Published : 31 Jan 2017 11:02 AM
Last Updated : 31 Jan 2017 11:02 AM
திரையரங்கம் ஒன்றின் வெளியே படம் ஆரம்பிப்பதற்காக காத்திருந்தேன். அருகில் உள்ள இருக்கைகளில் இருந்த இருவர் தங்கள் குடும்ப விஷயங் களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார் கள். தாங்கள் அமர்ந்திருப்பது ஒரு பொது இடம். தங்களுடைய குடும்ப விவகாரங் களைப் பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்கிற நினைப்பே அவர்களுக்கு இல்லை.
இதில் சத்தமாக திட்டிக்கொள்ளவும் செய்தார்கள். வீட்டு விஷயங்களைப் பொதுவெளியில் ஏன் பேசிக்கொள்கிறார் கள்? வீடு என்பது சேர்ந்து சாப்பிடவும், உறங்கவும், ஓய்வு எடுக்கவும் மட்டுமே யான இடம்தானா?
தங்கள் அபிப்ராயங்களை, கஷ்டங் களை, பிரச்சினைகளை வீட்டுக்குள்ளா கவே பேசிக் கொள்ளலாம்தானே?!
முந்தைய தலைமுறையினர் இதில் மிகவும் கவனமாகவே இருந்தார்கள். எவ்வளவு சண்டை சச்சரவுகள் இருந்தா லும், வீட்டுப் படியைத் தாண்டினால் அதைக் காட்டிக் கொள்ளவே மாட்டார் கள். இன்று அப்படியில்லை. ரயில் பய ணத்தில், அலுவலகத்தில், பொது வெளிகளில் வீட்டுச் சண்டைகள் அரங்கேறுகின்றன.
தங்கள் கோபத்தை எப்படி காட்டிக் கொள்வது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. உரக்கக் கத்துகிறார்கள். அழுகிறார்கள் அவ்வளவே. உணர்ச்சி களைக் கட்டுப்படுத்தவும், கையாளவும் தெரியாத தலைமுறையாக ஏன் இருக்கிறார்கள்?
கடந்தகாலங்களை விடவும் இன்று பொருளாதாரரீதியாக ஓரளவு தன் னிறைவுப் பெற்ற குடும்பங்கள் அதி கரித்துள்ளன. அடிப்படை தேவைகளை யும், வசதிகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, விட்டுக்கொடுப்பது, அனு சரித்துப்போவது, அக்கறை காட்டுவது போன்றவற்றில் கடும் சிக்கல்களும், சிடுக்குகளும் தோன்றுகின்றன. அதைச் சுட்டிக்காட்டும்போது சண்டை தொடங்கி விடுகிறது.
வீட்டுச் சண்டைகள் கோடை மழை போன்றது. சடசடவெனத் தொடங்கி வேகமெடுத்து சட்டென அடங்கிவிடும் என்பார்கள். ஆனால், இன்று கருத்து வேற்றுமை காரணமாக சேர்ந்துவாழ முடியவில்லை என திருமணமான நான் கைந்து மாதங்களிலேயே விவாகரத்து கேட்கிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
‘அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர் கள் நாய்களுக்கு ஏன் நாக்கு இவ்வளவு நீளமாக தொங்கிக் கொண்டிருக்கிறது?’ என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். அக்கதை குடும்ப விவகாரங்களைப் பற்றியதே.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நாய்களும் மனிதர்களைப் போலவே பேசின. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு நாய்கள் இருந்தன. கணவன் வேட்டைக் குப் போகிற காலத்தில் நாயை உடன் அழைத்துக்கொண்டுப் போவான். மற் றொரு நாய் வீட்டில் மனைவி, பிள்ளை களுக்குத் துணையாக இருக்கும்.
வேட்டையின்போது என்ன நடந் தது? எங்கே தங்கினோம்? என்ன சாப்பிட் டோம் என்பதை வீடு திரும்பியதும் விலா வாரியாக வேட்டைநாய் விவரிப்பது வழக்கம். இதுபோலவே வீட்டில் என்ன நடந்தது? என்ன சமைத்தார்கள்? என்ன சாப்பிட்டார்கள்? எப்படி பொழுதை கழித்தார்கள் என்பதை வீட்டு நாய் விவரிக்கும். நாய்களின் உதவியால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நடந்த விஷயங்களைப் பேசிக்கொண்டார்கள்.
நாய்களுக்கு எதையும் ஒளிக்கவோ, மறைக்கவோ தெரியாது என்பதால், தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மனிதர்களிடத்தில் அப்படியே அவை பகிர்ந்துகொண்டன. இதனால் பல வீடுகளிலும் பிரச்சினைகள் உருவாயின. இந்த நாய்களால்தான் தங்களுக்குள் சண்டை வருகிறது என உணர்ந்த பலரும், ‘‘வாயை மூடிகிட்டு சும்மா கிட நாயே…’’ என்று நாய்களைத் திட்டினார்கள். ஆனால், நாய்கள் வாயை மூடவில்லை. பொதுவெளியில் ஒன்றுகூடி வீட்டில் நடப்பவற்றைப் பேசிக் கொண்டன. இதனால் வீட்டின் அந்தரங்கம் வெளியில் பரவியது.
‘நாய்களின் வாயைக் கட்ட என்ன செய் வது?’ என காட்டுவாசிகளுக்குப் புரிய வில்லை. அதேநேரம் நாய்களே வேண் டாம் என விலக்கிவிடவும் முடியவில்லை.
கடவுளிடம் சென்று முறையிட்டார்கள். கடவுளும் நாய்களை அழைத்து ‘‘வீட்டு விஷயங்களை வெளியே பேச வேண் டாம்!’’ என கட்டளையிட்டார். ஆனால், நாய்கள் அதற்குக் கட்டுப்படவில்லை. வீதியில் ஒன்றுகூடி இன்னும் கூடுத லான சுவாரஸ்யத்துடன் வீட்டுச் சண்டை களைப் பற்றி பேசிக்கொண்டன.
கோபம் கொண்ட கடவுள், நாய்களின் நாக்கை வெளியே இழுத்துவிட்டு, ‘‘இனி மனிதர்களின் மொழியால் உங்களால் பேச முடியாது. ஊர் வம்பு பேசிய தால் இனி உங்கள் நாக்கு துடித்துக் கொண்டே இருக்கட்டும் என சாபம் கொடுத்துவிட்டார். அன்று தொடங்கி நாயின் நாக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறது என அந்தக் கதை கூறுகிறது.
பழங்குடி மனிதர்கள் தாங்கள் பயந்த, கண்டுவியந்த எல்லாவற்றையும் பற்றி கதைகளாக புனைந்திருக்கிறார்கள். அப்படி புனையப்பட்ட கதைகளில் ஒன்றாகவே இதையும் கருத வேண்டும்.
இக்கதை குடும்ப விஷயங்களை பொதுவெளியில் பேசிக்கொள்ளக் கூடாது. சம்பந்தபட்டவர்கள் வெளியே பேசிக் கொள்ளாவிட்டாலும் உடனிருப் பவர்கள் பேசிக் கொள்ளத் தொடங்கி விடுவார்கள். ஆகவே எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
எதை பொதுவெளியில் பேசுவது? எப்படி பேசுவது? எதை வீட்டுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்பதை பற்றி இளம்தலைமுறைக்குக் கற்றுத் தர வேண்டியது அவசியம்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் அர்த்தம் தெரியாமலே பல ஆபாச வார்த்தைகளை இளையோர் பயன் படுத்துகிறார்கள். அதே வசைச் சொற் களைக் கோபத்தில் வீட்டில் உள்ள மூத்தவர்களை நோக்கியும் வீசுகிறார்கள். வீடும் கல்வி நிலையங்களும் கற்றுத் தராத இந்த வசைகளை எங்கிருந்து கற்றுக்கொண்டார்கள் இவர்கள்? ஊடகங்களில் இருந்தும் இணையத்தில் இருந்தும்தானா?!
ஒரு நண்பர் சொன்னார், ‘‘வீட்டில் நானும் என் மனைவியும் மட்டும் இருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவது இல்லை. யாராவது உறவினர் கள் வந்துவிட்டால் என் மனைவியின் இயல்பு மாறிவிடுகிறது. சிடுசிடுப்பு, கோபம், எரிச்சல் என ஆளே மாறிவிடு கிறாள். அவர்களைத் துரத்தி அனுப்பு வதிலேயே குறியாக இருக்கிறாள். இதைப் பற்றி பேசினால் எங்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது.
அவள் வீட்டில் ஒரே பெண்ணாக வளர்ந்தவள், ஆனால், என் குடும்பம் பெரியது. நிறைய உறவினர்கள். நிச்சயம் அவர்கள் என்னைத் தேடி வரவே செய் வார்கள். இதை அவளால் ஏற்றுக்கொள் ளவே முடியவில்லை. நாங்கள் இருவரும் சம்பாதிக்கிறோம். கையில் பணமும் இருக்கிறது. ஆனால், ஏன் உறவுகளை நேசிப்பதில் மனமற்று போய்விடுகிறது? அதுதான் புரியவில்லை.
நண்பர் சொன்னது உண்மை. இதன் மறுபக்கம் கணவனும் இப்படி நடந்துகொள்ளக்கூடும்.
பணம் சேர்க்க வேண்டும். வசதி களைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ப தைத் தவிர, வேறு எதையும் குடும்பம் முக்கியமாக கருதுவதே இல்லை.
ஆபத்து காலங்களில் எச்சரிக்கை மணி ஒலிப்பதைப் போலவே நாம் தவிர்க்க வேண்டிய, விலக்க வேண் டிய விஷயங்களைக் கதைகள் எச்சரிக் கின்றன. அவற்றை அறிந்துகொண்டு விழிப்புணர்வு கொள்வது நமது பொறுப்பு.
இணையவாசல்: >அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்களின் கதைகளை அறிந்துகொள்ள
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT