Published : 29 Jul 2016 11:05 AM
Last Updated : 29 Jul 2016 11:05 AM

ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன்

சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?



அசைவு

திங்கள்

கிழமை போய்விட்டது

செவ்வாயும் போய்விட்டது

கோல வாசலைப்

புதனின் வெயில் உலர்த்துகிறது.

இன்னும் உன்னை நான்

பார்த்த பாடில்லை, ஞானாட்சரி

ஒருபகல் ஒருராத்திரி மீண்டும்

ஒருபகல் ஒருராத்திரி கடந்தால்

அடையப் பெறும் ஒரு நகரம் போல

ஆகிவிட்டாய் நீ ஞானாட்சரி

ஒரு வாகனம் போல என் சரீரம்

உன்னை நோக்கி நகர்கிறது

அறிவாயோ நீ ஞானாட்சரி



கீழ்வெண்மணி

மல்லாந்த

மண்ணின் கர்ப்ப

வயிறெனத் தெரிந்த கீற்றுக்

குடிசைகள் சாம்பற் காடாய்ப்

போயின

புகையோடு விடிந்த போதில்

ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்

குழந்தைகள் இவைகள் என்றார்

பெண்களோ இவைகள்? காலி

கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலோ பொசுக்கப்பட்ட

அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க





காலவழுவமைதி

“தலைவரார்களேங்…

தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்

தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்

கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்

காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?

கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற

பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?

தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்

கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே

நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்

நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்

தலைவரார்களேங்

பொதுமாக்களேங் நானின்னும்

யிருகூட்டம் பேசயிருப்பதால்

வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்

அமைதி… அமைதி…



மரவட்டை

ஊர்ந்து

செல்கிறது மெல்ல மெல்ல

செந்நிறமான நீள் மரவட்டை

ஓரிடத்தை எதனாலோ விட்டுவிட்டு

எங்கேயோ செல்கிறது. பரபரப்பாய்.

போகட்டும் பையா மரவட்டை அதன்

துக்குணிக் கால்களைப் பரவிக் கொண்டு

தடைகள் அங்கங்கே ஏற்பட

சுருண்டு கொள்கிறது அச் சீவன்.

தீண்டாதே பையா அதனை. தொட்டால்

சுருண்டு கொள்ளும் பயந்தபடி.

வட்டமாய்ச் சுருண்டு கிடக்கும் அப்போது

என்னென்ன தோன்றுமோ அதன் மனதில்?

தொடாதே பையா, நீ அதனை

தொட்டால் சுருண்டு பின் உடம்பை

நீட்டும் போதில் ஒருவேளை

மறக்கக் கூடும் தன் மார்க்கத்தை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x