Last Updated : 24 Jul, 2016 12:34 PM

 

Published : 24 Jul 2016 12:34 PM
Last Updated : 24 Jul 2016 12:34 PM

தி இந்து நாடக விழா 2016: களமிறங்கும் தமிழ் நாடகங்கள்

சென்னையில் ஆங்கில நாடகங்களுக்கான ஒரு களத்தை தி இந்து நிறுவனம் ஆண்டு தோறும் அமைத்துத் தருகிறது. இதற்காக தி இந்து நடத்தும் ‘தியேட்டர் ஃபெஸ்ட்’ 2005-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு இந்த விழாவில் முதல் முறையாகத் தமிழ் நாடகங்களும் இடம்பெறுகின்றன. ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கும் இத்திருவிழாவில் 21-ம் தேதிவரை ஆங்கில நாடகங்களும், ஆகஸ்ட் 26-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை தமிழ் நாடகங்களும் நடைபெறுகின்றன. ‘வண்டிச்சோடை’, ‘முந்திரிக்கொட்ட’, ‘ஆயிரத்தியோரு இரவுகள்’ ஆகியவை தமிழில் இடம்பெறும் நாடகங்கள்.

தமிழ் நாடக ஆளுமையும், கூத்துப்பட்டறையின் நிறுவனருமான ந. முத்துசாமி 1968-ல் எழுதிய ‘வண்டிச் சோடை’ என்னும் நாடகம் முதன்முறையாக அரங்கேற இருக்கிறது. “இந்த நாடகம் அடித்தட்டு தொழிலாளர்களின் வாழ்வை விவாதிக்கிறது; குரு-சிஷ்ய உறவு குறித்த சில கேள்விகளையும் எழுப்புகிறது. சில குருக்கள், தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் சிஷ்யர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் சில ரகசியங்களைத் தனக்குள்ளே தக்கவைத்துக்கொள்வார்கள். இதனால் மாணவர்கள் அறியாமையில் உழல்வதை இந்நாடகம் சுட்டுகிறது. இந்திய மருத்துவப் பின்னணியில் ந.முத்துசாமி இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்” என்கிறார் இந்நாடகத்தில் நடிக்கும் பிரசன்னா ராம்குமார். ஆர்.பி. ராஜநாயஹம் இந்த நாடகத்தை இயக்குகிறார்.

இவ்விழாவில் இடம்பெறும் மற்றொரு நாடகமான ‘முந்திரிக்கொட்ட’ நாடகத்தின் ஆசிரியர் சுனந்தா ரகுநாதன். “பன்னிரண்டு வயது கருப்பண்ணசாமி என்கிற ‘கேபி’யைப் பற்றிய கதையை இந்த நாடகம் சொல்லும். ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவனுக்கும் சமூகத்துக்குமான உறவை இந்நாடகம் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது” என்கிறார் சுனந்தா ரகுநாதன். இந்நாடகத்தை அனிதா சந்தானம் இயக்குகிறார்.

‘ஆயிரத்தியோரு இரவுகள்’என்ற நாடகம் பார்வை யாளர்களின் இறுக்கத்தைத் தளர்த்திச் சிரிக்கவைக்கும் தன்மை கொண்டது. ‘அரேபிய இரவுகள்’ கதைகளைத் தழுவி இந்த நாடகத்தை நகைச்சுவையாக எழுதி, இயக்கியிருக்கிறார் வினோதினி வைத்தியநாதன்.

தமிழ் நாடகங்கள் நடைபெறும் இடம்: அருங்காட்சியக அரங்கம் (Museum Theatre), எழும்பூர்

ஆங்கில நாடகங்கள் நடைபெறும் இடம்:

சர் முத்தா வேங்கட சுப்பாராவ் ஹால், ஹாரிங்கடன் சாலை, சேத்பட்

நிகழ்ச்சிகள்:

ஆகஸ்ட் 19 - டியர் லயர் (Dear Liar)

ஆகஸ்ட் 20 - யடாகாரசு (Yatagarasu)

ஆகஸ்ட் 21 - தி காட் ஆஃப் கார்னேஜ் (The God of Carnage)

ஆகஸ்ட் 26 - ஆயிரத்தியோரு இரவுகள்

ஆகஸ்ட் 27 - முந்திரிக்கொட்ட

ஆகஸ்ட் 28 - வண்டிச்சோடை

‘தி இந்து தியேட்டர் ஃபெஸ்ட்’ நாடகங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டுகளுக்கு : thehindu.com/tickets2016

மேலும் தகவல்களுக்கு: thehindu.com/theatrefest

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x