Last Updated : 20 Jun, 2015 10:36 AM

 

Published : 20 Jun 2015 10:36 AM
Last Updated : 20 Jun 2015 10:36 AM

நீர்ச் சறுக்கு விளையாடும் ஜென் குரு

காட்சி ஊடகத்தின் தாக்கத்தினால் வாசிப்பு மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே போகிறது எனும் மனக்குறை தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக உள்ளது. இந்நிலையில், இளம் தலைமுறையினரிடம் வாசிப்பை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பல முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன.

‘தொடக்க நிலையினருக்கு’ எனும் அடிக்குறிப்போடு புத்தகங்கள் வெளிவருவது அந்த முயற்சிகளில் ஒன்று. வாசிப்பின் சுவாரசியத்தையும் காட்சி மொழியின் கவர்ச்சியையும் சிறந்த கலவையில் இப்புத்தகங்கள் நமக்குத் தருகின்றன. ஆங்கிலத்தில் வெளிவந்த இவ்வகை நூல்கள் தற்போது தமிழிலும் கிடைக்கின்றன.கிண்டல் மொழி, கேலிச் சித்திரம்

தத்துவம் என்றாலே புரியாத விஷயம்தான் என்று நினைப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடியவை ‘தொடக்கநிலையினருக்கு’ வரிசைப் புத்தகங்கள். கிண்டலான மொழி நடையில் கேலிச் சித்திரங்களோடு வாசகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு அநாயாசமாக இட்டுச்செல்லும் ஆற்றல் இப்புத்தகங்களுக்கு உண்டு. கீழைத் தத்துவம் முதல் பின்நவீனத்துவம் வரை பல்வேறு தத்துவச் சித்தாந்தங்களை இப்புத்தகங்கள் அறிமுகம் செய்திருக்கின்றன.

பொதுவாக, ஜென் குறித்த எந்தப் புத்தகமும் எதிர்மறையான நிலையையே தோற்றுவிக்கிறது. ஜென்னை சொற்களால் விவரிக்க முடியாது. பொதுக் கருத்துகள் சார்ந்த மட்டத்தைவிட அது இன்னும் அடிப்படையான ஓர் அனுபவம். ஜென் என்றால் என்ன என விளக்கினால் அங்கு ஜென் இருக்காது. அது கற்கக்கூடியதோ, கற்பிக்கக்கூடியதோ அல்ல.

இப்படி மிகக் கடினமான பாடமாக அதே நேரம், மிக உன்னதமான அனுபவத்தை எளிய கதைகள் மூலம் உணர்த்துவதாகக் கருதப்படும் ஜென் தத்துவத்தைத் தொடக்கநிலையினருக்கு எழுத்து மொழி மூலமாகத் தந்திருக்கிறார்கள் ஜூடித் பிளாக்ஸ்டோன் மற்றும் ஸோரன் ஜோசிபோவிச். அட்டகாசமான விளக்கப்படங்கள் மூலம் ஜென் அனுபவத்தை ஏற்படுத்துகிறார் நவோமி ரோஸன்பிளாட்.

மொழிபெயர்ப்பில் சாகசம்

ஜென் பற்றி எழுதுவதே அபாயகரமான முயற்சிதான். ஏனெனில், பவுத்தத் தத்துவ மரபில் ஜென் உண்டாக்கிய புதிய போக்கை வரலாற்றுரீதியாக விளக்க வேண்டும். அதே நேரம் ஜென் குருக்கள் தங்கள் சிஷ்யர்களோடு கேலி, கிண்டல், முரண்பாடுகளோடு ஒத்திசைந்து நிகழ்த்தும் தத்துவ உரையாடல்களின் ஜீவனையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் சரியான கலவையில் அமைவது அபூர்வம். ‘ஜென் ஃபார் பிகினர்ஸ்’ நூலில் இது அபாரமாகப் பின்னப்பட்டுப் புனையப்பட்டிருக்கும். அதைத் தனது மொழிபெயர்ப்பிலும் தக்கவைத்திருக்கிறார் சேஷையா ரவி.

சீன, ஜப்பானியப் பண்பாடுகள்மீது ஜென் ஏற்படுத்திய பாதிப்பையும், உலக அளவில் பல துறை அறிஞர்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்த விதத்தையும் இந்நூல் பதிவுசெய்கிறது. உள்முரண் கொண்ட போதனைகள், கேலியான ஜென் குருக்களின் பாணி, கீழ்த்திசை ஓவியம், இலக்கியம், கட்டிடக் கலை, பிறப்பு, இறப்பு பற்றிய கேள்விகள், உரையாடல்கள் எனப் பல பரிமாணங்களை மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறது இந்நூல்.

மிதக்கும் எழுத்துகள்

இந்நூலில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துருக்கள்கூட குறிப்பிடத்தக்கவை. கவனச் சிதறலை ஏற்படுத்துவதன் மூலம் கவனத்தை ஈர்க்கும்படியாக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு வரியில் பெரிய எழுத்துருக்கள். அடுத்த வரியில் சிறிய எழுத்துருக்கள். சில வரிகள் இடது புறத்தில் அச்சிடப்பட்டுள்ளன. திடீரென ஒரு வரி வலது புறம் தொடங்குகிறது. சில மேலும் கீழுமாக மிதக்கின்றன. நேர்க் கோட்டில் பயணமல்ல வாழ்க்கை. எதிர்பாராததை எதிர்பார்த்திருப்பதே வாழ்க்கை எனும் ஜென் தத்துவத்தின் சாரத்தில் ஊறிய எழுத்துருக்கள் இவை.

பின்நவீனத்துவச் சாயல் சரியா?

கடலில் நீர்ச் சறுக்கு விளையாடும் ஜென் குரு, போர்வீரன் சாமுராய் தலை மேல் ஒளி வீசும் பல்பு, கொழுகொழுவெனக் காட்சியளிக்கும் புத்தர் இப்படிப்பட்ட கேலிச் சித்திரங்கள் வாசிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஜிம் பவல் எழுதிய ‘பின்நவீனத்துவம்: தொடக்கநிலையினருக்கு’ புத்தகத்தில் ஜோ லீ பின்நவீனத்துவப் பாணியின் விளக்கப்படங்களை வரைந்திருப்பார்.

அவை பல படிமங்களை, கற்பிதங்களை அங்கதச் சுவையோடு கட்டுடைக்கும் விதமாக வரையப்பட்டிருக்கும். இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விளக்கப்படங்களிலும் இதே போன்ற பின்நவீனத்துவச் சாயல் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. அதற்காக ஜென் தத்துவத்தின் மேன்மையை அவை தகர்க்கின்றன என்றும் கூறிவிட முடியாது. சொல்லப்போனால், ஜென் தத்துவ விசாரணை என்பது கற்பிதங்களைக் கட்டவிழ்க்கும் வாழ்க்கைத் தத்துவமாகும்.

நொடிக்கு நொடி வாழ்வின் அர்த்தம் மாறிக்கொண்டே இருப்பதை உணர்த்தும் போக்கு அது. பவுத்த மரபின் உடைப்பு என்றாலும் ஜென்னுக்கு புத்தர்தானே மையம் என்ற கேள்வி எழலாம். ஆனால், அதற்கும் புத்தகத்தில் விளக்கம் இருக்கிறது. “தர்ம வழியைப் பின்பற்றுபவர்களே, புத்தரை உயரிய இலக்காகக் கொள்ளாதீர்கள். நானே அவரை ஓர் அந்தரங்கமான துளையாகத்தான் பார்க்கிறேன்” என்கிறார் பாதி கொண்டையோடு நிற்கும் பருமனான புத்தர். சுவையான வாசிப்பனுபவத்தைத் தரும் புத்தகம் இது.

ஜென் தொடக்கநிலையினருக்கு
ஜூடித் பிளாக்ஸ்டோன், ஸோரன் ஜோசிபோவிச்
விளக்கப்படங்கள்: நவோமி ரோஸன்பிளாட்
தமிழில்: சேஷையா ரவி
அடையாளம் பதிப்புக் குழு
பக்கங்கள்: 162
விலை: ரூ.160
தொடர்புக்கு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம்.
தொலைபேசி: (+91) 04332 273444

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x