Published : 10 Sep 2016 12:05 PM
Last Updated : 10 Sep 2016 12:05 PM
மாநிலக் கல்லூரியில் படிப்பதற்காக நான் சென்னை வந்தபோது, நிறைய நூல்கள் படிப்பதற்கான சூழல் வாய்த்தது. மேற்கு சி.ஐ.டி.நகரில் இருந்த அரசு நூலகத்துக்கு அடிக்கடி செல்வேன். அங்கிருந்த ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ நூல் வரிசையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், நேதாஜி, காரல் மார்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தேன். தேவநேயப் பாவாணர் நூலகத்துக்கும் சென்று படிப்பேன். அரசியல், சமூக வரலாறு, விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் எனக்கு எப்போதும் கூடுதல் ஆர்வமுண்டு.
இந்துத்துவம் பற்றியும், சாதி மறுப்பு, பெண் அடிமைத்தனம் பற்றியும் பெரியார் எழுதிய நூல்கள் என் வாசிப்பில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. ஆர்.எஸ்.எஸ்., கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை தொடர்பான ஏராளமான நூல்களை பெரியார் திடலில் உள்ள நூலகத்தில்தான் நான் படித்தேன். அப்துர் ரஹீம் எழுதிய கட்டுரைகளையும், சங்கராச்சாரியர் உள்ளிட்டோர் எழுதிய ஆன்மிக நூல்களையும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள அரசு நூலகத்தில் படித்தேன். பெரும்பாலான பொழுதுகள் நூலகத்திலும், புத்தக வாசிப்பிலும்தான் கழிந்தன.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலையிலேயே மேற்கு சி.ஐ.டி. நகரிலுள்ள நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகர் என்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து, சாவியை என்னிடமே தந்துவிடுவார். சில நாட்கள் நானே சென்று நூலகத்தைத் திறந்து வைப்பேன். கடைசிவரை இருந்து பூட்டிவிட்டு வருவேன். என்னைப் பார்க்க நண்பர்கள் யாராவது வந்தால் நூலகத்துக்கு வரும்படி சொல்லிவிடுவேன்.
எண்பதுகளின் தொடக்கத்தில் ஏ.எஸ். கண்ணன் எழுதிய ‘கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும்’எனும் நூலைப் படித்தேன். நான் படித்த முதல் மார்க்ஸிய நூல் அதுதான். அந்த நூலைப் படித்து நான் மிகவும் வியந்தேன். அதன் பிறகு, மார்க்ஸிய நூல்கள் பலவற்றைப் படித்தேன்.
பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை நான் அடிக்கடி படிப்பேன். மு.மேத்தா, மீரா, நா.காமராஜன், இன்குலாப், தணிகைச்செல்வன், காசி ஆனந்தன் ஆகியோரின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பேன். என்னுடைய வாசிப்பில் தத்துவம், வரலாறு சார்ந்த நூல்களுக்கே முதலிடம். சிறுகதை, கவிதை, நாவல்களை மிகக் குறைவாகத்தான் படித்திருக்கிறேன்.
சமீபத்தில் படித்த தமிழ் நூல்களில் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்’ குறிப்பிடத் தக்க நூல். அயோத்திதாசரின் சிந்தனையைப் படித்துப் புரிந்துகொள்வது ஒருவகை என்றால், இந்நூல் அவர் வாழ்ந்த காலத்தின் சமூக வரலாற்றுப் பின்புலங்களை விவரிப்பதோடு, எப்படிப்பட்ட சூழலிலிருந்து அவர் வந்தார் என்பதையும் சேர்த்தே விவரிக்கிறது. சாதிய, மதவாதச் சூழல்கள் எல்லாமே ஒற்றைக் கலாச்சாரத்தை முன்மொழியும் இச்சூழலில், நம் தமிழ்ச் சமூகத்தின் பன்முகச் சூழலைப் புரிந்துகொள்ள இந்நூல் மிகுந்த உதவியாய் இருக்கும்.
பயண நேரங்களில் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து அதிகாலை வரை புத்தகம் படிப்பதும் உண்டு. உடற்பயிற்சி செய்வது உடல் நலத்துக்கு எப்படி நல்லதோ, அதேபோல் புத்தக வாசிப்பு மனநலனுக்கு நல்லது. என் தாய், தந்தைக்குப் பிறகு என்னை வடிவமைத்ததில் புத்தகங்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு.
- தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT