Published : 02 Jul 2016 10:29 AM
Last Updated : 02 Jul 2016 10:29 AM
வானவில்போல பல வண்ணமுள்ள இந்திய சமூகத்துக்கான சுதந்திரப் போராட்டத்தை நடத்திய தலைவர்களின் குறிக்கோள்களும் வானவில் போல பல வண்ணமுள்ளவையே. தலித் மக்களுக்காகவே அம்பேத்கர் தன் வாழ்க்கை, கல்வி, சிந்தனை என்று எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொண்டார். அதே நேரத்தில், தலித் மக்களுக்காக காந்தி ஆற்றிய பணிகளையும் நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பாக, அம்பேத்கரின் குரல் ஒலித்தது. அந்தக் குரலில் தொனித்த கடும் கோபத்துக்கு எல்லாவிதமான வரலாற்று நியாயமும் இருந்தது. அதேபோல், சாதி ஒடுக்குமுறைகளுக்கு யார் காரணமோ அவர்களின் மனசாட்சியை நோக்கிப் பேசிய குரலாக காந்தி இருந்தார். ஆதிக்க சாதியினரைத் தங்கள் தவறுக்கு வருந்தச் செய்து, அவர்களைத் தலித் மக்களுக்காகப் பாடுபட காந்தி தூண்டினார். புனா ஒப்பந்தத்துக்குப் பிற்பட்ட 15 ஆண்டு காலத்தில் சுதந்திரப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு காந்தி முக்கியத்துவம் தந்தாரோ அதே அளவுக்குத் தீண்டாமை ஒழிப்புக்கும் முக்கியத்துவம் தந்தார். காந்தியைப் பாரபட்சமாக விமர்சித்து அருந்ததி ராய் சமீபத்தில் எழுதிய முன்னுரை ஒன்றில் அவரும் இதை ஒப்புக்கொள்ளவே செய்கிறார்.
அம்பேத்கர்-காந்தி இருவரும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக இரண்டு திசைகளிலிருந்து பாடுபட்டவர்களே. ஒருவர் அரசியல்ரீதியிலான மாற்றமே சரி என்று நினைத்தவர்; இன்னொருவர் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று முயன்றவர். இரண்டும் முக்கியமான பார்வைகளே என்றாலும் இரண்டு இணைந்திருந்தால் இந்தியாவில் மகத்தான மாற்றம் ஏற்பட்டிருந்திருக்கும், அப்படி இணையாதது நம் துரதிர்ஷ்டமே.
புனா ஒப்பந்தம் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்புகளால், நடுநிலைமை இல்லாமல் விமர்சனம் செய்யப்பட்டுவந்திருக்கிறது. ஒருவரை எதிரியாக்கி மற்றொருவரைக் கதாநாயகராகக் காட்டும் முயற்சிகளே அதிகம். இதில் காந்திதான் அதிகம் ‘எதிரி’யாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். காந்தியை எதிரியாகப் பார்க்கும் பார்வையை மாற்றும் முயற்சியாக முருகு. இராசாங்கத்தின் இந்த நூல் அமைந்திருந்தாலும் அதுவும் பெரிய தவறொன்றைச் செய்துவிடுகிறது. ஆம், அம்பேத்கர், பெரியார் போன்றோரை ‘எதிரி’களாக இந்த நூல் கட்டமைத்திருக்கிறது.
காந்தியின் கருத்துகளுக்குச் சரியான ஆதாரங்களைப் பல இடங்களில் ஆசிரியர் எடுத்து வைக்கிறார். பலரும் ஆதாரமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு ‘காந்தி துரோகமிழைத்துவிட்டார்’ என்று சொல்வதை ஆசிரியர் ஆதாரங்களுடன் தகர்க்கிறார். இருந்தும் இறுதியில் அம்பேத்கரை எதிரியாக நிறுவ முயல்கிறார். அதைத் தவிர்த்து இரு தரப்பிலும் உள்ள நியாயங்களையும் பிழைகளையும் மட்டுமே சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். முக்கியமான ஒரு நூல் இது!
புனா ஒப்பந்தம்:
புதைக்கப்பட்ட உண்மைகள்
விலை: ரூ.150
முருகு.இராசாங்கம்
வெளியீடு: செங்குயில் பதிப்பகம்
கும்பகோணம்- 612002
தொடர்புக்கு:9443524166
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT