Last Updated : 01 Apr, 2017 10:39 AM

 

Published : 01 Apr 2017 10:39 AM
Last Updated : 01 Apr 2017 10:39 AM

பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்!

தமிழில் மகத்தான நாவல்கள் என்று சொல்லப்படுபவை பலவும் உண்மையிலேயே சாத்தியமுள்ள உயரத்தில் பறக்காமல் பாதுகாப்பான உயரத்தில் பறந்துகொண்டிருப்பவை என்றே தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் கவலையில்லை என்று முயன்று பார்த்த நாவல்கள் வெகு குறைவு. அப்படிப்பட்ட நாவல்களின் மிகச் சிறிய பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது பா. வெங்கடேசனின் சமீபத்திய நாவலான ‘பாகீரதியின் மதியம்’.

பெரியாரின் தொண்ணூற்றைந்தாவது பிறந்த நாளில் கதை தொடங்குகிறது. மதுரையில் தீப்பொறி ஆறுமுகத்தின் கூட்டம் நடக்கும் வழியைக் கடக்க முடியாத எரிச்சலில் பெரியாரை விமர்சிக்கும் வாசுதேவன் என்ற பிராமண இளைஞனுக்கும் உறங்காப்புலி என்ற பெரியார்- திமுக தொண்டனுக்கும் இடையில் தொடங்கும் வாக்குவாதம் முற்றிப்போய், வாசுதேவனின் குடுமியை உறங்காப்புலி அறுப்பதில் போய் முடிகிறது. இந்தப் புள்ளியில் தொடங்கும் நாவல் கிளைவிரிக்கும் திசைகள் மாயாஜாலமானவை.

குடுமியை அறுத்துவிட்டு ஓடும் உறங்காப்புலிக்கும் வாசுதேவனின் மனைவி பாகீரதிக்கும் இடையில், அவளது மதிய உறக்கத்தின் கனவில் நிகழும் நிஜ சந்திப்பு, பாகீரதியின் பிரிய ஓவியர் ஜெமினியின் பாத்திரத்தை ஏற்கும் உறங்காப்புலி ஜெமினியைத் தேடி ஒசூர், கல்கத்தா, பேராச்சாப்பா போன்ற இடங்களில் மேற்கொள்ளும் பயணம், இளம் வயதில் தான் பார்க்காமலேயே தவறவிட்ட பேரழகியை பாகீரதியின் புகைப்படத்தில் கண்டு அவளைத் தேடி மனநல மருத்துவரும் தன்னை டிராகுலாவாக நினைத்துக்கொண்டிருப்பவருமான அரங்கநாதன் நம்பி கிட்டத்தட்ட உறங்காப்புலியைப் போலவே மேற்கொள்ளும் பயணம், ஜெமினியையும் உறங்காப்புலியையும் தேடி வாசுதேவன் நிகழ்த்தும் பயணம் என்று 700 பக்கங்கள் நீள்கிறது நாவல்.

காலமும் களமும்

இந்த நாவல் பல்வேறு காலப் பகுதிகளை உள்ளடக்கினாலும் பிரதானக் கதை நிகழ்வது சுதந்திர இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டமான நெருக்கடி நிலையை ஒட்டிய ஆண்டுகளில். இந்தியாவின், தமிழகத்தின் முக்கியமான சரித்திர நிகழ்வுகளுள் சிலவற்றையும் கதைப் போக்கில் நாவல் தொட்டுச் செல்கிறது. பெரியார், காந்தி, சாரு மஜூம்தார் ஆகியோரின் பிரசன்னம் கணிசமான இடங்களில் இருக்கிறது.

ஒரே நேரத்தில் ‘பாகீரதியின் மதியம்’ தமிழின் மிகச் சிறந்த காதல் நாவல்களுள் ஒன்றாகவும் மிகச் சிறந்த அரசியல் நாவல்களில் ஒன்றாகவும் உருவாகியிருப்பது பெரும் சாதனை. நாவலின் பிற்பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு பிரக்ஞை, படைப்பூக்கத்துடனும் வெளிப்பட்டிருக்கிறது. ஓவியக் கலை இந்த நாவலின் அடிப்படைகளுள்ஒன்று.

பாகீரதி வந்தாள்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழ் வாசகர்களின் உள்ளத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ‘மோக முள்’ யமுனாவின் இடத்தைப் பங்குபோட ஒருத்தி வந்துவிட்டாள். அவள்தான் பாகீரதி! தி. ஜானகிராமனின் ’மோக முள்’ நாவல் வாசிக்கப்பட்ட அளவுக்கு ‘பாகீரதியின் மதியம்’ வாசிக்கப்படுமென்றால் பாகீரதி நிச்சயமாகப் பலரையும் பித்துப்பிடிக்க வைப்பாள்.

பாகீரதி அழகு மட்டுமல்லாமல் அறிவும் நிரம்பியவள்; எதையும் ஆழமாக விவாதிப்பவள்; தன் காதல் குறித்துத் தான் குற்றவுணர்ச்சி கொள்ளத் தேவையில்லை என்று கணவனிடம் தீர்க்கமாக வாதிடுபவள்; சிறிதளவாவது அரசியல் பேசுபவள்; காதலின் தவிர்க்க முடியாமை பற்றிப் பேசுகிறாள்.

இந்த, மிகச் சிறந்த காதல் நாவலின் மிகச் சிறந்த காதல் உரையாடல், காதலர்களுக்கிடையில் நிகழவில்லை. ஒருவருக்கொருவர் காதலர்கள் அல்லாத உறங்காப்புலி (வயது 28), சவீதா (வயது அறுபதுகள்) ஆகியோருக்கு இடையில் நிகழ்கிறது. உலக இலக்கியத்திலேயே மிகவும் அற்புதமான பகுதிகளுள் ஒன்று இது.

தொன்மமாகும் பாகீரதி

பேராபுடீமாவின் தொன்மம் நாவலை மேலும் உயரத்தில் எடுத்துச் செல்கிறது. எதைக் கண்டாலும் அஞ்சி ஒடுங்கக்கூடிய, தூக்கத்தின் மீது பெருவிருப்பம் கொண்ட விசித்திர தெய்வம் அவள். பேராபுடீமாவின் கதையும் பாகீரதியின் கதையும் சில ஒற்றுமைகளைக் கொண்டு எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன.

இருவருக்கும் தூக்கம் என்பது மையப்புள்ளி. ஆனால், பேராபுடீமா பழங்குடி தெய்வம் என்ற நிலையிலிருந்து பெருந்தெய்வம் என்ற நிலையை நோக்கி அடைகிறாள். பிராமணக் குடும்பத்துப் பெருந்தெய்வமான பாகீரதி அந்த அடையாளத்திலிருந்து விலகி பழங்குடி தெய்வ நிலைக்குரிய குணங்களை அடைகிறாள். இத்துடன், பழங்குடி தெய்வம் பெருந்தெய்வமாவதன் முதலாளித்துவக் கோணமும் நாவலில் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது.

பாகீரதியும் இந்தியாவும் போர்ஹேவும்

பாகீரதிக்கும் இந்தியாவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகஸ்ட் 15 அன்று பாகீரதி பிறந்தாள் என்ற தகவல் தற்செயலானது அல்ல. நெருக்கடிநிலையை ஒட்டிய காலகட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல பாகீரதிக்கும் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாகவே இருக்கிறது.

எல்லோரையும் எல்லாவற்றையும் வேறொன்றாக மாற்றிய, காட்டிய நெருக்கடிநிலைக் காலத்தைப் போல பாகீரதியின் கனவும் அந்தக் கனவிலிருந்து நீட்சி பெறும் நாவலும் ஒவ்வொருவரையும் வேறொருவராக, ஒவ்வொரு காலத்தையும் வேறொரு காலமாக ஆக்குகிறது. போர்ஹேவைப் படிப்பது போல் இருக்கிறது. போர்ஹே இந்தியாவில் பிறந்திருந்தால், நாவல் எழுதும் எண்ணம் அவருக்கு இருந்திருந்தால், நெருக்கடி நிலை காலகட்டத்தில் இப்படி ஒரு நாவலைத்தான் எழுதியிருப்பார்.

இந்த நாவலை போர்ஹேவின் ‘தி அப்ரோச் டூ அல் முடாஸீம்’ என்ற சிறுகதையுடன் பொருத்திப் பார்த்தால் ‘பாகீரதியின் மதியம்’ நாவலுக்கு முற்றிலும் வேறொரு பரிமாணம் கிடைக்கிறது. பல்வேறு நபர்களைச் சந்திக்கும் போர்ஹே கதையின் நாயகன் ஒரு மகத்துவத்தின் சிறு பிரதிபலிப்பை அவர்களிடத்தில் காண்கிறான்.

அந்த மகத்துவம் அவர்களிடம் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று கருதும் நாயகன், ‘இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனிதன் இருக்கிறான். அவனிடமிருந்து தான் இந்தத் தெளிவு, இந்தப் பிரகாசம், வெளிப்படுகிறது; இந்த உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இந்த பிரகாசத்துக்கு இணையான ஒரு மனிதன் இருக்கிறான்’ என்ற முடிவுக்கு வருகிறான். அந்த மனிதனைத் தேடிச் செல்வதுதான் கதை.

‘பாகீரதியின் மதியம்’ நாவலில் அந்த மூல மகத்துவமாக ஜெமினி இருக்கிறார். எல்லோரும் ஜெமினியையோ ஜெமினியின் பிரதிபலிப்புகளையோ தேடிக்கொண்டு செல்கிறார்கள். தேடிக்கொண்டு செல்பவர்கள் யாருக்கும் ஜெமினி அகப்படவில்லை; ஆனால், தேடிச் செல்பவர்கள் ஜெமினியாக உருமாற்றம் அடையும் மாயவிந்தை நிகழ்கிறது. ஒரு மகத்துவத்தின் தொடர் பிரதிபலிப்புகளில் ஒன்றாக வெங்கடேசனை வந்தடைந்திருக்கும் பாகீரதியின் மூல மகத்துவத்தைப் பற்றியும் வாசகரால் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே முடியாது.

உரையாடல்களின் நாவல்

நாவலின் தொடக்கத்தில் நிகழும் பெரியாரிய X பிராமணிய உரையாடல்தான் ஒட்டுமொத்த நாவலுக்கும் விதைபோடுகிறது. திராவிட X பிராமணியம், விவசாயி X முதலாளி, சமவெளி (அனைத்துச் சாதிகளும் முதலாளித்துவமும் உள்ளடங்கியது) X பழங்குடி, பெண் X ஆண், சுற்றுச்சூழல், பழங்குடி தெய்வம் X பெருந்தெய்வமாக்கல் போன்றவற்றைப் பற்றிய ஆழமான உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறுகின்றன.

இவை யாவும் மந்திரம் போன்றதொரு கதைசொல்லலுக்குள் இழைந்து, இயைந்து பரவியிருப்பதுதான் மற்ற அரசியல் நாவல்களிலிருந்து இந்த நாவலைப் பிரித்துக் காட்டுகிறது. எனினும், நாவலின் மையமான ஜெமினி தலித் இனத்தவராக இருந்தும் தலித்திய உரையாடல் போதிய அளவு இடம்பெறாதது முக்கியமான விடுபடல்.

மிதக்கும் வண்ணங்களின் நாவல்

இந்த நாவலின் மையங்களில் ஒன்று ‘மிதக்கும் வண்ணங்கள்’ எனும் ஓவியக் கோட்பாடு. இந்தக் கோட்பாடு வெவ்வேறு அர்த்தங்களைக் காட்டியபடி மிதந்துகொண்டிருக்கிறது. ‘மிதக்கும் வண்ணங்கள்’ என்ற இழை இந்த நாவலின் வெவ்வேறு சம்பவங்கள், மனிதர்கள், கோட்பாடுகளை இணைக்கும் விதத்தில் வெங்கடேசன் அசாதாரணமான ஒரு கலைஞர் என்பது நமக்குப் புலனாகிறது. இந்த நாவலைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், ‘மிதக்கும் வண்ணங்களால் ஆன நாவல்’ என்று சொல்லலாம்.

ஒரே ஒரு அற்புதத் தருணம் ஒரு நாவலை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடும். ஆனால், ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் கிட்டத்தட்ட பக்கத்துக்குப் பக்கம் அதுபோன்ற தருணங்கள் நிரம்பி நம்மை மூச்சு முட்டவும் செய்கின்றன. பாகீரதி கனவு கண்டுகொண்டே நடந்து வந்து உறங்காப்புலியைச் சந்திக்கும் இடம் இந்த நாவலில் அற்புதங்களின் தொடக்கம். இந்த நாவல், யதார்த்த வாழ்க்கைக்கே அப்பாற்பட்ட அற்புதங்களின் புனைவு அல்ல. யதார்த்த வாழ்வின் இடைவெளிகளை, அரசியல்-சமூக ஊடாட்டங்களுடன் அற்புதமாக்கும் புனைவு.

ஒருவரில் இன்னொருவர், ஒரு கதையில் இன்னொரு கதை என்று பின்னிப் பிணைந்து விரியும் இந்த நாவல் தமிழ்ப் புனைகதையின் சாத்தியங்களை ஏகமாக விஸ்தரித்திருக்கிறது. அரசியல், காதல் எல்லாவற்றையும் தாண்டி இந்தப் புனைவு சாகசத்துக்காகவே நாவலை வாசிக்கலாம்.

பா. வெங்கடேசனின் பிரத்யேக மொழிநடை புது வாசகருக்கு சற்றே சிரமம் தரக்கூடியதாக இருக்கக்கூடும். போர்த்துக்கீசிய நாவலாசிரியர் ஜூஸே சரமாகுவைப் போல் பா. வெங்கடேசனும் அடுக்கி அடுக்கி நீண்ட வாக்கியங்கள் எழுதக்கூடியவர். புனைவெழுத்தில் அடைப்புக்குறிகளை அதிகம் பயன்படுத்துபவர் பா. வெங்கடேசனாகத்தான் இருக்கும். ஆனால், சற்றுப் பொறுமையுடன், வாசிப்பு உழைப்பு செலுத்துபவருக்கு பா. வெங்கடேசன் ரத்தினங்களை அள்ளியள்ளித் தருகிறார்.

பா. வெங்கடேசன் வாசகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பெரும் படைப்பாளி. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் பலருக்கும் இணையான எழுத்தைத் தந்திருக்கிறார். ‘பாகீரதியின் மதியம்’ போன்ற படைப்புகளை வாசிப்பதென்பது படைப்பாளிக்கு நாம் செய்யும் மரியாதை என்பதைப் போல நமது வாசிப்புத் திறனுக்கும் செய்துகொள்ளும் மரியாதை!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x