Published : 11 Nov 2013 04:29 PM
Last Updated : 11 Nov 2013 04:29 PM

ஸர்மிளா செய்யித் - தலை நீட்டிய தளிர்

ஸர்மிளா செய்யித் இலங்கை மட்ட களப்பைச் சேர்ந்தவர். பெண் விழிப்புணர்வு சார்ந்த சமூகக் செயற்பாட்டளர் நவீன சிந்தனையுடைய பெண்கள் தங்கள் தளைகளை உணரும்போது அதற்கெதிரான அவர்களின் குரல் கவிதைகளில் பிரதிபலிக்கிறது. 'விழுது' என்ற கவிதையின் பகுதி:

"நான் கட்டுக்களைத் தகர்ந்தெரிந்தவள்

வரம்புகளைக் கடந்து தெரிக்கும் காற்று

வானம் முழுவதும் பவனியாகும் மேகம்

முற்றிலும் புதிய உணர்வுகளுடன்

காலையில் இறங்கி நடக்கிறேன்

சேலை முந்தானையைச் சரிப்படுத்துவதிலும்

இழுத்து இழுத்து இகுப்பை மறைப்பதிலுமே

என் கரங்கள் மிகக் கவனமாயிருப்பதுணர்ந்து

வியப்புதான் எனக்கு

களைந்தெறிந்துவிட்டதாகவும்

தகர்த்தெறிந்ததாகவும்

நான் இறுமாந்த ஒழுக்கத்தின் வேர்கள்

அதற்குள் தழைத்தது எங்ஙனமென்ற

இக்கவிதையின் முதல் பகுதி கவிதையற்று உரைநடைத் தன்மையுடன் அமைந்திருக்கிறது என்பதால் கவித்தரம் வந்திருக்கும் இப்பகுதியைத் தந்துள்ளேன். பெண்விழிப்புணர்வைப் பேசும்போது, தளைகளை உடைத்த, அல்லது அறுத்தெறிந்த ஆனந்தத்தைப் பேசும்போது, அறிக்கை போன்ற வாசகங்கள் வந்துவிடுகின்றன. இத்தகைய தன்மைகளைக் கடந்தே கவிதைகள் பிறக்கின்றன.

இலங்கையில் வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு மொட்டை மாடியில் நின்று வீராவேசமாகக் கத்தியைச் சுழற்றும் சூழ்நிலை இருக்கிறது. அங்கே துயர சூழ்நிலை. போரின் துயரம் கரும் இருள்போல மக்களின் மேல் படிந்திருக்கிறது. கவிதை வடிவத்தில் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துக்கள் ஆகியவற்றைக் கூற வேண்டியிருக்கிறது. வாசகனை அல்லது யாரோ ஒருவரை விளித்துப் பேசுவது போன்ற பாணிக் கவிதைகள் சகஜமாகின்றன. புதியதாக எழுத வருகிறவர்கள் இதற்குள்ளாகத்தான் புகுந்து வெளிவர வேண்டும் என்ற நிலை இருக்கிறதுபோலும். ஸர்மிளாவின் எதிர்க் குரல் இவ்விதமாக ஒலிக்கும் கவிதைகளை இங்கு தர நான் விரும்பவில்லை. மாறாக கவிதையாகத் துடிக்கும், கவிதையாக மாறிய வரிகளையே நான் இங்கு தர விழைகிறேன்.

"வீணையின் பானத்தை

உள்ளங்கையில் ஏந்தி வந்திருந்தாய்

திராட்சையின் ரசங்களை மட்டுமே

அருந்திப் பழகிய நான்

உன் வேண்டுகோளுக்கிணங்கி

வீணையின் பானத்தை உறிஞ்சி அருந்தி

மயங்கிக்கொண்டிருந்தேன்."

"குளம்புகள் கற்களில் மோத, அதோ

எம் கலவியைக் கனவில் பார்த்த புரவிகள்

தேரை இழுத்துக்கொண்டு

விரைந்தோடி வருவதைப் பார்"

"புரவிகளென்ன, சிறு தேரைகள் நெருங்காத

இடந்தேடிச் செல்வோம்

நதிகளுக்கடியில் நமக்கான கூடமைப்போம்

கண்ணாடியில் படுக்கை சமைப்போம்

நம் கனிகளை அடைகாப்போம்

கலவி உலகம் செய்வோம்"

('வீணையின் பானம்')

இக்கவிதையில் வீணையின் பானம் என்ற சொல்லாட்சி முக்கியமானது. வீணை இசையைத் தரக்கூடியது. இசை, பானமாக மாறுகிறது. அதை உள்ளங்கையில் ஏந்தி வந்திருப்பதை உறிஞ்சி அருந்தி மயங்குகிறார். குளம்புகள் கற்களில் மோத கலவியைக் கனவில் பார்த்த புரவிகள் தேரை இழுத்துக்கொண்டு விரைந்தோடி வருகின்றன. அப்படி வருவதன் காட்சி வர்ணனையும் கண்ணாடியில் பகுக்கை சமைப்பதும், கவித்துவமான உணர்வுகளை உருவாக்குகின்றன.

கவித்துவத்திற்கு எதிரான விஷயங்களைக் கடந்து, கவித்துவத்தை இவர் ஆள்வார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் "வேலிக்கு மேல் வளர்ந்து தலைநீட்டிய தளிர் நான்" என்று இவர் இரு கவிதையில் எழுதியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x