Published : 10 Sep 2016 12:02 PM
Last Updated : 10 Sep 2016 12:02 PM

நெடிய மரபின் கவிஞன்

பழநிபாரதியிடம் கவித்துவம் இருக்கிறது; தமிழ் இருக்கிறது; மரபு இருக்கிறது; இவற்றாலேயே அவன் கவிஞனாகிவிடுகிறான்; ‘சன்னதம்’ கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு:

செவ்வந்திக்கல் மூக்குத்தி

சுடர் எரிய

நதியோரம் நிற்கும்

வனமுலை நாயகியே

என்ன துயரமடி

உன் இயற்கைக்கு

இன்னொரு கவிதை:

மருதாணி வரைந்து பிழைக்கும்

வடநாட்டு யுவதியிடம்

கைவிரித்து அமர்ந்திருக்கிறாள்

மரகதவல்லி

அவள் கைக்குள் மறைந்திருக்கிறது

இன்னொரு கை

இவனுக்கு ஏன் இந்தப் பெயர் தோன்றியது; மரகதவல்லி- மதுரை மீனாட்சிக்கு இன்னொரு பெயர்; அச்சுஅசலான தமிழ்ப் பெயர்; அப்படி ஒரு ஜீவன் தமிழ்க் கவிதையில் வருவது இருக்கிறதே, நவீனத் தமிழ்க் கவிதையில்; அது போதும் அது போதும்.

உலகத்திலேயே வேறு எந்த மொழிகளிலும் இல்லாத அளவுக்கு அன்றும் சரி, இன்றும் சரி நம்முடைய தாய்மொழியில் நிறையவே நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும்; செவ்வியல் மொழி தந்துகொண்டிருக்கும் செல்வச் சிறப்புகளில் ஒன்று இது; கண்டு சொல்லவும் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்லவும்தாம் ஆளுமைகளும் முயற்சிகளும் வேண்டப்படுகின்றன. பழநிபாரதி நீண்ட நெடிய மரபில் வந்த கவிஞர்களுள் ஒருவர். இவர் கவிதைகள் இதன் சாரம் பொதிந்தவை.

தமிழில் எழுதுகிற ஒவ்வொரு கவிஞனும் பத்து நனிசிறந்த கவிதைகள் எழுதிவிட்டால் போதும்; கவிஞனாக அவன் பிறவிப் பயன் அடைந்துவிடுகிறான்; இவருடைய முந்தைய தொகுப்புகளிலிருந்தும் இனி எழுதவிருக்கும் கவிதைகளிலிருந்தும் இந்தப் பேற்றினைப் பெற்றிருப்பார் என்றே கணிக்க முடிகிறது.

பழநிபாரதியின் ‘வனரஞ்சனி’ கவிதைத் தொகுப்புக்குத் தமிழின் மூத்த கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யன் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.

வனரஞ்சனி

பழநிபாரதி

விலை: ரூ.80

வெளியீடு: குமரன் பதிப்பகம், சென்னை-17.

தொடர்புக்கு: 044-2435 3742



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x