Published : 30 Nov 2014 11:19 AM
Last Updated : 30 Nov 2014 11:19 AM

நாவல் பகுதி | புதிய எக்ஸைல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சென்னைப் புத்தகச் சந்தையையொட்டி வெளிவரவிருக்கும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ நாவலின் பகுதி இது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘எக்ஸைல்’ நாவலின் தொடர்ச்சியாக சாரு இந்த நாவலை அவர் எழுதியிருக்கிறார். சம்பவங்களின் தொகுப்பாக விரியும் இந்த நாவல், ஆட்டோபிக்‌ஷன் வகையைச் சேர்ந்தது எனலாம்.

மீன் தொட்டியில் தினந்தோறும் நான் காணும் ஒரு அற்புதம் இது: பெருந்தேவி மீன் தொட்டிக்கு அருகில் போனதுமே இரண்டு ஃப்ளோரான்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டு தொட்டியின் கண்ணாடியில் வாயை வைத்து அவளோடு பேசும். தொட்டியிலிருந்து மேலே எழும்பித் தரையில் விழுந்து விடுகிறாற்போல் மேலும் கீழும் குட்டிக் கரணம் போட்டுச் சுழன்று ஆடும். இதைப் பார்ப்பதற்காகவே மீன் வளர்ப்பில் உள்ள அத்தனை சிரமங்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று தோன்றும். பெருந்தேவியும், “என்னடா குட்டி, செல்லக் குட்டிக்கு பசிக்குதா, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுடா அஜ்ஜுக் குட்டி” என்று கொஞ்சிக் கொண்டே உணவைப் போடுவாள். இந்த மீன் உணவில் வேறு நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ளன. ஃப்ளோரானின் கொண்டைப் பெரிதாக வளர வேண்டும் என்பதற்காக Humpy Head என்ற உணவைப் போட்டுக் கொண்டிருந்தாள் பெருந்தேவி.

பெருந்தேவி இல்லாமல் நான் எத்தனையோ முறை ஃப்ளோரான் களின் பக்கத்தில் போய் நின்று என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டுவேன். ம்ஹும். பக்கத்தில் ஒரு ஆள் நிற்பதையே பொருட் படுத்தாமல் ஜடம் மாதிரி நீந்திக் கொண்டிருக்கும். இந்தக் குட்டி களுக்காக உணவு டப்பாக்கள் – பதப்படுத்தப்பட்ட குட்டி மீனும் புழுக்களும்தான். மீன்களின் உணவு டப்பாவைத் திறந்தால் கருவாட்டு மணம் வரும் – வாங்கப் போகும் போது அந்த அக்வேரியத்தின் முதலாளி என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். அக்வேரியத்தில் உள்ள எந்த மீனும் அவர் அவற்றின் அருகே போனால் கண்டு கொள்வதில்லையாம். அவரிடம் வேலை பார்க்கும் பணியாள் சென்றால்தான் குதிக்கிறதாம். காரணம், பணியாள்தான் அவற்றுக்கு உணவு போடுகிறார்.

என் வீட்டில் செத்துப் போன மீன்களில் ஒன்று ரெட் பேரட். அதன் மூக்கு கிளியைப் போல் இருப்பதால் அந்தப் பெயர். ரெட் பேரட் ரொம்பவும் பயந்தாங்கொள்ளி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதேபோல் நான் அதன் பக்கம் போனாலே அதன் சிவப்பு நிறம் வெள்ளையாக மாறி விடும். பயத்தில் நிறமே மாறிவிடக் கூடிய அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டவை அவை.

ஒருமுறை பெருந்தேவி பெங்களூர் போயிருந்தாள். அவள் வீட்டில் இல்லாத மூன்று தினங்களும் ஃப்ளோரான்கள் சாப்பிடவே இல்லை. மூன்று நாட்களும் இரண்டு வேளையும் உணவிட்டேன். ஆனால் ஃப்ளோரான்கள் அதைச் சீந்தவே இல்லை. சாப்பிட வைக்க எவ்வளவோ போராடினேன். காது, கண் என்று எல்லா உறுப்புகளும் செயல் இழந்து விட்டதுபோல் அவை என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.

மூன்று தினங்களும் அவை முழுப்பட்டினியாகக் கிடந்தன. செத்து விடும் என்று நினைத்தேன். சாகவில்லை. நான்காம் நாள் பெருந்தேவி வந்து பார்த்த போது இரண்டு ஃப்ளோரான்களும் அவளுடன் வாய் விட்டுப் பேசியதை நான் என்னுடைய இரண்டு கண்களாலும் பார்த்தேன். சத்தியம். நம்புங்கள். அந்த மீன்கள் நம்மைப் போல் பேசவில்லை. ஆனால் வாயைத் திறந்து திறந்து பேசின; துள்ளித் துள்ளிக் குதித்தன; ஆடின. ஆர்ப்பாட்டம் போட்டன; தொட்டியிலிருந்தே வெளியில் விழுந்து விடுவது போல் மேலே மேலே எம்பிக் குதித்தன. மேலே இருந்த திறப்பின் வழியே தண்ணீர் வெளியே தெறித்தது. அவள் உணவைப் போட்டதும் அவ் அவ் என்று விழுங்கின. தண்ணீர்த் தொட்டியில் வாயை வைத்து அவளைத் தொடுவதற்கு முயற்சி செய்தன. விட்டால் அவள் மடியில் விழுந்து விளையாடும் போல் தோன்றியது.

இது நடந்து சில தினங்கள் சென்று ஒருநாள் பெரிய ஃப்ளோரான் திடீரென்று தலைகீழாகக் கவிழ்ந்து கொண்டது. எப்போதும் மேல் நோக்கித் திமிறிக் கொண்டிருக்கும் திமிலைப் போன்ற அதன் கொண்டை தரை நோக்கிக் கிடந்தது. உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டிலும் பொதுவாகச் சுறுசுறுப்பாக இருக்கும் ஃப்ளோரான் இதுதான். அக்வேரியம் ஆட்களை அழைத்து வந்துக் காண்பித்தோம். “வயதாகி விட்டது. செய்வதற்கு ஒன்றுமில்லை. அதன் ஆயுள் அவ்வளவுதான். அப்படியே சில நாட்கள் மிதந்து விட்டுச் செத்து விடும். நீங்களாக எதுவும் பண்ணாதீர்கள். சமயங்களில் இரண்டு மாதம்கூட உயிரோடு மிதக்கும்” என்றார்கள். பதினைந்து நாட்கள் தலைகீழாக மிதந்தது. சுவாசம் மட்டும் இருந்தது. எதுவுமே சாப்பிடவில்லை. ஒவ்வொரு நாளும் அது பிழைத்து விடும் என்ற நம்பிக்கையில் போய் பார்ப்பேன். ம்ஹும். ஒரு மாற்றமும் இல்லாமல் சுவாசித்தபடி மிதந்து கொண்டிருக்கும். ஒருநாள் சுவாசம் நின்று மிதந்தது. எத்தனையோ ஜீவராசிகளைக் கொன்று தின்றிருக்கிறேன். ஆனால் அந்த ஃப்ளோரானின் மரணச் சம்பவம் என்னை ரொம்பவும் அலைக்கழித்தது. உயிர் உடலை விட்டுப் பிரிவதற்குப் பதினைந்து நாட்களா ஆகும்? ஒவ்வொரு நாளும் பெருந்தேவி அதன் அருகே சென்று ஏதோ பேசுவாள்.

நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்...

இது எல்லாவற்றிலும் உன்னை நான் காண்கிறேன். என் இனிய ஃப்ளோரான் மீனே… உன் உயிர் எங்கே போனது? ஒளிப் புள்ளியாக மாறி எங்கே நின்றுகொண்டிருக்கிறாய்? அங்கிருந்து என்னைக் காண்கிறாயா?

இந்த நாவல், கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. தொடர்புக்கு: 94459 01234

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x