Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவராகப் பயின்ற காலத்தில் ஆங்கில மொழிப் பேராசிரியரும், கல்லூரித் தலைவருமான மில்லர், ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் ‘ஆர்தரின் இறுதி’ கவிதை நூலைப் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, அதில் வரும் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்
“So said he, and the barge with oar and sail,
Moved from the brink, like some full- breasted swan”
ஆர்தர் அரசன் இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் மனைவியரோடு அவனை ஒரு அழகிய படகில் வைத்து நதியில் செலுத்திவிடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் படகு, நதியில் அழகாக செல்லுகின்ற காட்சியையே மேலே காட்டிய இரண்டடிகளும் வருணிக்கின்றன. அந்தப் படகு தனது துடுப்புகளை ஆட்டி அசைத்துக்கொண்டு நதியில் மிதந்து செல்வது ஒரு அழகிய அன்னப்பறவை தனது சிறகுகளை விசிறிக்கொண்டு நீரில் நீந்துவது போல் தோன்றுகிறது புலவனது அகக் கண்களுக்கு.
இதுமாதிரியான கற்பனை தமிழில் எங்கேயாவது உண்டா என்று அறிந்துகொள்ள விரும்பிய மில்லர், பரிதிமாற் கலைஞரைப் பார்த்து, “தமிழ் பற்றி எப்பொழுதும் பெருமையாகப் பேசுகிறோயே, டென்னிசனின் மேற்கண்ட கற்பனை போல் தமிழில் உண்டா?” என்று கேட்டார்.
பரிதிமாற் கலைஞர், தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்று உடனடியாகப் பதில் சொன்னார். எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இந்த உவமை எடுத்தாளப்பட்டிருக்கிறது என்றார். அயோத்தியா காண்டம் குகப்படலத்தில் இராமன், சீதை, இலக்குவன், குகன் ஆகியோர் கங்கை நதியைக் கடக்கும் காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது.
முடுகினன் நெடுநாவாய், முரிதிரை நெடு நீர் வாய்
கடிதினின் மட அன்னக்கதி அது செல…
பரிதிமாற் கலைஞர் மேற்கண்ட கம்பன் வரிகளைக் கூறியவுடன் புதையல் கண்டவரைப் போல மில்லர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அன்னப் பறவை நீரில் செல்வது போல படகு சென்றது என்ற கம்பனின் கற்பனை அப்படியே பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் வரிகளில்.
என்ன அபூர்வ ஒற்றுமை.
ஆதாரம்: பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT