Published : 28 Aug 2016 11:45 AM
Last Updated : 28 Aug 2016 11:45 AM
மாற்றம், வளர்ச்சி என்றெல்லாம் பேசும்போது ‘அனைவரையும் உள்ளடக்கும்’ என்னும் தொடர் அடிக்கடி நம் காதில் விழுந்திருக்கும். குறிப்பாக வளர்ச்சித் திட்டங்களும் பணிகளும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தியா போன்ற வேறுபாடுகள் மலிந்த ஒரு சமூக அமைப்பில் எந்தத் திட்டமாக இருந்தாலும் அது யாருக்கானது என்பது முக்கியமாகிவிடுகிறது. கலைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமூக கலைகள் எல்லோருக்கும் பொதுவானவை என்னும் நிலையில், கலைகளில் எல்லோரையும் உள்ளடக்குவது என்றால் என்ன என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்தக் கேள்வியை முன்னிட்டுச் சென்னை இண்டர்நேஷனல் செண்டர் அமைப்பு ஆகஸ்ட் 20 அன்று மாலை ஒரு கலந்துரையாடலை ஏற்பாடுசெய்திருந்தது. கர்னாடக இசைச் சூழல் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனக் குரல்கொடுப்பதுடன் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருபவருமான கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுடன் மூத்த எழுத்தாளரும் சிந்தனையாளருமான கோபாலகிருஷ்ண காந்தி உரையாடினார். அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளுக்காக இந்த ஆண்டுக்கான மகசஸே விருதைப் பெற்றவரான கிருஷ்ணா, கலைச் சூழல் குறித்த தன் கருத்துகளை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
உங்களை இடதுசாரி என்று சிலர் சொல்கிறார்களே என்று கோபாலகிருஷ்ண காந்தி கேட்டதற்கு, சமூக இணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேசினாலே இடதுசாரி என்று சொல்வது இந்தக் கருத்துகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதையே காட்டுகிறது என்று கிருஷ்ணா கூறினார். இவையெல்லாம் அடிப்படையில் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய சிந்தனைகள் என்றார். கலைச் சூழல் குறித்த தனது விமர்சனங்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாகவே பதிலளித்தார். நாம் யாருக்கோ எதையோ கொடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்னும் கண்ணோட்டமே தவறானது என்று கூறிய அவர், பகிர்ந்துகொள்ளுதல் என்பதாகவே நமது கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்றார்.
உள்ளடக்குவது என்றால் என்ன, யார், யாரை, எங்கே உள்ளடக்குவது என்பது குறித்த கேள்வியும் எழுந்தது. கர்னாடக இசையை, அது இதுவரை சென்றிராத தரப்பினரிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று சொல்லும்போது, அவர்களிடமிருக்கும் கலை வடிவங்களைப் பரந்துபட்ட சமூகத்துக்கு எடுத்துச்செல்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதைத் தெரிவித்தார். ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு தரப்பு, ஒவ்வொரு மையம் என்பனபோன்ற சிந்தனைகளையும் நடைமுறையையும் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் கிருஷ்ணா குறிப்பிட்டார். பல்வேறு கலைகளும் சங்கமிக்கும் இடமாக நம் பொது வெளி மாற வேண்டும் என்றும் பிரத்யேகமான பிரிவுகளின் எல்லைகள் நெகிழ்த்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். “உள்ளடக்குதல் என்பது நமது இலக்காக இருக்க முடியாது. பிரத்யேக அடையாளங்கள், இறுக்கமான எல்லைகள் ஆகியவை நெகிழ்வடைவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும். இத்தகைய சூழலில் யாரும் யாரையும் உள்ளடக்க வேண்டியிருக்காது” என்று கூறிய கிருஷ்ணா, இதை உருவாக்குவதற்காகத்தான் பல்வேறு பரிசோதனைகள் தேவைப்படுகின்றன என்றார்.
கிருஷ்ணா எழுதிய நூல், அவருடைய கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களையும் உதாரணங்களையும் சுட்டிக்காட்டி கோபாலகிருஷ்ண காந்தி உரையாடலை நுட்பமான தளங்களுக்குக் கொண்டுசென்றார். உள்ளடக்குதல் என்பது ‘மேலிருந்து கீழே’ என்பதான அணுகுமுறையாக இருக்க முடியுமா என்பது பற்றியும் இருவரும் உரையாடினார்கள். கர்னாடக இசை உலகைச் சேர்ந்த சிலர் கோரிக்கொள்ளும் பிரத்யேகத் தன்மையை கிருஷ்ணா தீவிரமாகக் கேள்விக் குட்படுத்தினார். கர்னாடக இசைக்கு அவ்வளவாக அறிமுகமாகியிராதவர்களுக்கு அதைக் கொண்டு செல்லும்போது, அவர்கள் நம்மை ஏற்கிறார்களா என்பது முக்கியம் என்றார். அவர்களுடைய கலை வடிவங்களை நாம் அக்கறையோடு கவனிக்கிறோமா, கர்னாடக இசைக்கென்று உள்ள மையங்களில், தளங்களில் பிற கலைகளுக்கான இடங்களைக் கொடுக்கிறோமா, அப்படிக் கொடுக்கும்போது அவர்கள் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படாத நிலை இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள் என்றார் கிருஷ்ணா.
ஒன்றரை மணிநேரம் தொடர்ந்த உரையாடலுக்குப் பிறகு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கிருஷ்ணா பதிலளித்தார். இசையில் மொழியின் பங்கு, கர்னாடக இசைத் துறையில் சாதியின் பங்கு ஆகியவை குறித்த கேள்விகளுக்கு கிருஷ்ணா தெளிவான பதில்களை முன் வைத்தார். கர்னாடக இசையில் எல்லா விதங்களிலும் பன்முகத்தன்மையைப் பேணுவதும், அனைத்துக் கலைகளுக்கும் உரிய இடம் கிடைக்கக்கூடிய பன்முகச் சூழலைப் பொதுவெளியில் உருவாக்குவதும் நமது கடமை என்பதை கிருஷ்ணா வலியுறுத்தினார்.
சென்னை இண்டர்நேஷனல் செண்டர் அமைப்பினர் கலை, பொருளாதாரம், முதலான துறைகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த தீவிரமான விவாதங்களை மாதந்தோறும் ஏற்பாடுசெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT