Published : 24 Jul 2016 12:33 PM
Last Updated : 24 Jul 2016 12:33 PM
வான்காவின் காது யாருக்கு?
ஓவியர் வின்சென்ட் வான்காவின் ஓவியங்களை அறியாதவர்களுக்குக் கூட, அவர் தனக்குப் பிரியமான பெண் ஒருவருக்குக் காதை அறுத்துக் கொடுத்த கதை தெரியும். அந்தப் பெண் யார் என்பது 130 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது. சென்ற வாரம் ‘வான்காஸ் இயர்: தி ட்ரூ ஸ்டோரி’ நூல் வெளியானதையொட்டி, பாரிஸைச் சேர்ந்த ஒரு செய்தித்தாள், அந்தப் பெண்ணின் பெயர் காப்ரியேல் பெர்லாட்டியர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் ‘வான்காஸ் இயர்’ நூலின் ஆசிரியர் பெர்னாடெட் மர்பி, அந்தப் பெண்ணின் வாரிசுகள் கேட்டுக்கொண்டதால் அவரது பெயரைத் தனது நூலில் வெளியிடவில்லை. 1888-ல் நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதித்து, பாரிஸில் உள்ள பாஸ்டியர் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற ஆவணம் இன்னும் அங்கே பாதுகாக்கப்படுகிறது.
பாரிஸுக்கு வந்து சிகிச்சை பெற்றதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக காப்ரியல், ரூது போதார் லெஸ் சாலையிலுள்ள பாலியல் தொழில் விடுதியில் பணிப்பெண்ணாக இருந்தபோதுதான் ஓவியர் வான் காவைச் சந்தித்துள்ளார். இந்தச் செய்தி வெளிவருதற்கு முன்புவரை, வான்கா தன் காதை ஒரு பாலியல் தொழி லாளிக்குப் பரிசாக அளித்ததாகத் தான் இதுவரை உலகம் நம்பிவந்துள்ளது. ரேபிஸ் சிகிச்சையிலிருந்து மீண்ட அதே ஆண்டில்தான் வான்கா தன் காதை அறுத்துக் கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது. காப்ரியேல், அதன் பின்னர் திருமணம் செய்து நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். வான்கா தொடர்பாகத் தனக்கு நேர்ந்த சம்பவத்தை இறக்கும்வரை ரகசியமாகவே வைத்திருந்தார். வான்கா தீவிரமான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தன் காதை அறுத்துக் கொடுத்தார். அடுத்த நாள், போலீசாரால் பிடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். வான்கா, 1890-ல் தற்கொலை செய்துகொண்டார்.
ஹெமிங்வே வளர்த்த ஆறுவிரல் பூனைகள்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே, தனது ப்ளோரிடா வீட்டில் வளர்த்த ஆறு விரல் கொண்ட பூனைகளின் அடுத்தடுத்த தலைமுறைகள் இன்னமும் அவர் ஞாபகமாக அங்கே வளர்க்கப்பட்டுவருகின்றன. 1931 முதல் 40 வரை அவர் வாழ்ந்த அந்த வீட்டின் பெயர் கீ வெஸ்ட் ஹோம். கப்பல் கேப்டன் ஒருவர் பரிசாக அளித்ததன் மூலமே முதல் ஆறு விரல் பூனை ஹெமிங்வேயின் வீட்டுக்குள் காலடியெடுத்து வைத்தது.
அதன் பெயர் ஸ்நோபால். அதற்கு ஜோடியாக வந்த பெண் பூனையின் பெயர் ஸ்நோபால் ஜூனியர். கடலில் பயணம் செய்யும் மாலுமிகள், கப்பலில் சராசரி எண்ணிக்கைக்கு மேல் விரல்கள் கொண்ட பூனைகள் இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.
“பூனையைவிடச் சுதந்திரமான விலங்கு வேறெதுவும் இல்லை, ஆனால் அது இடும் கழிவைப் புதைத்துவிடுகிறது. பூனைதான் சிறந்த அராஜகவாதி.” ‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ நாவலில் எர்னஸ்ட் ஹெமிங்வே (இவருடைய பிறந்த நாள் ஜூலை 21).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT