்பவர். எங்களுடன் வசிக்க வருகிறார். “வாங்க” என்றபடி அவர் தங்கவிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றேன். பையை வைத்துவிட்டு, “வாங்கண்ணே, காபி சாப்பிட்டு வரலாம்” என்றார். “நானும் காபிக்குத்தான் புறப்பட்டேன்” என்றேன். “இருங்கண்ணே ரெண்டு நிமிஷம்” என்றபடி, முகம் கழுவிக்கொண்டு திரும்பினார். பையைத் திறந்து ஒரு பாட்டில், பவுடர் முதலானவற்றை எடுத்து வெளியே வைத்தார். பாட்டில், லாக்டோ காலமின் என்கிற முகப் பூச்சு.
“கீழேதான் காபிக் கடை”
“இருக்கட்டும்ணே… ஐந்து நிமிஷம்”
பரபரவென்று பூச்சைப் பொட்டு வைத்து அதைத் தேய்த்துச் சமன்படுத்தி அதன் மேலேயே பவுடர் பூசி, ஒரு வகையான தோற்றப் பொலிவுடன் தயாரானார். தெருவுக்கு வந்தோம்.
“அண்ணே, அது என்ன டிகிரி காபி”
“ஒரு வகைத் தயாரிப்பு. பால் காய்ச்சுவதில் நேரக் கணக்கு, காபிப் பொடி வறுவல் மற்றும் கொதிப்புப் பக்குவம், கலப்பில் நுரை பொங்கும் நேர்த்தி, தொண்டையில் சற்றே கசப்புடன் உள்ளிறங்கும் விசேஷம், அப்புறம் டபரா பரிமாறல் இத்யாதி விளம்பலில் தரப்படும் அரிய பானம். அதன் பெயர்தான் டிகிரி காபி.”
அன்று முதல், காலைகளில் அவர் தயாராகி என்னை எழுப்பத் தொடங்கினார். உலகுக்கு முன், அவர் தன்னைக் காட்டும் பாணியைத் தரிசனம் என்றே சொல்லலாம். வெள்ளை வெளேரென்ற வேட்டி. கஞ்சி போட்டுக் கத்திபோல் மடிப்புகள் கொண்டது. கையைச் சிக்கெனப் பிடித்த டெரிலின் சட்டை. ஒற்றை முடியும் சிலிர்த்து நிற்காத மழமழப்புத் தலை வாரல். அதற்கென்று ஒரு விசேஷக் களிம்பு. எதிரில் வருவாரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வெளிநாட்டு சென்ட் தெளிர்ப்பு. நடையும், மதயானை நிதானம். ஒரு புத்தகத்துக்கு மேல் எதையும் சுமக்காத ஸ்டைல், ஒரு முயலைக் காதைப் பிடித்துத் தூக்கிச் செல்வதுபோல ஒரு பாவனை. எப்போதும் மாறாத, நிலைபேறுடைய சினேகப் புன்னகை.
வெகு சீக்கிரம், இருளாண்டி கல்லூரியில் பிரபலமானார். அவர் வகுப்புக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவர் வாசனை முன் நுழையும். அவர் வெறும் அலட்டல் பேர்வழி இல்லை. பாடத்தில், அது நன்னூலோ, தொல்காப்பியமோ, சிலம்போ, யசோதா காவியமோ, மிகத் தெளிவான புரிதல் கொண்டவராக இருந்தார். இரவுகளில் தஞ்சை ப்ரகாஷ், மௌனி கதைகள்-ஜாய்ஸ் ஒப்பீட்டைக் குறித்து வகுப்பெடுக்கும் தினுசில் இலக்கியம் பேசுவார்.
“அண்ணே… மௌனி கதைகளைப் படிக்கும்போது, ஏதோ கோயிலில் நிற்கிற மாதிரி, அல்லது கோயிலுக்கு அழைத்துப் போவது மாதிரி உணர்வு வரவில்லை? ஏன் உலகை நோக்கி அவர் பார்வை விரிய வில்லை?” என்றார் ஒரு முறை.
ப்ரகாஷ் ‘யுவர் மெஸ்’ என்ற பெயரில் ஒரு உணவுக் கடை தொடங்கியிருந்தார். அந்த மெஸ்ஸுக்குத் தமிழின் பெரிய எழுத்தாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள். எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், விமர்சகர் வெங்கட் சாமிநாதன். சாமிநாதனுக்கு இருளாண்டியை மிகவும் பிடித்துப் போனது. ‘அக்கிரகாரத்தில் கழுதை’ என்ற ஆபிரகாமின் படத்துக்குத் திரை அமைப்பை வசனத்தோடு சாமிநாதன் எழுதிக்கொண்டிருந்தார். எங்கள் எல்லோரையும் அமர வைத்து, முக்கியமாக இருளாண்டி முகம் நோக்கி அவர் எழுதியதைப் படித்தார். இருளாண்டி தலையசைத்துப் புன்னகை புரிந்தார் என்றால், அந்த இடம் நன்றாக வந்திருக்கிறது என்று பொருள். பழங்காலப் புலவர் கவிதை அரங்கேற்றம் போல எனக்கு அந்தக் காட்சி நினைவில் நிற்கிறது.
ப்ரகாஷின் ‘யுவர் மெஸ்’ஸின் மானேஜராகத் தன்னை வரித்துக்கொண்டார் இருளாண்டி. காலை, டிகிரி காபி சாப்பிட்டு மார்க்கெட்டுக்குப் பொருள் வாங்கப் புறப்படுவார். முதலில் கறிக்கடை. கோழி விற்கும் தலைம்மாள், அவருடன் வீட்டுக் கதை எல்லாம் பேசிக் கோழிகளைப் பிடித்துத் தருவார். ஆட்டுக் கறிக்கடை பாய், காய்கறிக் கடை பொன்னு எல்லாம் அவர் நண்பர்கள். இரண்டு பெரிய மூட்டைச் சுமைகளோடு மெஸ்ஸுக்கு நடந்து வருவார்.
ஒரு முறை, வெற்றிலைச் செல்லத்தோடு அமர்ந்திருந்த எம்.வி. வெங்கட்ராம் இருளாண்டியையே கவனித்துக் கொண்டிருந்தார்.
‘‘என்ன சார்?’’ இருளாண்டி.
‘‘ஒண்ணுமில்லை. உங்க காய்கறிப் பட்டியலிலாவது என் பெயரை இடம் பெற வைப்பீர்களா, இருளாண்டி’’ எம்.வி.வி.
‘‘சொல்ல முடியாது சார். காய்கறிப் பட்டியலுக்கு எம்.வி.வி. தேவை இல்லை. இலக்கியப் பட்டியலை, நான் மட்டும் இல்லை, காலமும் சேர்ந்து எழுதணுமே! காலம் ரொம்பக் கறார் சார்.’’
எல்லோரும் சேர்ந்து சிரித்தோம்.
படிப்பை முடித்து ஊர் திரும்பினார் இருளாண்டி. அப்புறம் அவரைப் பற்றிய தகவல் இல்லை. திருமணம் செய்துகொண்டார் என்று யாரோ சொன்னார்கள். ஏதோ வியாபாரம் செய்கிறார் என்றார்கள்.
ஒரு நாள் மாலை புதுச்சேரிக்கு வந்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு. அடையாளம் தெரியாத மனிதராக. தாடி. நரைத்த மீசை. தலைச் சுமையாக உளுந்தும், கேழ்வரகும் கொண்டுவந்திருந்தார்.
‘‘இதுகளைச் சுமந்தா வந்தீங்க’’
அவர் சிரித்தபடி ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தார். நைந்த சட்டையும் மோட்டா வேட்டியும். உருக்குலைந்த உடம்பு. இரவு நிறைய மது அருந்தினார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் தன் வாழ்க்கை பற்றி எதுவும் பேசவில்லை.
“அதை விடுங்கண்ணே… நீங்க எப்படி இருக்கீங்க?’’
ஒரு நாள் எந்தக் காரணமும் இல்லாமல் இருளாண்டி நினைவு தொடந்து வந்துகொண்டே இருந்தது. அமைதி இழந்தேன். ப்ரகாஷுக்குத் தொலைபேசினேன்.
“எனக்கும் இப்போதுதான் தகவல் கிடைத்தது… உங்கள் யூகம் சரிதான்” என்றார் ப்ரகாஷ்.
இருளாண்டியின் வாசனை பரவியதாக, பரவிக்கொண்டு வருவதாகத் தோன்றியது.
- பிரபஞ்சன், மூத்த தமிழ் எழுத்தாளர், ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ முதலான நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: writerprapanchan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT