Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM
“உங்களுடைய தூர்வை நாவில் இதுவரை காட்டப்பட்ட வாழ்க்கைகு மாறுபட்ட ஒன்றைச் சித்தரிக்கிறது” இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சோ.தர்மனுக்கு தெரிந்திருந்தும் அவர் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் தமிழ்ச் சமூகங்களின் வாழ் நிலை பற்றி அறியாதவரல்லர் அவர். அரசு முறையிலான தொகுப்பில் பட்டியல் இனமாக 70க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. பிற்பட்டோர் பிரிவிலும் பல்வேறு சாதிகள் உள்ளன.
முற்பட்டோராகக் காட்டப்படும் சமூகங்களிலும் அவ்வாறே உள்ளன. முற்பட்டோர் என்பதால் அந்தணரும் சைவப்பிள்ளையும் ஒரே வாழ் நிலையும் பண்பாடும் உடையவர்கள் எனலாமா? பிற்பட்டோர் தொகுப்பில் இருப்பதனால் வண்ணாரும் நாவிதரும் நாடாரும் மறவரும் கள்ளரும் ஒரே சமூகம் போல் பாவித்துப் பேச முடியுமா? அதே போன்றுதான் பட்டியல் தொகுப்பிலும் பள்ளர் பறையர் சக்கிலியர் போன்ற சமூகங்களின் வாழ் நிலையும் பண்பாடும் தனித்து அறியுமாறு தெளிவாக உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தில் அமைந்தவை. இதில் மொழியும் சில சமூகங்களுக்கு வேறாக உள்ளது. உணவும் முறையும் சடங்கு முறையும் தொழில்முறையும் முற்றிலும் வேறாக உள்ளன. இவையாவும் கருத்தில் கொள்ளாமல் பொதுவுடமைவாதிகள் பேசுவது போல எழுத்தாளர் பேசுவதன் நோக்கம் புரியவில்லை.
சோ.தர்மனின் நாவல்களில் பெரிதும் ஊடாடுவதும் மையமாக இயங்குவதும் வேளாண்மையை மட்டுமே வாழ்வியலாகக் கொண்ட மள்ளர் எனப்படும் பள்ளர் சமூகமே. இச்சமூகப் பதிவுகள் சங்க இலக்கியம் தொட்டுச் சிற்றிலக்கியக் காலம் வரை தொடர்ந்து வந்துள்ளன. அவற்றின் சிகரமாகக் குறிப்பிட்ட நோக்கத்தின் வெளிப்பாடாகத் தோன்றிய பள்ளு நூல்கள் குறிப்பிடத்தக்கன. இச்சமூகத்தில் பண்பாடு தொழில் ஆளுமை போன்ற பல காரணிகள் இவர்களைப் பட்டியலினத்திற்குப் பொருத்தமற்றவர்களாகக் காட்டுகின்றன. அவர்களின் உளவியலும் இன்றைய சமூக அரசியலில் செயல்பாடுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. இவற்றையெல்லாம் நன்கு அறிந்த நிலையில் அத்தகு பதிலை வரவழைக்கும் நோக்கில் மண்குதிரை வினா எழுப்புவது நமக்கே புரிகிறது. எழுத்தாளாருக்குப் புரியாமலா போகும்!
மீண்டும் ‘உண்மையான’ பதிலை வரவழைக்க மண்குதிரை மெனக்கெடுகிறார். ஆனாலும் சோ.தர்மன் கெட்டிக்காரர். பிடிகொடுக்க மறுக்கிறார்.
“தலித்துகளுக்குத் தொடக்கக் காலத்தில் நிலங்கள் கிடையாதுதான். ஆனால், பின்பு அவர்கள் நிலவுடமையாளர்களாகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்று கூற, ‘’தொடக்கத்தில் நிலங்கள் இல்லை என்றால் தலித்துகள் எப்படி நிலவுடைமையாளர்கள் ஆனார்கள்?’’ என்று கேட்கிறார். அதற்கு நான் ‘முன்பெல்லாம் ஊரின் நிலங்கள் அத்தனையும் அந்த ஊரில் உள்ள பிராமணர்களுக்குச் சொந்தமானவையாகவே இருக்கும். அதில்தான் எல்லோரும் விவசாயக் கூலிகளாகப் பாடுவடுவார்கள்’ என்கிறார். இலக்கியம் கல்வெட்டு முதலான ஆவணங்களின் வழித் தமிழ்ச் சமூக அரசியல் வரலாற்றை முடிந்தவரை அறிந்திருக்கிறேன். வரலாற்றில் தர்மன் அவர்களின் கருத்து எந்த நூற்றாண்டுக்குச் சொந்தமானது? எந்தெந்தச் சமூகங்களுக்குச் சொந்தமானது? வியப்பாக இருக்கிறது.
(நவம்பர் 9, 2013இல் கலை இலக்கியம் பகுதியில் வெளிவந்த எழுத்தாளர் சோ.தர்மன் நேர்காணலுக்கான எதிர்வினையின் சுருக்கப்பட்ட வடிவம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT