Published : 21 Jan 2017 10:14 AM
Last Updated : 21 Jan 2017 10:14 AM
இலக்கியம் படிக்கும் மாணவர்களிடம் “இதைப் படித்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்பார்கள். இதர பாடங்களைப் படிப்பவர்கள் போல், “நான் பொறியாளராவேன், மருத்துவராவேன்” என்றெல்லாம் சொல்ல முடியாது. “நமக்குத் தொழில் கவிதை” என்று பாரதியைப் போல் தனக்கும் இலக்கியத்துக்கும் சேர்த்து ஒரு தொழில் உயர்ச்சியைச் சமுதாயத்துக்குப் பிரகடனம் செய்ய எல்லாராலும் முடியுமா? இப்படி, மற்றவர்களுக்கு எப்போதுமே ஏற்படாத தத்துவ நெருக்கடி இலக்கிய மாணவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.
பயனில்லாத இலக்கியம் இதர பாடங்களின் நேரத்தை வீணாக்குகிறது என்பதும் சில கல்வியாளர்களின் நிலைப்பாடு. ‘பயன்’ என்றால் என்ன என்று அறிவியலை மட்டுமே வைத்து விளங்கிக்கொள்ள முடியாது என்பது அறிவியலாளர்களுக்கே தெரியும்.
இலக்கியத்துக்கு உண்மையான கேடு அதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் இருக்கிறது. அது அறிவியலைப் போல், உளவியலைப் போல், வரலாற்றைப் போல் உண்மையின் சாயலையாவது பெற்றால்தான் பயனுள்ளதாகும் என்பது சிலரின் முடிவு. அறிவியலின் சிந்தனை முறைதான் தானும் போக வேண்டிய தடம் என்று இலக்கியச் சிந்தனையும் அதிலேயே பயணிக்கிறது.
புறநானூற்றின் திணைகள் ஐந்து, பதினொன்று, பத்து. இவற்றில் எது சரி? இது பாடப் புத்தகத்தில் உள்ள மாதிரி வினா. தன் பாதையில் பயணிக்கும் பூமியின் வேகம் வினாடிக்கு 25 கி.மீ., 28 கி.மீ., 30 கி.மீ. இதில் எது சரி? இந்த வானவியல் கேள்விக்கும் புறநானூறு பற்றிய கேள்வியின் வடிவமைப்புக்கும் என்ன வேறுபாடு? மொழியில் இருக்கும் மற்றவற்றைப் படிப்பதற்கும் அதில் உள்ள இலக்கியத்தைப் படிப்பதற்கும் வழிமுறைகளில், நோக்கத்தில் வேறுபாடே இல்லை என்பதுபோல் கற்றலும் கற்பித்தலும் தேர்வு முறையும் இருக்கின்றன. அறிவியலை அறிவியலாக்குவது எதுவோ அதுவேதான் இலக்கியத்தை இலக்கியமாக்குகிறது என்பது தவறான அனுமானம்.
அன்றைய வரலாறு, வாழ்கை முறையைப் புறநானூற்றால் அறியலாம் என்று சொல்வது வழக்கம். இதையே, “இலக்கியத்தை இலக்கியமாகப் படிக்கக் கூடாது. அதை வேறு எதுவாக வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம்” என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இலக்கியப் படைப்புக்குள்ளே இருக்கும் வாழ்க்கை அதற்கு வெளியே இருக்கும் அன்றாட வாழ்க்கையின் நீட்சியல்ல. “வருவார், அழைத்து வாடி” என்று வள்ளலார் பாட்டு ஒன்று உண்டு. ஆனால், சென்று அழைக்கவும் வரவும் யாரும் இருப்பதில்லை. இலக்கிய மொழியும் இதர பாடங்களின் மொழியும் ஒன்றேயல்ல.
ஒரு மலரின் இதழ்களை எண்ணி அறியும் தன்மையிலுள்ள ஒரு அறிவுக்காகத்தான் இலக்கியத்தையும் படிக்கிறோம் என்பது தவறு. இப்படிச் சிந்திக்கப் பழகியிருப்பதால் இலக்கியத்தில் உண்மையைத் தேடுகிறோம். புனைவுத்தன்மைதான் இலக்கியத்தை இலக்கியமாக்குகிறது. புனைவாக அடையாளம் காட்டிக்கொண்டுதான் இலக்கியப் படைப்பு தன் இருப்பையே தொடங்குகிறது. புனைவு என்றால் பொய் அல்ல, விவர உண்மைக்கு மேம்பட்ட உண்மையைக் கொண்டிருப்பது.
குறுந்தொகைப் பாட்டு ஒன்று பள்ளியில் பாடம். தன்னை மணந்து பிரிந்து சென்ற தலைவன் வரவில்லை. தூதும் வரவில்லை. அவர்கள் மணந்தபோது மீனைத் தேடிக்கொண்டிருந்த நாரை மட்டுமே அங்கு இருந்தது. இப்போது என்ன செய்வேன் என்று தலைவி சஞ்சலப்படுவதாகப் பாட்டு. ‘சாட்சியாக இருந்தது எது?’, ‘அது ஏன் பயன்படாது?’ என்பவை புத்தகத்தின் மாதிரி வினாக்கள். சாட்சியும் இல்லையே, இருந்த நாரையும் வாய்பேசாதே என்று தலைவி வருந்துவது பாட்டின் சங்கதி அல்ல. இலக்கியத்தில் உண்மை வேட்டைக்கு இறங்குபவர்கள்தான் இப்படி நினைத்து அதை இந்திய சாட்சியச் சட்டத்தில் உரைத்துப் பார்ப்பார்கள். யாரைக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறேன் என்ற நிலையில் அந்தத் தலைவி. இலக்கிய மரபில் உண்மையைத் தேடுவது இலக்கியம் படிப்பதாகாது.
புனைவை மெய்யாக எடுத்துக்கொள்ளும் விபரீதம் புதிதல்ல. இறையனாரின் பாட்டுக்குத்
தருமி பரிசு பெற்றதாகப் புராணம். “பூக்களி
லேயே புழங்கும் வண்டே, என் தலைவியின் கூந்தலைவிட மணமுள்ள மலரை நீ அறிவாயோ?” என்பது பாடல் கேட்கும் கேள்வி. இது இலக்கிய மரபின் புனைவு. கூந்தலுக்கு மணம் என்பது பொய் என்று வாதிடுவார் நக்கீரர். இலக்கியப் புனைவை உண்மை என்று எடுத்துக்கொள்ளும் தவற்றை எல்லாருக்கும் முன்பாகச் செய்தவர் அநேகமாக நக்கீரராக இருக்கலாம். (இது புனைவுக்குள் வரும் தவறு!). இப்படிச் செய்யும் ஒரு மரபுக்கு அவர் குறியீடாகவும் இருந்திருக்கலாம். அவர் ஒரு இலக்கிய மரபை விமர்சிக்கிறார். இதற்கு இணையான நிகழ்வு ஒன்று ஆங்கில இலக்கிய உலகில் உண்டு. ஒரு புனைவு மரபை உண்மை என்று எடுத்துக்கொண்டு மில்டனின் ‘லிசிடஸ்’ கவிதையை ஜான்சன் குறை கூறினார்.
‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் ராஜராஜன் வரலாற்றில் இருக்கும் ராஜராஜன் அல்ல. இரண்டு ராஜராஜன்களும் அப்படியே அசலாக ஒத்துப்போவதாக அந்த நாவலில் எங்காவது இருந்தால் நாவலாசிரியரின் புனைவுத் திறமை அப்போது சளைத்துப்போனதால் வந்த ஒற்றுமையாக இருக்கும். நான் இப்படிச் சொன்னால் நாவலின் ஆசிரியர் கல்கியையோ, அந்த நாவலையோ குறைத்துப் பேசுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. வரலாற்று நிகழ்வுகளைப் புள்ளிகளாக இட்டு, தலைமுறைகள் மோகித்துக் கிடக்கும்படி கல்கி இழைத்துவைத்த ஆயிரம் புள்ளிப் புனைவுக் கோலம் அந்த நாவல். அவரது சாதனை, கழிக்க வேண்டிய சங்கதிகளைக் கழித்து, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து வரலற்றைக் காவியப் புனைவாக மாற்றியதுதான்.
அறிவியல் மரபுச் சிந்தனையால் மனித அறிவுக்கு வருவது ஒரு ஆதாயம். அதற்கு வரும் மற்றொரு ஆதாயம் இலக்கியப் புனை
வாக நிகழும் சிந்தனை. இரண்டும் ஒன்று என்பது இல்லை. எதிரெதிரானது என்பதும் இல்லை. இரண்டும் ஒரே சிந்தனை மரபாக இல்லாமலிருப்பது மனவளச் சாத்தியம் என்ற மறு கரை தெரியாத பெருங்கடலின் அடையாளம்.
- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது…’
என்ற நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT