Last Updated : 02 Nov, 2014 12:47 PM

 

Published : 02 Nov 2014 12:47 PM
Last Updated : 02 Nov 2014 12:47 PM

ஒரு நினைவகமும் ஒரு தற்கொலையும்

அமெரிக்காவின் பெரு நகரங்களில் ஒன்றான சிகாகோவின் பெரும் செல்வந்தர்கள் வாழும் மிக அழகிய இடம் ஓக் பார்க். அங்கு இருக்கிறது பிரபல அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் அருங்காட்சியகமும் அவர் பிறந்த வீடும். அந்தப் பிரமிப்பூட்டும் நினைவகத்தைப் பற்றி சிகாகோ சுற்றுலாப் புத்தகங்களில் எந்த விவரமும் இல்லை. இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே வலைதளத்தில் தேடிப் பிடித்துத் தெரிந்துகொள்ள நேரும் விஷயம்.

ஒரு எழுத்தாளரைப் பற்றிய அத்தனை நேர்த்தியான அருங்காட்சியகத்தை நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை. ஸ்டாட்ஃபர்ட் அபான் ஏவனில் உள்ள ஷேக்ஸ்பியரின் வீட்டைப் பார்த்திருக்கிறேன். அது அவர் வாழ்ந்த வீடு, புழங்கிய பொருள்கள் என்கிற பிம்பத்தை மட்டுமே சொன்னது; டால்ஸ்டாய் வாழ்ந்த யாஸ்னயா போல்யானா எஸ்டேட்டில் இருக்கும் வீடு, ஹெமிங்வே அருங்காட்சியகம் ஏற்படுத்திய நெகிழ்வை ஏற்படுத்தவில்லை. பிராஹாவில் பார்த்த காஃப்காவின் வீடு அமரிக்கையானது. ஹெமிங்வேயின் நினைவகம் அமர்க்களம், அவர் வாழ்ந்த வாழ்வைப்போல. இதில் இருக்கும் உயிரோட்டம் அவை எதிலும் இல்லை.

எர்னெஸ்ட் ஹெமிங்வே

குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை

வசதிபெற்ற குடும்பத்தில் பிறந்த ஹெமிங்வேயின் குழந்தைப் பருவம், பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பித்து புகைப்படங்கள் ரூபத்தில் அவர் முதலாம் உலகப் போரில், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஏதோ ஒரு வகையில் (செஞ்சிலுவை வண்டியின் ஓட்டுநராக, பத்திரிகையாளராக) பங்குகொண்டு பெற்ற அனுபவங்கள், அதிலிருந்து ஆரம்பித்த அவரது எழுத்துப் பயணம், நாவல்கள் பிறந்த விவரம், அவரது காதல்கள், அவரது சூரத்தன சாகசங்கள், பெற்ற விருதுகள் (நோபல் விருது உட்பட) என்று அவரது இறப்பு வரை (1899-1959) மிகுந்த அக்கறையுடன் உண்மையான நேசத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

அவரது எழுத்தின் மீதும் அவரது ஆளுமையின் மீதும் அமெரிக்க மக்கள் கொண்டிருந்த பிரமிப்பைப் பிரதிபலிக்கும் ஆவணங்களாக - அங்கங்கே அவரது வரிகள் - அவரது பிரபல நாவல்களிலிருந்து - அவருக்கு நோபல் பரிசையும் புலிட்சர் பரிசையும் பெற்றுத்தந்த The Old man and the sea, மற்றும் Farewell to arms, The sun also rises, For whom the bell tolls போன்ற புத்தகங்களிலிருந்து சிந்தனையைத் தூண்டும் வரிகள் சுவரில், பலகைகளில் பொறிக்கப்பட்டிருப்பது ஹெமிங்வே அங்கிருந்து பேசுவது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

ஹெமிங்கவேயின் எழுத்து

அது வரை எழுத்தாளர்கள் பிரயோகித்த ‘விக்டோரியன்’ எழுத்து நடையிலிருந்து அவர் விலகினார். அலங்கார வார்த்தைகளை அவர் வெறுத்தார். பூடகமாக எழுதுவது நல்ல எழுத்தில்லை; சின்ன வாக்கியங்கள் கொண்ட எளிமையான நேரிடை எழுத்தே சிறந்த எழுத்து என்றார். அவரது எழுத்து புதிய அலைபோல எடுத்த எடுப்பிலேயே அமெரிக்க மக்களை ஆகர்ஷித்தது. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்க எழுத்தாளர் என்கிற புகழை அளித்தது.

அவரது பல நாவல்கள் சினிமா படங்களாக்கப்பட்டன. அவை பரவலாக வெற்றிபெற்றாலும், அவருக்கு அவை எதுவும் திருப்தி அளித்ததில்லை. அவருடைய வாழ்வே சாகசம் நிறைந்ததாக இருந்தது. பெண்கள் அவரை நேசித்தார்கள். ஆணழகன், காதல் மன்னன்; நான்கு முறை திருமணம்; மிகப் பிரபலமான எழுத்தாளர்களுடன் நட்பு; ஸ்பானிய காளைச் சண்டையில் ஈடுபடுதல்; வேட்டை ஆடுதல், கடல் கேளிக்கைகள் என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டுப் பலமுறை மரண வாயிலுக்குச் சென்றவர்.

மரணம் என்ற ஐதீகம் அவரைக் கவர்ந்தது. அவரது எழுத்தில் அதைப் பற்றின தத்துவார்த்த சிந்தனைகள் வெளிப்பட்டன. எழுத்தே ஒரு மகத்தான தத்துவம். மதக் கோட்பாடுகளின் பிடியில் இருக்க விரும்பாவிட்டாலும் அவருள் ஓர் ஆன்மிகத் தேடல் இருந்து வந்தது.

உங்கள் கலையின் பணி என்ன என்று கேட்கப்பட்டபோது, “நடந்த விஷயங்களிலிருந்து, நடைபெறும் விஷயங்களிலிருந்து, நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்களிலிருந்து உங்கள் கற்பனையிலிருந்து ஒன்றை உருவாக்குகிறீர்கள். அது இருப்பதன் பிரதி இல்லை. ஆனால், இருக்கும் நிஜத்தைவிட நிஜமான உயிர்ப்புடன் வெளிப்படும் தரிசனம். அதை நன்றாகச் செய்வீர்களானால் அது அமரத்துவம் பெறும்” என்றார்.

தற்கொலை மீதான கவர்ச்சி

புகழின் உச்சியில் மரணத்தை நாடிச் சென்றதுகூட அவரது சாகசம் நிறைந்த வாழ்வின் தர்க்கரீதியான முடிவாகப் படுகிறது. மரணத்தைத் தேடிச் செல்வது அவரது குடும்பத்தில் புதிதல்ல. எர்னெஸ்ட்டின் 28-ம் வயதில் அவருடைய தந்தை தற்கொலை செய்துகொண்டார். ‘தற்கொலைக் கவர்ச்சி’ குடும்பத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் மன அழுத்தம், விபத்துகளால் நேர்ந்த காயங்கள், அதீதமான குடிப் பழக்கத்தால் சிதைந்துபோன குடல் ஆகியவை, அவரது எழுத்தைப் பாதித்ததை உணர்ந்தபோது ஹெமிங்வே நிலைகுலைந்து போனதாக எனக்குத் தோன்றுகிறது. இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று அவர் நினைத்திருக்க வேண்டும். தமது

61-வது வயதில் ஒருநாள் காலை தனது கைத் துப்பாக்கியால் தன் நெற்றியைக் குறிவைத்துத் தற்கொலை செய்துகொண்டார். அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறியபோது என்னை ஒரு இனம்புரியாத சோகம் ஆட்கொண்டது.

- வாஸந்தி,
மூத்தப் பத்திரிகையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x