Published : 25 Sep 2014 10:34 AM
Last Updated : 25 Sep 2014 10:34 AM
நின்று கொல்லும் நீதி
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை கடற்கரையில் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு புத்தகப் பரிமாற்றம் என்ற அரிய நிகழ்வு நடைபெற்றது.
ஒவ்வொருவரும் தான் படித்து முடித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைக் கொண்டுவந்து கடற்கரையில் போடப்பட்டிருந்த பெரிய மேஜையில் போடச் சொன்னார்கள். அவற்றில் எது நாவல், எது கட்டுரை, சிறுகதை, வரலாறு, மொழிபெயர்ப்பு என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வகைமைப் பிரித்து தனியே அடுக்கி வைத்துக்கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. அது முடிந்தவுடன் பார் வையாளர்கள் யார் வேண்டுமானாலும், தனக்கு விருப்பமான ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை அந்த மேஜையில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார்கள்.
இந்தப் புத்தகப் பரிமாற்ற நிகழ்வின் மூலம் முந்நூறுக்கும் மேற்பட்ட புத்தகங் கள் ஒருவருக்கொருவர் கைமாறின. இதுபோன்ற ஒரு நிகழ்வினை தமிழகம் முழுவதும் நடத்தினால், எத்தனையோ வீடுகளில் தேங்கிப் போய் கிடக்கும் புத்தகங்கள் பரிமாற்றம் கொள்ளும்தானே?
படித்து முடித்து, வேண்டாம் என நினைக்கிற புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ள புத்தக வங்கி ஒன்றை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கு யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் தரலாம். யாருக்குப் புத்தகம் தேவையோ, அவர்கள் இலவசமாக அந்த வங்கியில் இருந்து புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அல்லது கிராமப்புற மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம்.
இதற்குத் தேவை ஓர் அறையும், பொறுப்பாளர் ஒருவர் மட்டுமே. புத்தகப் பரிமாற்றம் என்பது ஒரு அறிவியக்கம் போல விரிவடைய தொடங்கும்போதுதான் வாசிப்பு பரவலாகும். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 570 பொறியியல் கல்லூரிகள், 566 கலை - அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில், எத்தனைக் கல்லூரி வளாகங்களில் புத்தகக் கடை இருக்கிறது?
நோட்டு - பாடப் புத்தகங்கள் விற்கும் ஸ்டோர், வங்கி, கேன்டீன் ஆகியவற்றைப் போல, ஏன் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு புத்தகக் கடை திறக்கக் கூடாது? கல்லூரி நிர்வாகமே அதற்கு முனைப்பு காட்டலாம்தானே? பாடப் புத்தகங்களுக்கு வெளியே கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூகவியல் போன்ற துறைகள் சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், வாங்கிப் பயன் அடையவும், இதுபோன்ற புத்தகக் கடைகள் பெருமளவு உதவும்தானே?
பொதுவாக விளையாட்டு, இசை, நுண்கலை போன்றவற்றில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கு இங்கே தனி கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், புத்தக வாசிப்பைத் தூண்டும், அதிகப்படுத்த உதவும் புக் கிளப், தரமான புத்தகக் கடை, புத்தகக் காட்சி போன்றவற்றில் எந்தக் கல்வி நிறுவனமும் ஆர்வம் காட்டுவதே இல்லை.ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங் களில் பயிலும் மாணவர்கள், தங்களுடைய ஓய்வு நேரத்தை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் படித்துக் காட்ட உதவுகிறார்கள்.
பார்வையற்றோர் மையத்தில் போய் கண் தெரியாதவர்களுக்குப் புத்தகம் படித்துக் காட்டுகிறார்கள். சிறார்களுக்கு கதை சொல்கிறார்கள். நமது கல்வி நிலையங்களில் இதுபோன்ற புத்தக வாசிப்புத் தொடர்பான சேவைகள் எங்கேயும் நடைபெறுவதாக நான் கேள்விப்படவே இல்லை. அமெரிக்காவின் முக்கிய நூலகங் களில் பயன்படுத்திய புத்தகங்களை வாரம் ஒருமுறை ஒரு டாலர், இரண்டு டாலருக்கு என மலிவு விலையில் விற் பனை செய்கிறார்கள். கலைக்களஞ்சியம் தொடங்கி நவீன நாவல்கள் வரை அத்தனையும் கிடைக்கிறது அங்கே. யார் வேண்டுமானாலும் அதை வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் எந்த நூலக மும் அப்படி ஒரு விற்பனையை நடத்தி நான் கண்டதே இல்லை.
நூலகம் டாட் ஓஅர்ஜி ( >noolagam.org) என்ற இணையதளத்தில் பெரும்பான்மை யான ஈழ எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கின்றன. தமிழில் இதுபோன்று பழந்தமிழ் நூல்களைப் பகிர்ந்துகொள்ள ‘மதுரை திட்டம்’ என்ற இணையதளம் உதவுகிறது. ‘குட்டன்பெர்க்’ என்கிற ஆங்கில இணையதளத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல்வேறு துறைச் சார்ந்த ஆங்கிலப் புத்தகங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இவை எல்லாம் புத்தகப் பகிர்வு எவ்வளவு முக்கியமானதொரு சாளரம் என்பதன் அடையாளங்கள் ஆகும்.
கடற்கரையில் நடைபெற்ற புத்தகப் பரிமாற்றத்தைப் பற்றி சொன்னேன் இல்லையா? அங்கே எனக்குக் கிடைத்த ஆங்கில நூல் மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ். சர் சார்லஸ் லாசன் என்பவர் எழுதியது. 1905-ம் ஆண்டு லண்டனில் வெளியாகி உள்ளது. மதராஸின் கடந்த கால வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான நூல் இது. சார்லஸ் லாசன், மெட்ராஸ் மெயிலின் ஆசிரியர். 1830-களில் சென்னையில் இரண்டே நியூஸ் பேப்பர்கள்தான் இருந்தன. ஒன்று, ‘தி ஸ்பெக்டேடர்’, மற்றது ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’.
இரண்டு பத்திரிகைகளும் ஆங்கிலேயர்கள் நடத்தியது. இதில், மெட்ராஸ் டைம்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் லாசன். அதிலிருந்து விலகி, 1868-ல் அவர் மெட்ராஸ் மெயிலைத் தொடங்கினார். வணிகர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்த லாசன், மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 1887-ல் இங்கிலாந்துக்குச் சென்று விக்டோரியா ராணியைச் சந்தித்த லாசன், அவரது புகழ் பாடி, ‘சர்’ பட்டம் பெற்றிருக்கிறார்.
இவர், சென்னை நகரின் வரலாற்றை மெட்ராஸ் மெயிலில் தொடராக எழுதினார். அந்தத் தொகுப்பே இந்த நூலாக உருமாறியது. இந்நூல் சென்னையை ஆட்சி செய்த கவர்னர்களையும் அவர்களின் செயல்பாட்டினையும் விவரிக்கிறது. இதில் இரண்டு விஷயங்கள் எனக்கு முக்கியமாகப்பட்டன.
சர் பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் இருவரும் 1639-ல் சென்னப் பட்டினத்தை விலைக்கு வாங்கி, கோட்டையுடன் கூடிய புதிய நகரை உருவாக்க தொடங்கினார்கள் என்பதை நாம் அறிவோம், மதராஸின் முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் என புகழப்பட்ட ஆண்ட்ரூ கோகன் மீது, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகம், கலகம் மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணை ஒன்றினை நடத்தத் திட்டமிட்டது.
அவர் லண்டன் சென்று கிழக்கிந்திய கம்பெனி யின் இயக்குநர்களில் ஒருவரான தனது மாமனாரின் உதவியை நாட, அவரின் தயவால் தற்காலிகமாகத் தப்பித்தார். அப்படியும் பிரச்சினை அவரை விடவில்லை. சில ஆண்டுகளில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அதன் முடிவில் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு தண்டனை பெற்று வறுமையில், புறக்கணிப்பில் தனிமையில் வாடி ஆண்ட்ரூ கோகன் இறந்து போனார் என்பதை லாசன் சுட்டிக் காட்டுகிறார்,
இன்று நாம் பிரிட்டிஷார் அறிமுகம் செய்த ஆங்கிலவழிக் கல்வியை உயர்த்திப் பிடிக்கிறோம். ஆனால், 1787-ல் சென்னைக்கு வந்த டாக்டர் ஆண்ட்ரூ பெல், சென்னை எக்மோரில் செயல்பட்ட அநாதைகள் காப்பகத்தில் கல்விப் பணியாற்றியபோது, தான் கற்றுக்கொண்ட கல்வி முறையை இங்கி லாந்துக்கு எடுத்துச் சென்று, ‘மெட்ராஸ் சிஸ்டம்’ என்று அறிமுகம் செய்து பிரபமலமாக்கியுள்ளார். அந்த வரலாற்று நிகழ்வை இந்நூல் விவரிக்கிறது.
‘மெட்ராஸ் சிஸ்டம்’ என்பது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதாகும். அத்துடன் வகுப்பில் படிக்கும் சிறந்த மாணவனைக் கொண்டு மற்ற மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் முறையாகும். சட்டாம்பிள்ளை என அழைக்கப்படும் புத்திசாலி மாணவன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவான். இப்படி ஆசிரியர், சட்டாம்பிள்ளை இருவரும் இணைந்து கற்பிக்கின்ற காரணத்தால் படிப்பு எளிதாக அமைந்தது.
இந்த முறையை ஆண்ட்ரூ பெல் இங்கிலாந்தில் அறிமுகம் செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இவர் மதராஸ் மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கிலாந்தில் தான் வாங்கிய பண்ணைக்கு எக்மோர் என பெயரிட்டிருக்கிறார். ஆண்ட்ரூ பெல் 13 பள்ளிகளை நடத்தியிருக்கிறார். இந்தப் பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் 230 பள்ளிகளில் ‘மெட்ராஸ் சிஸ்டம்’ பரவியது.
மெட்ராஸ் கல்விமுறையைப் பற்றி ஆண்ட்ரூ பெல் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். ‘நமது கல்விமுறை இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு நமக்கு மறந்துபோய், அவர்களுடைய கல்வியை நாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்’ என்பது காலக்கொடுமை.
சென்னையை ஆண்ட பிரிட்டிஷ் கவர்னர்களின் வரலாற்றை ஒருசேர வாசிக்கும்போது, ‘சுயலாபங்களுக்காக நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் முடிவில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தார்கள்’ என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. நின்று கொல்லும் நீதி என்பது இதுதானோ?
- வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT