Published : 19 Jun 2016 11:29 AM
Last Updated : 19 Jun 2016 11:29 AM
தமிழ்ப் புதுக்கவிதையில் சிறுபத்திரிகை வட்டத்திலும், பொதுவாசகர் பரப்பிலும் (தமிழர்களின் மக்கள்தொகையை ஒப்பிடும்போது அவர்கள் குறைவானவர்களாகவே இருந்தாலும்) தான் எழுதிய கவிதை வரிகளால் அதிகம் நினைவுகூரப்படுபவர் விக்ரமாதித்யனாகவே இருப்பார். தமிழ் சாதாரணனின் அறிவு, ஞானம், சமய நம்பிக்கை, உலகப் பார்வை என்னென்ன வளர்ச்சிகளையும் வரையறைகளையும் கொண்டனவோ அதுதான் விக்ரமாதித்யனின் வளர்ச்சியும் வரையறையும் வெற்றியும்.
கோயில், ஐதீகங்கள், தல புராணங்கள் சார்ந்துதான் விக்ரமாதித்யனின் கவிதைகள் அல்லது கவிதை வரிகள் தனித்துவம் அடைகின்றன. ‘ஆகமம் ஆசாரம் தவறாத நியமம்/ தெய்வமும் ஐதிகத்தில் வாழும்’ என்று அவர் முடிக்கும்போது மந்திரச் சொற்கள் ஆகிவிடுகின்றன. ‘உலகுயிர்க்கெல்லாம் முலைதரும் அம்மையே/ தலைமாலை சூடித் திரியும் சுடலைக் காளியே’ என்ற வரிகள் பிரார்த்தனையின் இறைஞ்சுதலை அடைந்துவிடுகின்றன. இதுபோன்ற பல மந்திர வாசகங்களை அவர் படைத்திருக்கிறார்.
இவருடைய குறுங்கவிதைகளைத் தனியாக ஒரு தொகுப்பாக்க வேண்டும். கிரகயுத்தம் கவிதைகள் அதற்கு உதாரணமானவை. ‘தங்கத் தேருக்குத் தனி அலங்காரம் எதற்கு’, ‘பருவைத்த முகம் பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது’, ‘அம்மாவும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு அழகாக இருக்கிறார்கள்’, ‘குருமகாராஜ் ஜோதி வளர்க்க/ குடும்பம் பட்டினி கிடக்க’, ‘சிவன்/ என்றென்றும்/ நர்த்தன சிங்கார ரூபன்தான்’, ‘வசந்தம் வருகிறது/ வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கிறது/ வாழ்வரசிகள் கூடுகிறார்/ ஆசைப்பட்டு’ என விக்ரமாதித்யன் கண்ட அழகிய கனவுகள், அவரது குறுங்கவிதைகளும், கவிதைகளின் முடிப்புகளும்.
விக்ரமாதித்யன் கவிதை உலகம் உலகாயதமானது. உலகாயதமாகத் தொடங்கி உலகாயதமாகவே நிறைவும் கொள்வது. அதன் வெற்றியும் தோல்வியும் உலகியலே. கவிதையின் அன்றாட உபயோகத்தன்மை குறித்து அதிகம் தன் கவிதைகளில் விசனப்பட்டவர் விக்ரமாதித்யன். ஆனால் அவர் கவிதைகள் பயன்பாட்டு மதிப்புகொண்டவைதாம்.
‘வேலையில்லாதவன்/கைலியுடுத்திக் கழிக்க/ வெள்ளைச் சேலையுடுத்திக் கிழிப்பாள்/ கோவணமாகிறது’ என நறுங்கி, நறுங்கிச் சிதையும் வாழ்க்கையைத்தான் தீராமல் எழுதுகிறார் விக்ரமாதித்யன். மிக விரக்தியுடன் பேசினாலும், மிகக் கழிவிரக்கம் கொண்டாலும், மிகவும் அலைக்கழிவுற்றாலும் உயிர்ப்புக்கான பெருந்தீயை அவியவிடாமல் உள்ளோட்டத்தைத் தக்கவைத்திருப்பவை. எல்லாம் மாறும் என்ற ஞானம்,
அதேவேளையில் மாறிவிட்டதைப் பற்றிய புலம்பல், மாறாத இயற்கை பற்றிய நிம்மதி எனப் பூமியின் அத்தனை பருவங்களையும் கொண்டவை இவரது கவிதைகள். தீ என்ற படிமத்தை அவர் விதவிதமாகத் தனது கவிதைகளில் ஏன் தொடர வேண்டும், இத்தனை வாதைகளைக் கவிதைகளில் வடித்த அவரால், ‘சிட்டுக்குருவிக்கு ஜே’ என்று எப்படி கோஷம் போட முடிகிறது?
விக்ரமாதித்யன் லௌகீகத்துக்கு அப்பால் எழுதிய அபூர்வமான கவிதைகளில் ஒன்று:
‘அடைத்திருந்த கதவைத் தட்டி/ திறக்கச் செய்தது இயல்பூக்கம்/ உட்புகுந்து பரவிநின்ற வெளிச்சத்தையும்/ உடன்வந்து சிலிர்க்க வைத்த காற்றையும்/ உள்வாங்கி அனுபவித்த காற்றையும்
ஒரு பசி தெரிந்து/ உயிர்ப்பசி உணர்ந்து/ ஓருயிர் உருகும்/ ஊழுழிக் காலமாக
ஓருயிர்/ ஆருயிரென உணர்வது/ பேருயிர்’ என்பது வரை விக்ரமாதித்யன் பூமிக்கு மேலே சற்றுப் பறந்து தாக்குப்பிடிக்கிறார். அடுத்து ‘பேருயிரின் பிரச்சினைகள்/ பெரியவை/ அவர்கள் பேசுவது/ பகவத் கீதை/ பின்னால் இருக்கிறது/ பாதுகாப்பான வாழ்க்கை’ என்று இறங்கிவிடுகிறார். அது அவரது இறக்கம். அவர் கவிதைகளில் வரும் பிராணிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சி உருவகங்கள் எல்லாமே தனித்துவமான உயிர்கள் அல்ல. அன்றாடத்தில் மாட்டிச் செக்கிழுக்கும் சுயத்தின் ஸ்திதியைக் குறிக்கும் உருவகங்கள்தாம்.
விக்ரமாதித்யனின் கவிதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும் பெண் குழந்தைகளைப் போல, தொடக்கத்திலேயே நெடுநெடுவென்று வளர்த்தியைக் காட்டியவை. அவரது முதல் தொகுப்பில் எழுதிய ‘கொடை’ கவிதை, அவரது உலகம் பின்னர் அடைந்த முழுமையின் சகல தீற்றல்களையும் கொண்டவை.
தமிழ் மரபின் ஓசை, உள்ளார்ந்த ஒலி நயம், மரபிலக்கியத்தின் வார்த்தை வளம் மற்றும் குறிப்புணர்த்தல்கள், பேச்சுத் தமிழின் துடி, தன்னெழுச்சி, பாடல் தன்மை, உள்ளோட்டம் எல்லாம் கூடிய மொழி ஆரம்பகாலக் கவிதைகளிலேயே அவருக்குச் சித்தித்துவிடுகிறது. புதுக்கவிதை அதுவரை தேய்வழக்குகள், அலங்காரம், சுமை என்று தவிர்த்துவந்த அத்தனை குணாம்சங்களையும் விக்ரமாதித்யன் தன் சவுந்தர்யங்களாகச் சூடி, தமிழ் மரபின் தொடர்ச்சியாக, மக்கள் கவிஞனாவதற்கான அத்தனை நம்பிக்கைகளையும் இக்கவிதை மூலம் அளிக்கிறார்.
தமிழ் வாழ்க்கையின் சித்திரங்களும் சத்தங்களும் அபூர்வமாகப் பதிவான இயற்கைக் கவிதை அது. ‘ரிப்பேர்… குடை ரிப்பேர்…’ என்று தமிழ் நவீன கவிதையில் தமிழ் வாழ்க்கையின் சத்தம் அநேகமாக முதல் முறையாகக் கேட்கிறது.
விக்ரமாதித்யன் என்றாலே நினைவில் வரும் ‘சுவடுகள்’ கவிதையும் அத்தகைய அழகைக் கொண்டதுதான். ‘வரும் வழியில்/ கண்டெடுத்த/ கல்வெள்ளிக்/ கொலுசு ஒண்ணு/ கற்பனையில் வரைந்த/ பொற்பாதச் சித்திரத்தை/ கலைக்க முடியலியே இன்னும்’. இந்தக் கவிதை, தமிழ் நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை அழகியல்பூர்வமாக, எந்தவிதச் சிரத்தையும் வெளித் தெரியாமல் அநாயசமாக நடந்த ஒரு சாதனை. இப்படி வேக வளர்த்தி காட்டும் விக்ரமாதித்யன், தனது ஐந்தாவது தொகுதியான ‘திருஉத்திரகோசமங்கை’யில் எழுதிய ‘நவபாஷாணம்’ நெடுங்கவிதையில் பரிபூர்ணத்தை அடைவதோடு தன் எல்லைகளையும் உறுதியாக வரையறுத்துவிடுகிறார்.
‘நவபாஷாணம்’ மூலமாகத் தன் கவிதையின் உச்சத்தை அடைந்த விக்ரமாதித்யன் அதற்குப் பிறகு தான் அடைந்த உச்சியில் வெகுகாலமாக ‘மகாகவிஞன்’ என்ற சுயநிர்ணயத்துடனும் இறுமாப்புடனும் ஓய்வுகொள்கிறார்.
தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞரான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம்; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும் திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும். மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.
நாடோடி, சித்தர், யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள். வாழ்க்கை அவரை நாற்றிசைகளிலும் தூக்கி எறிந்து சிதறடித்திருக்கிறது. ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை, தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன். அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவி ஆளுமையின் சொர்க்கமும் நரகமும். இம்மைக்கு அம்மை, மறுமைக்கு மனைவி, வாழையடியாக வாழ்ந்து கொய்யாப்பழம் என்னும் செழுமையான வாழ்வைக் கொய்யத் தன் கவிதைகள் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் தொடர்ந்து துடித்துக்கொண்டிருப்பவர்தான் விக்ரமாதித்யன்.
‘எந்தப் பாம்பும் முழுசாய்க் கடித்ததில்லை’ என்று விக்ரமாதித்யன் தன் கவிதையில் விசனித்திருக்கிறார். ஆனால் விக்ரமாதித்யனைக் கவிதை முழுமையாகக் கடித்திருக்கிறது. இல்லையெனில் ஒரே நேரத்தில் கழுத்தில் மாலையாகவும் காலைச் சுற்றும் பாம்பாகவும் அவருக்குக் கவிதை ஆகியிருந்திருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT